தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 32

தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்

ஓகஸ்ட் 04

“தேவன் பேசி(னால்)…. நலமாய் இருக்கும்” யோபு 11:5-6

யோபின் சிநேகிதர் அவன் நிலமையை புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் சொன்ன நியாயங்கள் அவன் மனதில் தங்கவில்லை. அவனுக்கு அவைகள் தெரிய வேண்டுமென்று அவர்களில் இவன் ஒருவன் விரும்பினதால், தேவன் பேசினால் நலமாய் இருக்கும் என்று வாய்விட்டுச் சொன்னான். இப்படித்தான் விசுவாசியும் கடைசியில் சொல்லுகிறார். யாரிடத்தில் தேவன் பேசினால் நலமாய் இருக்குமென்று விரும்புகிறோம்? நம்மிடத்தில்தான் அவர் பேசவேண்டும். அப்போதுதான் அவரின் அன்பு நம்மிடத்தில் இருக்கிறதென்று ஒரு நிச்சயம் உருவாகும். நமது வருத்தங்கள் விலகும். சத்தித்தில் நாம் நிலைப்படுவோம். பாவிகளிடத்தில் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். மனந்திருப்பி கர்த்தர் பட்சம் சேருவார்கள். துக்கப்படுவோரிடம் அவர் பேச வேண்டும். அப்போது அவர்கள் தேற்றப்படுவார்கள். சுயாதீனம் அடைவார்கள். பின்வாங்கி போனவர்களோடு அவர் பேசவேண்டும். அப்போது அவர்கள் திரும்பவும் பரிசுத்தர்களும் பாக்கியமும் பயனுள்ளவர்களும் ஆகலாம்.

இவைகளெல்லாம் நமக்குப் போதிக்கிறதென்ன? எந்த வேளையானாலும் தேவனிடம் ஓடி அவர்மேல் நம்பிக்கை வைக்கும்போது அவர் நம்மோடு பேசுவார். சோதிக்கப்படுகிற விசுவாசியே, தேவன் உனக்காகப் பேசுவார். பக்தியுள்ள கிறிஸ்தவனே, தேவன் உன்னோடு பேசுவார். எப்படிப் பேசுவார் என்று கேட்கிறாயா? தம்முடைய வசனத்தை கொண்டும், தமது கிரியைகளைக் கொண்டும், ஆவியானரைக் கொண்டும் பேசுவார். அப்படியானால் அவர் சத்தத்துக்குச் செவிக்கொடுப்போமாக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டும், ஊழியர்களைக் கொண்டும் எவ்விதத்திலும் நம்மோடு பேச அவரை வேண்டிக்கொள்வோமாக.

சுவிசேஷத்தில் தொனிக்கும்
சத்தம் சமாதானமே
இதை உமதடியார்க்களித்து
விடாமல் என்றும் காரும்.

என்ன செய்தேன்

நவம்பர் 12

“என்ன செய்தேன்?” எரேமி. 8:6

ஒரு நாளின் இறுதியில் நமது செயல்களை இப்படி விசாரிக்கும் பொழுது, இக்கேள்வி அவசியம் வரும். நம் இருதயத்தை நாம் ஆராய்வதோடு, நமது நடத்தையையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றிரவு நம்மையே நாம் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமாக. தேவனுக்கு விரோதமாக நான் இன்று என்ன செய்தேன்? அவருடைய கட்டளைகளை மீறினேனா? அவருடைய வசனத்தை விசுவாசியாதிருந்தேனா? அவருடைய தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தினேனா? அவடைய அன்பு மைந்தனை அசட்டை செய்தேனா? அவருடைய செயல்களுக்கு விரோதமாக முறுமுறுத்தேனா? அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நின்றேனா? என் இருதயம் அவருடைய நியமங்களைப் புறக்கணித்து அவருடைய முகத்திற்கு முன்பு விரோதம் பேசியதா? அவருடைய அன்பைச் சந்தேகித்தேனா? அவருடைய உண்மையைப்பற்றி தவறாக நினைத்தேனா? இன்று நான் கர்த்தருக்காக என்ன செய்தேன் என்று சோதித்துக் கொள்வோம்.

நோயாளிகளைச் சந்தித்தேனா? ஏழைகளுக்கு உதவினேனா? துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னோ? சபையில் என் கடமைகளைச் செய்தேனா? பின் வாங்கியவர்களைத் திருப்ப முயற்சித்தேனா? அவருடைய மகிமைக்காக இன்று நான் செய்ததென்ன? அவருடைய இராஜ்ய விருத்திக்காக என்ன செய்தேன்? என்னையே நினைத்துப் பெருமை கொண்டேனா? கிறிஸ்து நாதருக்காக இன்று என்ன செய்திருக்கிறேன் என்று யோசி. அவருக்காக உழைக்க தீர்மானித்துக்கொள். தீமையை விட்டு விலகி நன்மை செய்.

குற்றம் நிறைந்த மனதோடு
உம்மண்டை நான் வந்தேன்
சுத்தமாக்கும் என்னை நீரே
உம்மண்டை சேர்த்தருளும்.

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்

யூன் 25

“நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்.” 1.கொரி. 3:23

யார் கிறிஸ்துவினுடையவர்கள்? தமக்கென்று தேவன் பிரித்து வைத்த பரிசுத்தவான். அவரைத் தங்கள் தேவனாகவும், இரட்சகராகவும் தொழுது கொள்ளுகிறார்கள். அவர் நாமத்தை விசுவாசித்து அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அவர் சித்தம் செய்கிறவர்கள். எந்த ஒரு தேவ பிள்ளையானாலும், வளர்ச்சியில் குறைவுள்ளவர்களானாலும், பெலவீனர்களானாலும், பயங்களானாலும், சந்தேகங்களானாலும் சோர்ந்து போய் இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவினுடையவர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடையவர்களாகும்போது பிதா அவர்களுடையவர்களாகிறார். பரிசுத்தாவியானவரும் அவர்களுடையவரே. தேவநீதி அவர்களுடையதாகிறது. அவருடைய சமாதானமும் அவருடையயதே. அவருடைய சகல ஐசுவரியமும் அவர்களுடையதாகிறது. அவரும், அவருடையதெல்லாம் அவர்களுடையது.

தேவன் கிறிஸ்துவினுடையவர்களைத் தமது சொத்தாகப் பாதுகாக்கிறார். தம்முடைய பிள்ளைகளாக அவர்களை ஆதரிக்கிறார். தம்முடைய மணவாட்டியாக அவர்களை அரவணைக்கிறார். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால் அவர் பேசும்போது, முற்றிலும் அவருக்குச் செவி கொடுக்க வேண்டும். அவர் கட்டளையிடும்போது நாம் சந்தோஷமாய்க் கீழ்ப்படியவேண்டும். சாத்தானும் அவன் மக்களும் அவருக்கு விரோதமாய்ச் சொல்லும் எதையும் நம்பக்கூடாது. எப்போதும் அவரை நம்முடைய ஆண்டவரும் எஜமானுமாய் பாவிக்க வேண்டும். அடிக்கடி கிருபாசனத்தண்டையிலும், திருவிருந்திலும், தேவாலயத்திலும் அவரைச் சந்திக்க வேண்டும். வருங்காலத்தில் நித்தியமாய் அவரோடு வாழுவோம் என்ற நம்பிக்கையோடு, இப்போது அவரோடு ஜீவனம்பண்ண வேண்டும். நீர் கிறிஸ்துவினுடையவர் என்பதற்கு அத்தாட்சி உண்டா? உமக்கு அனுதினமும் வேண்டிய ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு இவைகளுக்காக நீர் அவரிடத்தில் கேட்கிறீரா?

எனக்குத் தேவை யாவையும்
அளிப்பவர் உண்டே
மன்னிப்பும் சமாதானமும்
அவர் அளிக்க வல்லவரே.

என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்

ஜனவரி 14

“என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்”  சங் 17:5

நமது பாவங்களும், தவறுகளும், நஷ்டங்களும், புத்தியீனங்களும் மன்னிக்கிற தேவனண்டையில் நம்மை நடத்த வேண்டும். தேவ வல்லமையையும் தேவ ஞானத்தையும் பெற்றுக்கொள்ள அதுவே சிறந்த வழி. முறிந்த வில்லைப்போல் பலவீனர்களாயிருக்கலாம். அநேகர் விழுந்தார்கள். அநேகர் விழலாம், அல்லது பின்வாங்கி போயிருக்கலாம். சோதனைகள் வரும்போது விழுந்துவிட கூடியவர்களாய் இருக்கலாம். சாத்தான் விழித்திருக்கிறான்.சோதனைகள் கடுமையாகி, நமது பலவீனமான வாழ்க்கையைச் சோதிக்கும்போது கர்த்தரிடத்தில் வந்து அவரை அண்டிக்கொள்வோம். அனுதினமும் என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும் என்று ஜெபிப்போமாக. எந்த வேளையிலும் சோதனையிலும் கொந்தளிப்பிலும், அமைதியான வேளையிலும் நம்முடைய நடைகளை அவர் ஸ்திரப்படுத்தவேண்டும்.

கர்த்தர் நம்மை தாங்கிவிட்டால் நாம் துணிகரத்தில் விழுந்துவிடுவோம். அல்லது அவிசுவாசத்தில் மாண்டு போவோம். சுய நீதியையும் பெலத்தையும் பாராட்டுவோம். அக்கிரமத்தில் விழுந்து பின்வாங்கி போவோம். இன்றுவரை கர்த்தர் நம்மை காத்தால்தான் நாம் பத்திரமாய் இருக்கிறோம். நமது பலவீனத்தையும் சுயத்தையும் அவரிடம் ஒப்படைத்து அவரின் பெரிய ஒத்தாசையை நாடும்போது அவரின் பெரிய பெலத்தைப் பெறுவோம். நம்மையும் உலகத்தையும் நம்பும்போது நாம் விசுவாசத்தைவிட்டு விலகி விடுவோம். மன தாழ்மையோடும் விசுவாசத்தோடும் அவரிடம் வரும்போது நமது பாதைகளைச் செம்மையாக்கி விசுவாசத்தில் நிற்கவும் பெலன் தருகிறார்.

அன்பானவர்களே, தேவ ஒத்தாசையை அனுதினமும் தேடாவிட்டால் சாத்தானால் ஜெயிக்கப்பட்டு மோசம் போவீர்கள். உங்களைப் பரிசோதித்துப் பாருங்கள். விழித்திருந்து ஜெபியுங்கள்.

சுத்த தேவ ஆவியே
சுத்தம் ஞானம் தாருமேன்
மோசம் அணுகும்போது
என்னைத் தாங்கும் அப்போது.

அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை

செப்டம்பர் 15

“அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை” தானி. 4:35

தேவனுடைய கை என்பது அவருடைய செயல். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் விளங்கும் அவருடைய ஞானம், வல்லமை, மகத்துவம் போன்றவைகளே. அவுருடைய நோக்கத்தை அறிந்து கொள்ள ஒருவனாலும் கூடாது. அவர், தமது நோக்கத்தை உறுதியாய்ச் கொண்டு செயல்படுகிறார். எக்காரியமாயினும் அவர் மிகவும் எளிதாக முடித்துவிடுவார். அவர் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய கரங்களில் இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் பாதுகாப்பாக இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் கிரியை செய்கிறபடியால் சேதமின்றி வாழ்கின்றனர். அவர் தம்முடைய வசனங்களுக்கேற்பத் தமது செயல்களை நடப்பிக்கிறார்.

அவர் சொன்னது சொன்னபடி நிறைவேற வேண்டும். நாம் நம்மை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டால் சுகபத்திரமாயிருக்கலாம். அன்பானவர்களே, தேவனுடைய கரம் உங்கள்மேல் உயர்ந்திருக்குமானால், உங்களுக்கு ஒரு குறைவும் வராது. அவருடைய கைகள் உங்களைத் தாங்குகிறபடியால் நீங்கள் விழமாட்டீர்கள். அவருடைய கரத்தின் செயல்கள் யாவும் உங்களுக்கு நம்மையாகவே முடியும் என்று விசுவாசியுங்கள். உங்களுடைய சத்துருக்களிடமிருந்து அவருடைய கை உங்களை மீட்கும். உங்களை ஆதரித்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கும் வனாந்தரத்தில் நடந்தாலும் அவருடைய கரத்தால் நீங்கள் காக்கப்பட்டு உயர்த்தப்படுவீர்கள். அனைத்தையும் அவருடைய கரம் ஒழுங்குபடுத்தும். சொல்லிமுடியாத அன்பினால் அவருடைய உள்ளம் நிறைந்திருக்கும். உங்களுக்காக அவர் செயல்படும்பொழுது, எவராலும் அவரைத் தடுத்து நிறுத்தமுடியாது.

தெய்வ கரங்கள் தாமே உனை
பெலப்படுத்தி என்றும் காக்கும்
தம் வாக்குகளை நிறைவேற்றி
எப்போதுமவர் வெற்றிதருவார்.

இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை

யூலை 25

“இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை” மத்.17:8

மோசேயும் எலியாவும், சீஷர்களோடு மலையின்மேல் இருந்தார்கள். அவர்கள் போனபின்பு இயேசுவானவர்மட்டும் இருந்தார். உலகில் எல்லாம் மாறிப்போகிறது. சுகம், ஆஸ்தி, வாலிபம், இன்பங்கள், மனிதன் எல்லாமே மாறிப்போகிறது. ஆனால் எது மாறினாலும் இயேசு அப்படியே இருக்கிறார். அவருடைய அன்பும் தன்மையும் மாறுவதில்லை. நம்மேல் அவர் வைத்திருக்கிற சித்தமும் மாறுகிறதில்லை. அவர் கிருபையுள்ளர். உண்மையுள்ள அவருடைய வாக்கும் மாறுகிறதில்லை. ஆசாரிய ஊழியத்திலும், மன்றாட்டு ஊழியத்திலும், இராஜ உத்தியோகத்திலும் அவர் மாறுகிறதில்லை. அவருடைய இரத்தம் எப்போதும் பலனுள்ளது. தகப்பனாகவும், சகோதரனாகவும், புருஷனாகவும், சிநேகிதனாகவும் அவரோடு நமக்கு இருக்கும் உறவில் அவர் மாறுகிறதில்லை. அவர் நேற்றும் இன்றும் ஒரே விதமாய் இருக்கிறார். இந்த வசனம் நமக்கு எப்போதும் ஞாபகக் குறியாய் இருக்க வேண்டும்.

இயேசுவால் மட்டும்தான் நம்மை கிருபாசனத்தண்டை கூட்டிக் கொண்டு போக முடியும். அவரைத்தான் நம்பி விசுவாசிக்கலாம். தேவன் நம்மை அங்கீகரிப்பாரென்று நம்ப அவர்தான் நமக்கு ஆதாரம்., மாதிரி. அவரே நம்முடைய சந்தோஷமும், கீதமும், நம்முடைய இராஜனும் நியாயப்பிரமாணிகனுமாய் இருக்கிறார். அவர் மாறாதவர். ஆகையால் எல்லாவற்றிலும் அவரையே பற்றப் பிடித்திருக்கலாம். நமது கண்களையும் சித்தத்தையும் அவர்மேல் வைப்போமாக. மோசேயும் எலியாவும் போனாலும் இயேசுவானவர் இருக்கிறார் என்று சந்தோஷப்படுவோமாக. மேகம் இருண்டு இருந்தாலும். பிரகாசமாய் காணப்பட்டாலும் அவர் மாறாதவர். இயேசுவானவர் சகல வருத்தங்களையும் இன்பமாக்கி, பயன்படுத் வாழ்வில் வரும் சோதனைகளுக்கு நம்மை விலக்கி காப்பார் என்று எதிர்பார்த்திருப்போமாக.

இயேசு நல்ல பெருமான்
எனக்கு முற்றிலும் ஏற்றவர்
எனக்கு வேண்டியது எல்லாம்
அவரிடம் என்றுமுள்ளது.

அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

செப்டம்பர் 17

“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34

நமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.

அவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.

வல்ல மீட்பர் இயேசுவே
என்னைத் தயவாய் மீட்டீரே
சாத்தானின் கரத்திலிருந்தென்னைத்
தயவாய் மீட்டுக் கொண்டீரே.

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்

ஜனவரி 31

“கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுக்கு நலம்.” நெகே. 8:10

பயமும் துக்கமும் நம்மை பெலவீனப்படுத்தும். விசுவாசமும் சந்தோஷமும் நம்மைப் பெலப்படுத்தும். அதுவே நமக்கு ஜீவனைக் கொடுத்து, நம்மை தைரியப்படுத்தி உற்சாகப்படுத்துகிறது. நமது தேவனைப் பாக்கியமுள்ள தேவனென்றும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனென்றும் சொல்லுச் செய்கிறது. அவர் நம்மை பாக்கியவான்களாக்குகிறார். அவர் சகலத்துக்கும் ஆறுதலில் தேவனாயிருக்கிறார். ஆகவே நம்மை ஆறுதல்படுத்தி மகிழ்ச்சியாக்குகிறார். இரட்சிப்பின் கிணறுகள் நமக்குண்டு, அதனிடத்திலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டும் கொள்ள வேண்டும். அந்த நிறைவான ஊற்றிலிருந்து எந்த அவசரத்திற்கும் தேவையானதை நாம் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அடிக்கடிப்போய் கேட்கிறோமே என்று அச்சப்படத் தேவையில்லை. உங்கள் சந்தோ}ம் நிறைவாயிருக்கும்படிக்குக் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆண்டவர் சொல்பதைக் கேளுங்கள். நம்மை நாமே வெறுத்து இயேசுவின் சிலுவையைச் சுமந்துக்கெர்டு வாழ்க்கை நடத்தினால்தான் நாம் பாக்கியசாலிகளாவோம். சந்தோஷமுள்ள கிறிஸ்தவன் தான் பெலமுள்ள கிறிஸ்தவன். தேவனுக்கு அதிக மகிமையை அவனால் தான் கொடுக்க முடியும். நாம் பரிசுத்தராய் இருப்பதுபோல் மகிழ்ச்சியாய் இருப்பதும் நமது கடமை. இரண்டும் தேவையானதே. முக்கியமானதே. நாம் எப்போதும் மன மகிழ்ச்சியாயிருக்கக் கற்றுக்கொள்வோம்.

நமக்குப் பரம நேசருண்டு
அவர் தயவில் மகிழ
அவர் மகிமை அளிப்பார்
பரம இராஜ்யமும் தருவார்.

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.

மே 29

“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்.” யாக் 1:3

தேவனை விசுவாசிக்கிறேன் என்கிறவன் தன் விசுவாசம் பரீட்சிக்கப்படமனதாயிருப்பான். ஒவ்வொரு விசுவாசியும் சோதிக்கப்படுகிறான். சாத்தானாலாவது, உலகத்தினாலாவது, பேர் கிறிஸ்தவர்களாலாவது நாம் சோதிக்கப்படுவோம். நம்முடைய சோதனையைப் பார்க்கிறவர் தேவன். தமது வசனத்தில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் நாம் வைக்கும் விசுவாசம் உத்தமமானதா என்றும், அவருடைய அன்பில் குமாரனில் மட்டும் பூரண இரட்சிப்படைய நாம் விசுவாசிக்கிறோமா என்றும், அவருடைய வாக்கை நிறைவேற்றுவார் என்றும் அவருடைய உண்மையில் விசுவாசம் வைத்து எதிர்பார்க்கிறோமா என்றும் நம்மை அவர் சோதிக்கிறார். நம்முடைய விசுவாசம் தேவனால் உண்டானதா, அது வேர் கொண்டதா என்று சோதித்தறிகிறார். நமது நம்பிக்கையின் துவக்கத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறோமா என்று நம் உறுதியை சோதித்தறிகிறார். இப்படி சோதிப்பது நமது சொந்த நன்மைக்கும் நலனுக்கும். அவரின் சொந்த மகிமைக்கும் ஆகும். நம்மை கவனிக்கிற மற்றவர்களுக்காகவும், நமது அனுபவத்தின் பிரயோஜனத்திற்காகவும் இப்படிச் சோதித்தறிகிறார்.

இப்படிச் சோதிப்பது பொறுமையை உண்டாக்கும். இத்தகைய சோதனை பொறுமையை உண்டாக்கும். அடிக்கடி வருத்தமில்லாமல் இருக்கிறதற்குப் பதிலாக பொறுமையையும், ஐசுவரியத்திற்குப் பதிலாக மனதிருப்தியையும் நமது சொந்த பெலனுக்குப் பதிலாக கிறிஸ்துவின் பெலனை நம்பவும் செய்யும். ஆகவே விசுவாசம் பரீட்சிக்கப்பட வேண்டும். துன்பங்கள் விசுவாசத்தைச் சோதிக்கும். தேவாசீர்வாதம் பெற்ற துன்பங்கள் நம்மைப் பொறுமையுள்ளவர்களாக்கும். பொறுமை நிறைவாகும்போது சோதனைகள் அற்றுபோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோமாக. ஆகையால் நீங்கள் பொறுமையுள்ளவர்களாய் இருங்கள்.

சோதனை வரும் அப்போ
என் பக்கம் வந்திடும்
சாந்தம் பொறுமை அளியுமே
உமக்கடங்கச் செய்யுமே.

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்

டிசம்பர் 26

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33

நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம் நமது விரும்பம்போல சொல்லுகிறதில்லை. நாம் வசனம் கூறுவதைப்போலத்தான் நடக்கவேண்டும். தேவனுடைய கிரியைகள் நம் விருப்பப்படி இருப்பவை அல்ல. நாம் சொல்லுவதுபோல நடக்கவேண்டுமென்று விரும்பினதால் நாம் புத்தியீனர். ஆண்டவர் உனது மனதின்படியா நடக்க வேண்டும் ? உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும்? இவ்வாறு நாம் எண்ணுவது தவறுதானே? இதனால் தேவனுக்கு மகிமை ஏற்படாது. இது அவருக்கு வேதனையைத்தான் தரும். உனது பாவமும் பெருகிப்போம். உன்னைவிட உன் தேவன் ஞானமும் அறிவும் அதிகம் உள்ளவர். அவருக்கு எதிராக நீ செயல்படக் கூடாது. உனக்கு வேண்டியது பணம், பொருள், சுகம், கண்ணீர், துன்பம், கவலை போன்றவை வேண்டாம். இது தன்னலம். அவ்வாறு நீ வாழ்வது தேவனுக்குப் பிரியமாகாது. தன்னலம் ஒரு கொடிய பாவம்.

அன்பானவரே, இவ்வாறான எண்ணத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு. இத்தகைய எண்ணங்கள் யாவருக்கும் வருபவைதான். ஆனால், அதற்கு எதிர்த்து நில். இது ஆபத்தானது. மோசத்தில்கொண்டுவிடும். எச்சரிக்கையுடனிரு.

ஆண்டவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயல்களில் மா வல்லவர். அவருடைய வழிகள் நீதியுள்ளவைகள், அவருடைய ஒழுங்கங்கள் ஞானமானவை. அவருடைய நோக்கங்கள் இரக்கம் நிறைந்தவை. எல்லாம் சரியாக முடியும்போது, எப்பக்கத்திலும் அவருடைய மகிமை பிரகாசத்தைக் காணலாம்.

தேவ சித்தமே நலமாம்,
அதன்கீழ் அமைந்திடுவேன்,
என் மனம் பொல்லாதது.
அதன்படி நடவேன்.

Popular Posts

My Favorites

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும்...