உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்

பெப்ரவரி 08

“உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்.” யோவான் 21:15

நான் எவ்வளவோ குறைவுள்ளவனாயிருந்தாலும், உம்மை அடிக்கடி துக்கப்படுத்தியும், உம்முடைய அன்புக்கு துரோகஞ்செய்தும் உம் வார்த்தைகளை நம்பாமலும், இவ்வுலகப்பொருளை அதிகமாய் பற்றிப்பிடித்தும், கொடியதும் அக்கிரமுமான கேடுபாடுகள் செய்தும், சில வேளைகளில் சாத்தானுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தபோதும் நீர் என் இருதயத்தை ஆராய்கிறீர். என் ஆத்துமாவின் அந்தரங்க கிரியைகள் எல்லாவற்றையும் பார்க்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேனா என்பதையும் நீ அறிவீர். உம்மையல்லாமல் திருப்தியடையக் கூடாத உரு வஸ்து என் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறதென்பதை நீர் அறிவீர். ஆதலால், உம்மை நினைத்து, உம்முடைய அன்பு என் உள்ளத்தில் ஊற்றப்படவேண்டுமென்று நாடி, உம் மகிமை என் ஆத்துமாவுக்குப் பிரசன்னமாக வேண்டுமென்று ஜெபித்து, எல்லாவற்றிற்கும் மேலாக நீர் என்னுடையவரென்றும் சொந்தம் பாராட்டி உம்மை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உம்மை நேசிக்கிறபடியால் என் இருதயத்தில் பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன். உம்மை நேசிக்கிறபடியால் உலகத்தை வெறுக்கிறேன். உம்மை விரும்புகிறபடியால் உமக்குப் பிரியமாய் நடக்க ஆசிக்கிறேன். எப்போதாவது உம்மை விட்டுப் பிரிந்தால் அதுதான் எனக்கு மனவருத்தம் கொடுக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.

இன்னும் உம்மை அதிகம் நேசிக்க வேண்டாமா? உம்மைத் தியானிக்கும்போது ஆத்துமா ஆனந்தத்தால் பொங்கவேண்டாமா? எப்போதும் உம்மை நேசிக்கவும் எந்த நிமிடமும் உம் அன்பைத் தியானிக்கவும் உம்மேல் ஒரு பெரிய பாசத்தை வளர்ப்பியும் கர்த்தாவே.

என் அன்பு குளிர்ந்தது
என்பதே என் துக்கம்
நேசம் பெருகச் செய்யும்
நீரே என் துருகம்.

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத். 6:34

வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல் கவனமாய்ப் பட்சமாய் காப்பாராக. அனுதின உணவுப்போல் அனுதின கிருபையும் வேண்டும். நீங்கள் தகப்பனற்றவர்களல்ல: தரவற்றவர்கள் அல்ல. உங்களை கவலைக்குள்ளாக்குகிற காரியங்கள் எதுவானாலும், அது உங்கள் பரமபிதாவுக்கு தெரியும். தேவையானதை அவ்வப்போது உங்களுக்கு தந்து கொண்டேயிருப்பார். தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்யட்டும். கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருங்கள்.

கவலைக்கு இடங்கொடாமல் இருங்கவும், வீண் சிந்தனைகளுக்கு இடங்கொடாமலிருக்கவும் கர்த்தரிடம் காத்திருந்து பொறுமையாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்ளவுமே அவர் விரும்புகிறார். இன்றிரவு நீ அமைதியாய் உன் ஆண்டவர் சொன்னதை யோசித்துப்பார். ‘முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளை தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலை;படும். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடுபோதும்.” காலையில் நீ விழிக்கும்போது உன் தேவன் உன்னோடிருப்பார். ஆறு துன்பங்களில் உன்னை விடுவித்தவர், ஏழு துன்பங்களிலும் உன்னை கைவிடார்.

ஆகவே கவலைப்டாதே.
வீட்டிலும் வெளியிலும்
இரவிலும் பகலிலும்
அவர் கரம் உன்னைப் போஷிக்கும்
அவர் கரம் உன்னை நடத்தும்.

நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.

Popular Posts

My Favorites

மரணம் தான் வாழ்க்கையின் முடிவா?

வாழ்க்கை என்ற நீடிய பயணத்திலே என்னோடு கூடி நடந்த பலரும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரிந்து செல்லுகின்றார்கள். வாழ்க்கைப் பயணத்தின் பாதைகள் எல்லாமே மலர்ப்படுக்கைகளாக அமைவதில்லை. கண்கவரும் சோலைகளையும் கடந்து செல்லுகிறேன். கண்ணீரின் பள்ளத்தாக்குகளையும்...