தினதியானம்

முகப்பு தினதியானம்

ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.

யூலை 04

“ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது.” சங். 63:3

உயிரோடு இருப்பதுதான் ஜீவன். நல்வாழ்வு என்பது அதன் பொருள். சுகமாய், மேன்மையாய், சமாதானத்தோடு குறைவின்றியிருப்பது. மற்றவர்களோடு நல்ல ஓர் உறவை வைத்து மனதிருப்தியோடிருந்தால் அரசன் தன் சிம்மாசனத்திலும், வியாபாரி தன் வியாபாரத்திலும் மாணவன் தன் படிப்பிலும் திருப்தி அடைவான். ஜீவனோடிருப்பவனை நற்காரியங்கள் சூழ்ந்திருக்கும். ஆனால் தேவன் காட்டும் கிருபை எது? அன்பான வார்த்தைகளும், பட்சமான செயல்களுமே. தம்முடைய குணாதிசயங்களை வெளிப்படுத்துதலும் ஆகும். நம்மை ஞான நன்மைகளால் அவர் திருப்தி செய்கிறார். இந்த நன்மைகள் ஜீவனைவிட மேன்மையானவை. ஏனெனில் அவை மேலான கனத்தைக் கொடுக்கிறது. அதிக இன்பங்களை அளிக்கிறது.

இந்தக் கிருபைதான் மேலான காரியங்களை எதிர்பார்க்கும்படி நம்மை ஏவிவிடுகிறது. நம்மை அதிக பத்திரமாய் காக்கிறது. அது ஜீவனைவிட நல்லது. அது நித்திய நித்தியமானது. ஆத்துமாவின் தன்மைக்கும் மிகவும் ஏற்றது. மகிமை நிறைந்தது. அது கலப்பற்ற நன்மை. அழியாத இன்பம், குறையாத ஐசுவரியம். ஆகையால்தான் சங்கீதக்காரன் இது ஜீவனைவிட நல்லது. ஆகவே என் உதடுகள் உம்மை துதிக்கும் என்று சொல்லுகிறான். மற்றவர்களோடு பேசும் போதும் அதைப் புகழ்ந்து பேசுவேன் என்கிறான். என் ஜெபத்தில் உமக்கு நன்றி செலுத்துவேன். அதை எனக்குத் தெரியப்படுத்தினதற்காகவும் இப்போது அது எனக்கு கிடைத்தமைக்காகவும், எப்போதுமே அதை அனுபவிப்பேன் என்ற நம்பிக்கைக்காகவும் உம்மைத் துதிக்கிறேன் என்கிறான். நண்பரே, ஜீவன் உனக்கு அருமையானதுதான், ஆனால் அதிலும் தேவகிருபை பெரிதானதென்று எண்ணுகிறாயா?

உம் தயவும் அன்பும்
ஜவனிலும் நல்லதே
தேவ இரக்கம் பூமியைப்
பரலோகமாக்குகிறது.

இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

ஜனவரி 08

“இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்” 1.சாமு. 7:12

தேவன் உண்மையுள்ளவர். இதை நாம் நமது அனுபவத்தில் நன்றாய்க் கண்டறிந்திருக்கிறோம். அவர் நமக்கு உதவி செய்வேனென்று வாக்களித்துள்ளார். நாம் நம்முடைய நீண்ட பிரயாணத்தில் தண்ணீரைக் கடந்து அக்கினியில் நடந்தாலும், பாதைகள் கரடு முரமானாலும், பாவங்கள் பெருகி, சத்துருக்கள் அநேகரானாலும் நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளதாயிருந்தாலும், கர்த்தர் நமக்கு ஏற்ற துணையாய் நின்றார். இருட்டிலும் வெளிச்சத்திலும், கோடைக்காலத்திலும் மாரிக்காலத்திலும், ஆத்தும நலத்திலும் சரீர சுகத்திலும் அவர் நமக்கு உதவி செய்தார்.

இந்த நாளில் அவருடைய இரக்கங்களை நினைத்து நம்முடைய ‘எபெனேசரை” நம் முன் நிறுத்தி அவரே நமக்கு உதவினாரென்று சாட்சியிடுவோமாக. மேலும் கடந்த காலத்தை நினைத்து கலங்காமல், எதிர்காலத்திலும் தேவனே உதவிடுவார் என தைரியமாய் நம்புவோமாக. ‘நான் உனக்குச் சொன்னதை எல்லாம் செய்து தீருமட்டும் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறார். நாமும் சந்தோஷித்து மகிழ்ந்து வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தடைய நாமத்திலே எங்களுக்கு ஒத்தாசை உண்டென்று சங்கீதக்காரனோடு துதிபாடுவோமாக. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லுகிறதுபோல நாமும் தைரியத்தோடு கர்த்தர் எனக்குச் சகாயர், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்வோமாக. எது மாறிப்போனாலும் உன் தேவனுடைய அன்பு மாறாது. அவரே மாற்ற ஒருவராலும் கூடாது. ஆகையாய் அவரை நம்பு. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்.

இம்மட்டும் தேவன் காத்தார்
இம்மட்டும் நடத்தினார்
இன்னும் தயை காட்டுவார்
அவர் அன்பர்கள் போற்றிப் பாடுவர்.

உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்

ஓகஸ்ட் 18

“உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” உன்.1:4

சுபாவப்படி உத்தமர் ஒருவரும் இல்லை. ஒருவரும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் மனுஷருக்குரியதை மனுஷருக்கும் செலுத்தப் பார்க்கிறதில்லை. இப்படி செய்வதுதான் உத்தமம். இது கிருபையிலிருந்து உண்டாகிறது. உத்தமமே மறுபடியும் பிறந்தவர்க்கு அத்தாட்சி. உத்தமமானவர்கள் எப்பொழுதும் தேவனுடைய கண்கள் தங்கள் பேரில் இருக்கிறதென்றும், தாங்கள் தேவ வசனத்தின்படி நமக்கக் கடமைப்பட்டவர்கள் என்றும், தாங்கள் தேட வேண்டியது, தேவ தயவு என்றும், அவர் நிதானிப்பே மிகவும் முக்கியம் என்றும் எண்ணுவார்கள். உத்தமர்கள் ஆண்டவர் இயேசுவை வெகுவாய் நேசித்து அவரை அறிந்து அவரை மகிமைப்படுத்துவார்குள். உத்தமமாய் தேவனை நேசித்து, அதற்கு சாட்சியாக அவர் சமுகத்தில் சந்தோஷித்து சகலத்திலும் அவரில் பிரியமாய் நாடி வாழ்வார்கள்.

உத்தமர்கள் தேவனைக் குறித்து எப்போதும் சந்தோஷமாய் பேசப் பிரயாசப்பட்டு, அவருக்காக எதையும் செய்யவும், உலகத்தையும் பாவத்தையும், வெறுத்து தேவனுக்கு எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். கர்த்தரை மகிமைப்படுத்தி அவரைக் கனம்பண்ணுவதைவிட வேறு எதையும் மிகவும் முக்கியமானதாய் நினைக்கமாட்டார்கள். அன்பரே, நீ உத்தமனா? இயேசுவை நேசிக்கிறாயா? உத்தம இருதயத்தோடு அவரை நேசிக்கிறாயா? எல்லாவற்றிலும் அதிகமாய் நேசிக்கிறாயா? நீ அவரை நேசிக்கவில்லையென்றால் நீ உத்தமன் அல்ல. ஒருவன் கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவில் அன்பு கூராவிட்டால் அவர் சபிக்கப்பட்டவன். கர்த்தர் வருகிறார். என்று அப்போஸ்தலன் இடும் சாபம் எவ்வளவு பயங்கரமானது.

இயேசுவே என் நோவில் நீ
சஞ்சீவி, மரணத்தில் ஜவீன்
உமது வாயின் வார்த்தைகள்
என் ஆத்துமாவுக்கு அமிர்தம்.

நான் தேவனை நாடி

ஓகஸ்ட் 31

“நான் தேவனை நாடி” யோபு 5:8

இது ஒரு நல்ல புத்தி. ஒரு நல்ல சிநேகிதன் சொல்லும் யோசனை. மனுஷரிடத்தில் போகிறதைவிட துயரங்களைத் துக்கித்து நினைப்பதைவிட, வீணய் பயப்படுவதைவிட, இதுவே நல்லது. துன்பங்களைத் தூரத்திலிருந்து பார்த்தூல் அவைகள் பயங்கரமாகத் தோன்றினாலும் உண்மையில் பயங்கரமானவைகள் அல்ல. நண்பா, நீ செய்கிறது என்னவென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் கலங்கி நிற்கும்போது நான் தேவனையே நாடுவேன். துன்பத்தில் ஆறுதலுக்காகவும், பெலவீனத்தில் பெலனுக்காகவும், குற்றத்தில் மன்னிப்புக்காகவும், தேவனையே நாடுவேன். பயங்கர போராட்டத்தின்போது ஜெயத்திற்காகவும் சந்தேகத்தில் நம்பிக்கைக்காகவும், வெறுமையில் அவரின் நிறைவுக்காகவும், அவரையே நாடுவேன்.

அவ்விசுவாசத்தின் வல்லமையின்கீழ் இருப்பேனாகில் விசுவாசத்திற்காக அவரிடம் போவேன். அவனுடைய ஜெயத்தை அடக்க, அவனுக்கு விரோதமாய் ஜெயக்கொடியைப் பிடிப்பேன். நான் விழுந்து விடுவேனோ என்நு நினைக்கும்போது அவருடைய நீதியின் வலதுக்கரத்தை பிடித்துக்கொள்ள அவரையே நாடுவேன். மரணத்தைக் கண்டு நான் பயப்படும்போது மரண இருளை வெளிச்சமாக்கும்படி அவரையே நாடுவேன்.

உனக்கு எது தேவையோ அதைத் தேவனிடம் கேள். எந்த பயத்தையும் அவரிடம் சொல். எந்தத் துன்பத்தையும் அவர் முன்னே வை. நீ அவரை நாடித் தேடுவது மட்டும் வீணாய்ப் போவதில்லை.

கர்த்தரைத் தேடு கொடுப்பார்
கேள் உனக்குத் தருவார்
அவர் கிருபை பொழிவார்
நோக்கி கெஞ்சி காத்திரு.

பெத்லகேமில் இயேசு பிறந்தார்

டிசம்பர் 25

“பெத்லகேமில் இயேசு பிறந்தார்” (மத்.2:1)

இயேசு கிறிஸ்து எப்பொழுது எந்த நாளில் பிறந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியாது. அது நமக்கு மறைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் பிறந்தார் என்ற செய்திமட்டும் மிகத் தெளிவாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் அவர் பிறந்தார், எக்காரியத்திற்காக அவர் பிறந்தார் என்பதுவும் நமக்குத் தெரியும். அவர் தேவனோடு நித்திய காலமாக இருக்கிறார். தேவனோடுகூட அவருக்குச் சமமானவராக இருக்கிறார். அப்படிப்பட்டவரே மனித உருவெடுத்தார். மரியாளுடைய கர்ப்பத்தில், பரிசுத்த ஆவியானவரால் உருவாகிக் கர்ப்பந்தரிக்கப்பட்டார். இவரே பெத்லகேமில் பிறந்தார். பெலவீனமான ஏழைக்குழந்தையாயிருந்தபோதிலும், சர்வ வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும், சமாதானத்தின் பிரபுவாகவும் இருந்தார். தெய்வீகமும் மனுஷத் தன்மையும் அவரில் ஒன்றாகக் காணப்பட்டன.

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்ய அவர், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டார். இரட்சிப்பின் செயலை நிறைவேற்ற மனுஷனானார். பாவிகளை மீட்கவே உலகில் வந்தார். இதுவே அவர் வந்ததின் முக்கிய நோக்கம். அவருடைய முக்கிய ஊழியம். இதற்காகவே வந்தார். பாடுகள்பட்டார், மரித்து உயிர்த்தெழுந்தார். நாம் மறுபடியம் பிறக்கவே, இவர் ஒருமுறை பிறந்தார். நாம் இரண்டாம் மரணத்திற்கு ஆளாகாதிருப்பதற்காக, அவர் ஒருமுறை மரித்தார். அவருடைய அன்பு அளவற்றது. அதற்கு ஈடு இணையில்லை. வெற்றி வேந்தராய் உயிர்த்தும் எழுந்தார். பரத்துக்கேறினார். மகிமையோடு திரும்பவும் வருவார். நியாயத்தீர்ப்பளிப்பதற்காகவுமே இயேசு பெத்லகேமில் பிறந்தார். உனது இரட்சிப்பைப் பெத்லகேமிலிருந்து பெற்றுக்கொள். இதுவே இந்த நாளின் மகிழ்ச்சி. வல்லமையோடும் மகிமையோடும் இயேசு இவ்வுலகை நியாயத்தீர்க்கத் திரும்பவும் வருவார்.

இறைவன் மானிடனானது
இகத்திற்கு மகிழ்ச்சியாம்
இகத்தில் சமாதானமும்
இறைவன் நாட்டில் மேன்மையாம்

என்னை இழுத்துக் கொள்ளும்

ஜனவரி 11

“என்னை இழுத்துக் கொள்ளும்” உன். 1:4

ஒவ்வொரு நாள் காலையும் நேசர் நம்மை அழைக்கிற சத்தம் எவ்வளவு இனிமையும் அருமையாயும் இருக்கிறது. ஆனால் அவரின் அழைப்பு மட்டும் கேட்டால் போதுமா? நம்முடைய இருதயம் அதற்குச் செவி கொடுக்க வேண்டும். மந்தமான ஆத்துமாவும், சோம்பலான இருதயமும் இன்னும் பல காரியங்களும் தேவ பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளாதபடி நம்மைத் தடுக்கின்றன. அவர் நம்மை அழைக்கிறது நமக்குத் தைரியத்தைக் கொடுக்க வேண்டும். அவர் நமது தகப்பன், நாம் தாராளமாய் அவரிடம் பிரவேசிக்கலாம். என்ன தேவையானாலும் அவைகளை பெற்றுக்கொள்ள அவரிடம் போகலாம். அவர் பட்சபாதமுள்ளவரல்ல. அவர் வார்த்தைகள் உண்மை நிறைந்தது. அது பரிபூரணமாய் நமக்குண்டு. பரிசுத்தவியானவர் நம்மை இழுக்கும்போது அவரிடம் சென்றிடவேண்டும். அப்போதுதான் நமது சுயம், பலவீனம் எல்லாம் நீங்கி நமக்கு ஆவிக்குரிய வாழ்வில் புத்துணர்ச்சி கிடைக்கும். ‘என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான் என்று இயேசு சொன்னார்.” இந்த வசனம் தேவன்நம்மீது வைத்துள்ள அநாதி அன்புக்கு சாட்சி கொடுக்கிறது. ‘அநாதி நேசத்தால் உன்னை நேசித்தேன், இரக்கம் உருக்கத்தால் உன்னை இழுத்துக் கொண்டேன்” என்றார்.

ஆத்தும நேசர் நம்மை இழுக்கிற பாசம் எவ்வளவு பெரியது. நாம் முழு இருதயத்துடன் அவர் வார்த்தைகளுக்கு இணங்குவோம். அன்பின் கயிற்றால் நம்மை இழுத்துக்கொண்டது எவ்வளவு பெரிய கிருபை. முழு ஆத்துமாவோடு அவர் வழிகளில் நடப்போம். உலகம் பாவத்துக்கும் இன்பங்களுக்கும் நம்மை இழுக்கும்போது நாம் செல்லாமல், சழங்காசனநாதர் பாதத்தில் அமர்ந்து, அவர் பிரசன்னத்தில் மகிழ்ந்து வாழ அவரின் பாதைகளில் நடப்போம். அவர் உங்களை சேர்த்துக்கொள்வாராக.

கிருபாசனத்துக்கு நேராய் என்னை
உம்மண்டை இழுத்துக்கொள்ளும்
மரியாள் போல் உம் பாதத்திலிருந்து
கற்றுக்கொள்ள உதவி செய்யும்.

நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்

மார்ச் 16

“நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்.” 1.நாளா. 4:10

இது யாபேஸ் பண்ணின ஜெபம். எந்தக் கிறிஸ்தவனும் இப்படித்தான் ஜெபிப்பான். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடு அவர் வேதனையைக் கூட்டார் என்றே அவன் அறிவான். கர்த்தர் ஆசீர்வதித்தால் அது பலிக்கும். அவர் கிறிஸ்துவில் எல்லா ஞான நன்மைகளாலும் பரமண்டலங்களில் இருந்து ஆசீர்வதிக்கிறார். சகலமும் நமக்கு இயேசுவில் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினாலும் ஜெபத்தினாலும் அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபைமேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.  அவர் இன்னும் நம்மை ஆசீர்வதித்து வருகிறார். உன் அப்பத்தையும் தண்ணீரையும் அவருடைய அன்பால் சாரம் ஏற்றப்படும்போது வெகு இனிமையாய் இருக்கும். புதியதாக்கும் கிருபையினாலும், சீர்ப்படுத்தும் கிருபையினாலும் முன் செல்லும் கிருபையினாலும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

நம்முடைய ஆத்துமாவைப்போல் என்றும் உள்ளதுமான விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருக்குச் சந்தோஷம். நம்மை  மகிமையாய், நித்தியமாய் ஆசீர்வதிக்கும்படி, நமக்காக மரிக்கும்படி தமது குமாரனைக் கொடுத்தார். நம்மை ஆசீர்வதித்து ஆசீர்வாதமாக்குவேன் என்றே வாக்களித்திருக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று உணருவதே ஓர் ஆசீர்வாதம். அதை உணருகிற ஒவ்வொருவனும் அதைக் கருத்தாய் தேடுகிறான். ஆகவே நாமும்கூட அவர் வசனத்தை வாசித்து, அவர் அன்பை விசுவாசித்து, அவர் ஆசீர்வாதத்திற்காகக் கெஞ்சி யாபேசைப்போல் நல்வாக்கைப் பெற்றுக்கொள்வோமாக.

முடிந்தது என்று சொன்னாரே
அவ்வாக்கைக் கேள்
அது கடைசி வார்த்தை ஆனதே
அதனால் திடன் கொள்.

அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை

ஜனவரி 27

“அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை.” உபா. 31:6

தேவன் சொன்னதை நாம் எதிர்பார்ப்பது வீணாய் இராது. அவர் உண்மையை நாம் நம்புவதினால் நமக்குக் குறை வராது. தமது வார்த்தையை அவர் மறக்கவுமாட்டார். நம்முடைய நன்மையை விடவுமாட்டார். தம்முடைய ஜனங்களை அவர் கைவிட்டதுமில்லை, கைவிடப் போகிறதுமில்லை. உங்களுடைய விசுவாசம் பவீனமாயிருக்கலாம். நீங்கள் பயம் நிறைந்தவர்களாயிருக்கலாம். சந்தேகங்கள் உங்களைத் துன்பத்துக்குள்ளாக்கலாம். உங்கள் குறைகள் உங்களைத் திடுக்கிடப் பண்ணலாம். ஆனாலும் தேவன் உங்களைக் கைவிடவே மாட்டார். ஏன் அவர் கைவிட வேண்டும்?

அவர் தமது கிருபையால் உன்னை அழைக்கும் முன்னே உன் குறைவையும் நிர்பந்தத்தையும் உன் அபாத்திர தன்மையையும் பார்த்தார். உனது நிகழ்கால நிலைமையை அவர் அறியாதவரல்ல. அவர் உனக்கு வாக்களித்தபோது அது அவருக்குத் தெரிந்திருந்தது. உன்னை மகிமைப்படுத்திக் கொள்வார். அவரை நம்புகிறதினால் நீ தவறிப் போகக்கூடாது. எந்தக் கவலையையும் அவர்மேல் வைப்பதில் தயங்கக்கூடாது. அவருடைய உண்மையான வார்த்தையை நம்புவதில் உன் விண்ணப்பத்திற்கு பதில் கொடுப்பதில் தவற மாட்டார். உன் காரியம் ஒருவிதமாய் கண்டாலும் உன் பாதை விருப்பமில்லாமல் போனாலும் அவர் வார்த்தை உண்மையுள்ளது. அவமதிக்கிற துன்பத்தைவிட அதிகமாய் வர விடமாட்டார்.

தேவன் உன் பக்கமிருந்தால்
நீ பயப்படுவானேன்?
அவர் பலம் தருவதால்
பலவீனனென்பானேன்.

என்ன செய்தேன்

நவம்பர் 12

“என்ன செய்தேன்?” எரேமி. 8:6

ஒரு நாளின் இறுதியில் நமது செயல்களை இப்படி விசாரிக்கும் பொழுது, இக்கேள்வி அவசியம் வரும். நம் இருதயத்தை நாம் ஆராய்வதோடு, நமது நடத்தையையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றிரவு நம்மையே நாம் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமாக. தேவனுக்கு விரோதமாக நான் இன்று என்ன செய்தேன்? அவருடைய கட்டளைகளை மீறினேனா? அவருடைய வசனத்தை விசுவாசியாதிருந்தேனா? அவருடைய தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தினேனா? அவடைய அன்பு மைந்தனை அசட்டை செய்தேனா? அவருடைய செயல்களுக்கு விரோதமாக முறுமுறுத்தேனா? அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நின்றேனா? என் இருதயம் அவருடைய நியமங்களைப் புறக்கணித்து அவருடைய முகத்திற்கு முன்பு விரோதம் பேசியதா? அவருடைய அன்பைச் சந்தேகித்தேனா? அவருடைய உண்மையைப்பற்றி தவறாக நினைத்தேனா? இன்று நான் கர்த்தருக்காக என்ன செய்தேன் என்று சோதித்துக் கொள்வோம்.

நோயாளிகளைச் சந்தித்தேனா? ஏழைகளுக்கு உதவினேனா? துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னோ? சபையில் என் கடமைகளைச் செய்தேனா? பின் வாங்கியவர்களைத் திருப்ப முயற்சித்தேனா? அவருடைய மகிமைக்காக இன்று நான் செய்ததென்ன? அவருடைய இராஜ்ய விருத்திக்காக என்ன செய்தேன்? என்னையே நினைத்துப் பெருமை கொண்டேனா? கிறிஸ்து நாதருக்காக இன்று என்ன செய்திருக்கிறேன் என்று யோசி. அவருக்காக உழைக்க தீர்மானித்துக்கொள். தீமையை விட்டு விலகி நன்மை செய்.

குற்றம் நிறைந்த மனதோடு
உம்மண்டை நான் வந்தேன்
சுத்தமாக்கும் என்னை நீரே
உம்மண்டை சேர்த்தருளும்.

தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்

ஓகஸ்ட் 07

“தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்” சங்.147:11

இரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம் செய்தவர்களாகையால் ஒரு நீதியும் நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த இரக்கத்தினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. ஏனென்றால் இரக்கத்தில்தான் தேவன் பிரியப்படுகிறார். பாவம் முதலாவது தேடுவது இரக்கம்தான். மனிதர் தேவனிடம் தேடுவதும் இந்தக் கிருபைதான். அநேகர் விசுவாசத்தினால் கிடைக்கும் இந்த நிச்சயம் அற்றவர்கள். தேவன் என்னை நேசித்து எனக்காக தம்மைத்தந்தார் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். தேவனைப் பிதா என்று அழைக்கமாட்டார்கள். வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி, உபதேசங்களை ஏற்றுக்கொண்டு கர்த்தர் என் தேவன் தேவன் என்று சொல்வது அவர்களுக்குத் துணிகரமாயிருக்கும்.

எப்படிப்பட்டவராயினும் தேவனிடம் வரும்போது அவர் இரக்கமுள்ளவர் என்று நம்பியே வருகிறார்கள். தேவ கிருபை அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப்படுத்தி, சந்தோஷப்படுத்துகிறது. தேவன் கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறபடியால் தங்களுக்கும் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள். இரட்சிக்கப்படுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆகவே, தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்பது எவ்வளவு அருமையான ஒரு காரியம். அவர்கள் ஜெயிப்பது அவருக்குள் பிரியமானபடியால் அவர்களுக்கு உத்தரவு கொடுப்பார்.

தேவ பயமுள்ளவர்
கர்த்தருக் கருமையானவர்
அவர் கிருபை தேடுவோர்
அவர் அன்பைக் பெறுவோர்.

Popular Posts

My Favorites

அவனைக் கனப்படுத்துவேன்

ஜனவரி 07 "அவனைக் கனப்படுத்துவேன்"  சங். 91:15 என்னைக் கனப்படுத்துகிறவர்களை நான் கனப்படுத்துவேன். தற்பெருமை கர்த்தரைக் கனவீனப்படுத்தி நமக்குக் குறைவையும் அவர்கீர்த்தியையும் உண்டாக்குகிறது. தன்னை வெறுத்தலே மேன்மைக்கும் கனத்துக்கும் வழி நடத்தும். கிறிஸ்தவன் தன்னை வெறுத்து...