முகப்பு வலைப்பதிவு பக்கம் 18

நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்

செப்டம்பர் 05

“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்” ஆப. 3:18

இது நல்ல தீர்மானம். நமக்கிருக்கும் எந்தச் சூழ்நிலை மாறினாலும், மனிதர்கள் மாறினாலும் கர்த்தர் மாறாமல் இருக்கிறார். வெளிச்சம் இருட்டாயும், சாமாதானம் சண்டையாயும், இன்பம் துன்பமாயும், சுகம் வியாதியாயும் மாறினாலும் நாம் அவருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். நமக்கு சம்பவிக்கும் காரியங்கள் எப்படியிருந்தாலும் நாம் இன்னும் கர்த்தருக்குள் மகிழலாம். ஆபகூக்கைப்போல நாம் இருக்கவேண்டுமானால், கர்த்தர் நமக்குச் சொந்தமாக வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் நம்முடையதாக வேண்டும்.

அவருடைய நாமத்தைக் குறித்து நம்முடைய மனதிற்கு தெளிவான, வேத வசனத்திற்கு இசைந்த எண்ணங்கள் உண்டாக வேண்டும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது. நாம் தேவனோடு ஒப்புரவாயிருக்கிறோம். ஆகவே, அவர் நம்முடைய உத்தம சிநேகிதன் என்று உணர வேண்டும். அப்போது எக்காலத்திலும் அவரில் நாம் மகிழலாம். அவரின் நிறைவுகள்தான் நமக்குப் பொக்கிஷம். அவருடைய வல்லமை நமக்கு ஆதரவு. அவருடைய அன்பு நமக்கு ஆறுதல். அவருடைய வாக்கு நமக்குப் பாதுகாப்பு. அவருடைய சிம்மாசனம் நமக்கு அடைக்கலம். அவருடைய சமுகம் நமக்குப் பரலோகம், தேவனிடத்திலுள்ள எதுவும் நமது சுகத்தை விருத்தியாக்கும்.

அன்பானவர்களே, இந்த இரவு கர்த்தரிடத்தில் போய், அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து வந்துள்ளோம் என்று சொல்லுங்கள். நீங்கள் அவருடைய நன்மையை உணர்ந்து, அவருடைய வாக்குத்தத்தங்களை எடுத்துச் சொல்லி, அவருடைய கிருபைக்காகக் கெஞ்சுகிற சத்தத்தை அவர் கேட்கட்டும்.

தேவனே என் ஆஸ்தி
என் மகிழ்ச்சியின் ஊற்று
வறுமையிலும் அது வற்றாது
மரணத்திலும் ஒழியாது.

உன் சத்தத்தை நான் கேட்கட்டும்

செப்டம்பர் 04

“உன் சத்தத்தை நான் கேட்கட்டும்” உன். 2:14

இயேசுவானவர் தம்முடைய சபையையும் நம்மையும் பார்த்து இப்படிச் சொல்லுகிறார். நாம் அவருடைய சிங்காசனத்தண்டை சேருகிறதைப் பார்க்கவும், நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றுகிறதைக் கேட்கவும் அவர் பிரியப்படுகிறார். நீதிமான் செய்யும் ஜெபம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அது புறா கூறுகிறதுபோல் துக்க இராகமாய் இருந்தாலும் ஒன்றாய் முணங்குவதுபோல இருந்தாலும் அவருடைய செவிக்கு அது இன்பமானது. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் நாம் சலித்து விடுவதுப்போல் அவரும் சலித்து விடுவார் என்று நாம் தவறாய் நினைத்து விடுகிறோம். ஆண்டவரோ அப்படியல்ல. நான் உன் சத்தத்தை கேட்கட்டும் என்கிறார். நாம் மாட்டோமென்று சொல்லலாமா?

அவரின் பாதத்தில் போய் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய புத்தியீனத்திற்காக வருத்தப்பட்டு, மன்னிப்பை நாடி, அவருடைய அருமையான வாக்குத்தத்தங்களை எடுத்துக்காட்டி, அவரிடம் கெஞ்சி அவரிடம் இருக்கும் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கேட்டு வாங்குவோமாக. நாம் அடிக்கடி மிஞ்சி கேட்கிறோம் என்று சொல்லவுமாட்டார். தாராளமாய் நாம் அவரிடம் செல்லலாம். அடிக்கடி அவர் சமுகத்தில் வரும்படி ஏவிவிடுகிறார் செல்லாமலிருக்கும்போது நம்மைக் கண்டிக்கிறார். நம்மை அவரின் பக்கம் வரவழைக்க துன்பங்களையும் சோதனைகளையும் அனுப்புகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு ஆறுதலிலும் உன் சத்தத்தை நான் கேட்கட்டும் என்கிறார். ஒவ்வொரு துன்பத்திலும் என்னை நோக்கிப் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

இரவில் கவலை நீக்குவேன்
என்னை ஆராய்ந்துப் பார்ப்பேன்
கண் மூடும் முன்னே நான்
ஜெபத்தில் பேசுவேன்.

அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்

செப்டம்பர் 03

“அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” ஏசாயா 63:9

கர்த்தருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இருக்கும் ஐக்கியம் நெருங்கினதும் மெய்யானதுமாயிருக்கிறது. பல நேரங்களில் தேவன் தமது ஜனத்தைவிட்டு விலகினதுப்போல் காணப்படுவார். இது அவருக்கும் வருத்தத்தை உண்டாக்குகிறது. அவர்கள் தண்டிக்கப்படும் போது அவரும் சேர்ந்து துன்பப்படுகிறார். தேவ ஜனங்கள் துன்பங்களைத் தனிமையாய் அனுபவிப்பதில்லை. தேவன் எப்போதும் அவர்களோடிருந்து தகப்பன் பிள்ளைகளோடு துன்பத்தைச் சகிப்பதுபோல் துன்பத்தைச் சகிக்கிறார். வேதமும் இயேசுவானவர் எல்லாருடைய நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டாரென்று சொல்கிறது. அவர்களுக்கு வருகிற துன்பங்கள் அநேகம். இந்த அநேக துன்பங்கள் இவர்களைக் கொடிய வருத்தத்திற்குள்ளாக்குகிறது. ஆனாலும் அவர்களுடைய எல்லா வருத்தங்களிலும் அவர் நெருக்கப்படுகிறார். அவருடைய சமுகத்து தூதர்கள் இவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

அன்பான விசுவாசியே! நீ உன் மனதில் உன் சரீரத்தில் நெருக்கப்படுகிறாயா? அதைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசுவானவர் அறிக்கை உன்னோடு அனுதாபப்படுகிறார். உது சோதனைகள், பயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் அவைகளைப் பிதாமுன் வைத்து நீ இரக்கம் பெறவும். தகுந்த வேளையில் உதவிக்காக கிருபையைக் கண்டடையவும், உனக்காகப் பரிந்து பேசுகிறார். அருமையான இரட்சகரே நீர் என் சோதனைகளிலும் துன்பங்களிலும் பங்கடைந்து அவைகள் எல்லாவற்றினின்றும் மகிமையாய் என்னை விடுவிப்பீர் என்கிற சிந்தை எப்பொழுதும் என்னைத் தேற்றும்படி செய்யும்.

நம்முடைய ஆசாரியர் நமக்கு இரங்கத்தக்கவர்
நம்மோடென்றும் அவர் பாடுபடுபவர்
காயத்தில் எண்ணெய் ஊற்றி
தேற்றி இரட்சிப்பார்.

நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ

செப்டம்பர் 02

“நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ” யோனா 4:4

யோனா தேவனோடு வாக்குவாதம்பண்ணினான். இப்படி செய்யாதவன் யார்? யோனாவைப்போல நாம் வெளியே முறுமுறுக்கவில்லையென்றாலும் அவனைப்போல எரிச்சலடைகிறோம். கர்த்தர் செய்ததே சரியென்று சொல்பவர்கள் ஒருசிலரே. அவர் செய்கிற செயல்களைக் குறித்து சந்தோஷப்படுகிறவர் இன்னும் வெகு சிலரே. பலர் தேவனுடைய செயலை அவர் தம் இஷ்டம்படி செய்கிறார் என்று கோபமடைகிறார்கள். அதைக் குறித்து முறுமுறுப்பவர்கள் அநேகர். அவர் செயலைக் குறித்து முறுமுறுத்து அவர் பட்சபாதமுள்ளவரென்றும், அன்பற்றவரென்றும் நினைக்கிறார்கள்.

அன்பர்களே, நாம் அடிக்கடி தேவன்மேல் கோபம் கொள்கிறோம். முறுமுறுப்பிலும், வெறுப்பினாலும், இதை அடிக்கடி வெளிப்படுத்திவிடுகிறோம். சிலர் அவரோடு பேசவும் மனதில்லாமல் ஜெபம்பண்ணாமலும் இருந்து விடுகிறார். சிலர் தாங்கள் பெற்றுக்கொண்டதை அறிக்கையிட மனமற்று அவரைத் துதிக்காமல் போய் விடுகிறார்கள். நாம் இப்படி எரிச்சலாய் இருப்பது நல்லதா?? அளவற்ற ஞானமுள்ளவராய், எப்போதும் நம்மை நேசித்து நமது பேரில் ஆசீர்வாதங்களைப் பொழிகிற பிதாவின்மேல் நாம் கோபமாயிருக்கலாமா? நம்முடைய அக்கிரமங்களை மன்னித்து, நம்முடைய குறைவுகளை நீக்கி, குமாரனோடு ஐக்கியப்படுத்தி, பரம நன்மைகளால் ஆசீர்வதித்து வழிநடத்திய தேவன்மேல் எரிச்சலடையலாமோ? அவர் கொடுப்பதிலும், அவர் செய்வதிலும் சந்தோஷப்படாமல் இருப்பது பாவமாகும். நீ முறுமுறுத்து மனமடிவாகி எரிச்சல் அடைகிறது நல்லதோ?

நான் கொடிய பாவிதான்
மன்னிப்பளித்து இரட்சியும்
பாவ இச்சைக்கு என்னைக் காரும்
இருதயத்தைச் சுத்தமாக்கும்.

இரவிலும் கீதம்பாட

செப்டம்பர் 01

“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11

தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.

பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.

இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.

நான் தேவனை நாடி

ஓகஸ்ட் 31

“நான் தேவனை நாடி” யோபு 5:8

இது ஒரு நல்ல புத்தி. ஒரு நல்ல சிநேகிதன் சொல்லும் யோசனை. மனுஷரிடத்தில் போகிறதைவிட துயரங்களைத் துக்கித்து நினைப்பதைவிட, வீணய் பயப்படுவதைவிட, இதுவே நல்லது. துன்பங்களைத் தூரத்திலிருந்து பார்த்தூல் அவைகள் பயங்கரமாகத் தோன்றினாலும் உண்மையில் பயங்கரமானவைகள் அல்ல. நண்பா, நீ செய்கிறது என்னவென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் கலங்கி நிற்கும்போது நான் தேவனையே நாடுவேன். துன்பத்தில் ஆறுதலுக்காகவும், பெலவீனத்தில் பெலனுக்காகவும், குற்றத்தில் மன்னிப்புக்காகவும், தேவனையே நாடுவேன். பயங்கர போராட்டத்தின்போது ஜெயத்திற்காகவும் சந்தேகத்தில் நம்பிக்கைக்காகவும், வெறுமையில் அவரின் நிறைவுக்காகவும், அவரையே நாடுவேன்.

அவ்விசுவாசத்தின் வல்லமையின்கீழ் இருப்பேனாகில் விசுவாசத்திற்காக அவரிடம் போவேன். அவனுடைய ஜெயத்தை அடக்க, அவனுக்கு விரோதமாய் ஜெயக்கொடியைப் பிடிப்பேன். நான் விழுந்து விடுவேனோ என்நு நினைக்கும்போது அவருடைய நீதியின் வலதுக்கரத்தை பிடித்துக்கொள்ள அவரையே நாடுவேன். மரணத்தைக் கண்டு நான் பயப்படும்போது மரண இருளை வெளிச்சமாக்கும்படி அவரையே நாடுவேன்.

உனக்கு எது தேவையோ அதைத் தேவனிடம் கேள். எந்த பயத்தையும் அவரிடம் சொல். எந்தத் துன்பத்தையும் அவர் முன்னே வை. நீ அவரை நாடித் தேடுவது மட்டும் வீணாய்ப் போவதில்லை.

கர்த்தரைத் தேடு கொடுப்பார்
கேள் உனக்குத் தருவார்
அவர் கிருபை பொழிவார்
நோக்கி கெஞ்சி காத்திரு.

கர்த்தாவே….. என்னை நினைத்து

ஓகஸ்ட் 30

“கர்த்தாவே….. என்னை நினைத்து” சங். 106:4-5

இது அதிக பொருள் அடங்கியுள்ள ஒரு நல்ல ஜெபம். ஓர் ஏழை ஐசுவரியத்திற்காகவும், நிர்பந்தன் இரக்கத்திற்காகவும், அநாதை சிநேகிதனுக்காகவும் வேண்டுகிற ஜெபம். கர்த்தர் நம்மை நினைத்தால் நாசத்திலிருந்து காத்து, மோசத்திற்கு விடுவித்து, வருத்தத்தில் நம்மை நடத்தி, குறைவிலிருந்து நிறைவுக்கு அழைத்து துக்கத்தில் ஆறுதல்படுத்த நாள்தோறும் நடத்திச் செல்கிறார். கர்த்தர் நம்மை நினைத்துவிட்டால் யார் நம்மை மறந்தாலும் கவலையில்லை. அவர் சகல சிருஷ்டிகளைக் காட்டிலும் நமக்கு அதிகம் செய்வார். யார் கைவிட்டாலும் அவர் கைவிடார். அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார். நம்மை மண் என்றும், பெலவீனர் என்றும் மோசத்துக்கு ஏதுவானவர்கள் என்றும், அடிக்கடி சோதிக்கப்படுகிறவர்கள் என்றும் அவர் நம்மை நினைக்கிறார். நமக்காகச் செய்த தமது உடன்படிக்கையையும், தமது வாக்குத்தத்தங்களையும், தமது குமாரன் பட்ட பாடுகளையும், அவர் நமக்கு வைத்திருக்கும் சம்பத்துக்களையும் அவர் நினைக்கிறார்.

அவரின் திவ்ய ஈவுகளையும், அவர் கிருபைகளையும் நமக்கு இன்னும் கொடுக்க வேண்டுமென்று அவரைக் கேட்கலாம். நம்முடைய பாவங்களை மன்னிக்க நம்முடைய ஆத்துமாக்களை சந்திக்க, உயிப்பிக்க, நமது பிரயாசங்களுக்குப் பலன் கொடுக்க, நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் பெருக, விசுவாசத்தில் வளர, சந்தோஷத்திலும், சமாதானத்திலும் பெருக நம்மை அவர் நினைக்க வேண்டும் என்று அவரை நாம் கேட்கலாம். ஆத்துமாவே, இந்த இராத்திரியில் எல்லா மோசங்களுக்கும் என்னை விலக்கிக் காத்து, விசுவாசத்தால் நிறைந்து, பக்தி வைராக்கியத்தால் ஏவப்பட்டு, அன்பில் பிரகாசித்து, தாழ்மையைத் தரித்துக்கொண்டவனாய் நாளை காலை நான் எழுந்து கொள்ளச் செய்யும்.

பரிந்து பேசும் கர்த்தாவே
என்னை உமக்கொப்புவிப்பேன்
ஏழைக்கிரங்கி அருளும்
அடியேனை நினைத்தருளும்.

கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

ஓகஸ்ட் 29

“கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்” ஏசாயா 49:13

இந்த உலகத்தில் கர்த்தருக்குச் சொந்தமான ஜனங்கள் உண்டு. வேதாகமத்தில் எங்கும் இதைப் பார்க்கலாம். தமது ஜனத்தை தேவன் அதிகமாய் நேசித்தார். இரட்சிப்புக்காகவே இவர்களை தெரிந்துக் கொண்டார். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்கிறார். அவர் அவர்களைத் தமது அன்பான குமாரனோடு இணைத்து ஐக்கியப்படுத்தி ஒன்றுப்படுத்துகிறார். அவரின் கண்மணிப்போன்று அவர்கள் அவருக்கு அருமையானவர்கள். என்றாலும் அவர்களுக்குப் பலத்த சோதனைகள் வரும். அவர்கள் அதிக பெருமூச்சு விட்டுத் தவிக்கிறார்கள். அவர்கள் இன்னும் பாவிகள்தான். பாவம் புண்ணாக வெளியே காணவிட்டாலும் உள்ளே புடம் வைத்து இருக்கிறது. வெளியரங்கமாய்ப் பாவத்தால் அவர்களுக்குத் தண்டனையில்லையென்றாலும் அது அவர்களுக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கிறது.

காபிரியேலைப்போல் நன்றி செலுத்துவதற்காண காரணங்கள் அதிகம். இருந்தபோதிலும், அவர்களை மனமடிவாக்கி சிறுமைப்படுத்தும் அநேக காரியங்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் தேவனோ அவர்களை ஆற்றித் தேற்றுகிறார். தமது பரிசுத்த வசனத்தை அனுப்பி, அவர்களை தேற்றி, கிருபாசனத்தை ஏற்படுத்தி அவர்களின் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து தமது சமாதானத்தை அளித்து, தாம் அவர்கள் பிதா என்று உறுதி அளித்து, முடிவில்லாத பாக்கியம் கிடைக்கப்போவதை அவர்களுக்கு விவரித்து, இவ்விதமாய் அவர்களைத் தேற்றுகிறார். நித்தியமான தேவன் ஒரு புழுவுக் ஆறுதல் சொல்ல முனைவது எவ்வளவு பெரிய தாழ்மை. முன்னே கலகம் செய்த துரோகியை ஆற்றித் தேற்றுவது எவ்வளவு பெரிய தயவு.

இந்த மகிழ்ச்சி அந்நியர்
அறியார் பெறவும் மாட்டார்
நேசர்மேல் சார்ந்தோர்தான்
இதில் களித்துப் பூரிப்பர்.

மகா பிரதான ஆசாரியர்

ஓகஸ்ட் 28

“மகா பிரதான ஆசாரியர்” எபி. 4:14

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஊழியஞ் செய்கிறவராயிருக்கிறார். அவர் நமக்கு ஆசாரியர். நமக்காகவே பிரதான ஆசாரியராக அபிஷேகம்பண்ணப்பட்டு அனுப்பப்பட்டார். நம்முடைய பாவங்களுக்காக அவர் பிராயச்சித்தம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். அந்தப் பிராயச்சித்தமே தேவ மகிமையால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது மதிப்புக்கு அடங்காதது. என்றும் பிரசித்தி பெறத்தக்கது. அது நம்முடைய குற்றங்களையும் பாவங்களையும் நிராகரித்துவிட்டது. இப்போதும் அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். இதற்காகவே அவர் பிழைத்தும் இருக்கிறார். எப்போதும் அதைச் செய்துக் கொண்டு வருகிறார்.

தம்முடைய கிருபையினால் பலவித ஊழியங்களையும், நம் ஜெபங்களையும், பெலவீனங்களையும், சுகந்த வாசனையாக்குகிறார். இந்தப் பரிந்து பேசுதல் நமதுமேல் வரும் துன்பங்களை விலக்கி நமக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் சம்பாதித்து தம்முடைய தயவுகளை நம்மேல் பொழிகிறது. இப்போதும் நமக்காக மகா பரிசுத்த ஸ்தலத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார். இரத்தத்தை தெளித்து தூபத்தைச் செலுத்துகிறார். அவர் ஆசாரியர் மட்டுமல்ல. பிரதான மகா பிரதான ஆசாரியர். அவர் மகத்துவத்திலும் வல்லமையிலும் மகிமையிலும், இலட்சணங்களிலும் அவர் ஊழியங்களின் பலனிலும் அவருக்கு மேலானவர் ஒருவரும் இல்லை. இவரே நம்முடைய மகா பிரதான ஆசாரியர். இவர் தேவக் குமாரனாகவும் நமக்கு இருக்கிறார். நமக்காக அவர் தேவ சமுகத்தில் நிற்கிறார். இன்று இரவு அவர் நமக்காகத் தம்முடைய இரத்தத்தைச் சமர்பிக்கிறார்.

அவர் பிதாவின் சமுகத்தில்
நமக்காகப் பரிந்து பேசுவார்
அவரிடம் ஒப்புவித்ததெல்லாம்
நலமாய் முடிப்பார்.

தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்

ஓகஸ்ட் 27

“தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்”. நீதி. 2:8

விசுவாசி நடக்க வேண்டிய பாதை சத்துருக்களின் தேசத்திலும் இருக்கிறது. இது மிக துன்பம் நிறைந்தது. இது மிகவும் களைத்துப் போகக்கூடிய பிரயாணம். வருத்தம் நிறைந்தது. விசுவாசியின் பெலவீனம் அதிக வருத்தத்தைக் கூட்டுகிறது. உள்ளான போராட்டமும் அவன் வழியைக் கடினப்படுத்துகிறது. ஆகிலும் நாம் சேர வேண்டிய நகரத்திற்கு அந்த ஒரு பாதைதான் உண்டு. இந்தப் பாதை இளைப்பாறுதலுக்கும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட சுதந்திரத்திற்கும் நடத்துகிறது. இந்தப் பாதையில் கர்த்தரும் தம்முடைய பரிசுத்தவான்களுடன்கூட நடக்கிறார். அவர்களின் குறைவுகளைப் போக்கி அவர்களுடைய நிலைமைக்குத்தக்கதாக இரக்கம் பாராட்டுகிறார்.

சத்துருக்கள் இவர்களை மேற்கொள்ள முடியாமல் தற்காக்கிறார். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை அவர்களுக்கு நேரிடுவதில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என்று எக்கொடிய சோதனையைப்பற்றியும் சொல்லலாம். சாத்தான் உங்களைக் குற்றப்படுத்தும்போது பின்வாங்கிப் போகாமலும், பாதுகாக்கிறார். அவர்களுடைய பெலவீனத்தில் தம்முடைய பெலனைப் பூரணப்படுத்தி தம்முடைய கிருபை அவர்களுக்குப் போதும் என்று ரூபிக்கிறார். விழிப்பாய் அவர்களைக் கவனித்து பலத்த கையால் தாங்கி, அன்பான மனதால் அவர்களைத் தாங்குகிறார். அன்பரே, இன்றுவரை அவர் உங்களைப் பாதுகாத்து வந்ததை கவனித்துப் பாருங்கள். இனிமேலும் அவர் உங்களைப் பாதுகாப்பார் என்று நம்புங்கள். பரிசுத்தவான்களைப் பராமரிப்பதும் அவர்களின் பாதைகளைப் பாதுகாப்பதுமே அவருடைய வேலை.

இயேசுவின் கரத்தில் பக்தர்
என்றும் சுகமாய் இருப்பர்
அவரால் துன்பங்களைக்
கடந்து என்றும் சுகித்திருப்பர்.

Popular Posts

My Favorites

நீ என்னை மகிமைப்படுத்துவாய்

ஏப்ரல் 10 "நீ என்னை மகிமைப்படுத்துவாய்" சங். 50:15 துன்பங்கள் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்படி நம்மை ஏவிவிடும்போது அவர் நமக்கு அன்பாய் செவி கொடுத்து தயவாய் உத்தரவருள்வார். ஜெபத்திற்கு உத்தரவு கொடுத்து நம்மை விடுவிக்கும்போது நாம்...