தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 32

என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

செப்டம்பர் 21

“என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” மீகா 7:7

தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது. அவர் என் தேவனாக இருக்கிறபடியால் என் பிதாவாகவும் இருக்கிறார். என் நிலைமை அவருக்குத் தெரியும். எனக்குரிய பங்கை அவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் எனக்கும் கிருபையையும், ஜெபத்தின் ஆவியையும் தந்திருக்கிறார். அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறர். தமக்குப் பயன்படுகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி, அவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு, அவர்களை இரட்சிப்பதாகவும் வாக்கு அளித்திருக்கிறார்.

பிரியமானவர்களே, நாம் தேவனை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய விண்ணப்பங்களை அவரிடம் கூறி, நம்முடைய ஜெபங்களை ஏறெடுத்து, அவருடைய உதவியையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் எப்பொழுதும் தேடுவோமாக. அவர் நம்மைக் கேட்டருளுவார். இன்று நண்பர், நாளை பகைவராகலாம். ஆனால் தேவன் அவ்வாறு மாறுபவரல்ல. மனிதர் நம்மை அசட்டை செய்யலாம். ஆனால் தேவன் ஓருக்காலும் அசட்டை செய்யார். ஆகவே நாம் மீகாவைப்போல், நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருள்வார். என் சத்துருவே எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று கூறலாம். அவர் தாமதித்தாலும், மறவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார்.

ஜெபித்துக் கொண்டே இரு
உன் ஜெபம் தேவன் கேட்பார்
ஞான நன்மையாலுனை நிரப்பி
பரம அன்பால் சோதிப்பார்.

நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்

யூலை 29

“நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்” 1.சாமு 14:36

நாம் சுபாவப்படி தேவனுக்குத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்டச் சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான் இருக்கிறோம். ஜெபம்பண்ணும்போது கிருபாசனத்தண்டையில் நாம் அவரைச் சந்திக்கிறோம். இதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் சில சமயத்தில் அவர் சமுகத்திதால் இருக்கிறோம். ஜெபமானது தேவனுக்குக் கிட்டி சேருதல் என்பதை நாம் மறுக்கக்கூடாது. அடிக்கடி ஜெபம்பண்ணினால் அடிக்கடி அவரிடம் கிட்டி சேருவோம். இதற்காகவே அவர் இருக்கிறாரென்று விசுவாசிக்க வேண்டும். பிராயச்சித்த பலியை ஏற்றுக்கொண்டு அவர் வசனத்தை அதிலும் அவர் அருளின் வாக்குத்தத்தங்களை நம்ப வேண்டும். நமக்கு கேட்கிற விருப்பமும் வேண்டும். நமக்கு உள்ளபடி தேவையானவற்றையும் வாக்களிக்கிறார் அல்லவா?

நியாயமாய் கேட்கும்போது நிச்சயமாய் கிடைக்குமென்று கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தையே தஞ்சமென்று பற்றிப் பிடிக்க வேண்டும். கேட்டது கிடைக்கும்வரை தொடர்ந்து கேட்கவேண்டும். அவர் சந்நிதியில் பிள்ளையைப்போலவும், பாவியைப்போல் பணிவோடும், அவரை அண்டினவர்கள்போல அடிக்கடி போக வேண்டும். சுத்தமான சாட்சியோடும், கோபமின்றியும், சந்தேகமின்றியும், இருதயத்தில் அக்கிரமத்தை பேணி வைக்காமல் போக வேண்டும். தனிமையிலும், குடும்பத்திலும், தேவாலயத்திலும், தெருவில் நடக்கும்போதும் அவரைக்கிட்டி சேருவாமாக. அவர் நம்மை அழைக்கிறார். புத்தி சொல்ல வா என்று அழைக்கிறார். அவர் சமூகத்தில் போவோமாக. அவர் அழைக்கும்போது போகாவிட்டால் அது பாவமாகும். நாமும் வருத்தப்படுவோம்.

கர்த்தாவே இரங்குவேன்,
கடைக் கண்ணால் பாருமேன்
பாவப் பேயைத் தொலைத்திடும்
உம்மைச் சேரச் செய்திடும்.

வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்

ஓகஸ்ட் 25

“வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்” எபி.10:23

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இலவசமாய் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேவன் உண்மையுள்ளவர். ஆகவே அவர் அவைகளைச் சொன்னபடியே நிறைவேற்றுவார். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு நித்திய ஜீவனையும் பாவ மன்னிப்பையும், இருதயசுத்தத்தையும், சமாதானத்தையும், கிருபையையும், வாக்களித்திருக்கிறார். இவைகளை நாம் நம்பி அவர் அப்படியே நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்க வேண்டும். அவர் தம்முடைய வாக்குகளுக்கு உண்மையுள்ளவர். அது அவருடைய தன்மை. அவர் அளவற்ற சம்பூரணமுள்ளவராயிருப்பதனாலும், ஒழுங்குப்படுத்தப்பட்ட அவர் உடன்படிக்கை உறுதியாய் இருப்பதினாலும், அவர் ஆணையிட்டு இருப்பதினாலும், அவர் தன் அன்பான குமாரனைக் கொடுத்ததினாலும், பரிசுத்தவான்களின் சாட்சியினாலும், சபையின் சரித்திரத்தினாலும், வாக்குகள் கொடுக்கப்பட்ட நோக்கத்தினாலும் இது தெரிய வருகிறது.

அவர் அப்படியே செய்வார் என்பது கூறப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். கர்த்தர் உண்மையுள்ளவர். ஆகையால் அவர் எல்லா பொல்லாங்கினின்றும் விலக்கி காப்பார் என்று விசுவாசியுங்கள். நாம் நன்மை செய்து, உண்மையுள்ள சிருஷ்டிகராகிய அவரண்டை நம் ஆத்துமாக்களை ஒப்புவிக்க வேண்டும். அவருடைய வார்த்தை நிறைவேறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. வானமும் பூமியும் ஒழிந்துபோம். அவர் வார்த்தை மாறவே மாறாது. அவருடையத் தன்மையைப்போல அதுவும் மாறாது. தேவனுடைய வாக்கைப்போல உறுதியுள்ளது ஒன்றும் இல்லை.

தேவன் உரைத்த சொற்படி
குமாரனைத் தந்தார்
அவர் வாக்குபண்ணினதெல்லாம்
அவ்வாறே நிறைவேற்றுவார்.

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13

“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” மாற்கு 9:24

நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது. சில வேளைகளில் தேவன் சொல்கிறது மிகவும் நல்லதாயிருக்கும்போது அது உண்மைதானோவென்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. நாம் செய்த பாவங்களை நினைத்து, இவ்வளவு பெரிய மகிமையான காரியங்கள் நமக்குக் கிடைக்குமோவென்று சந்தேகம் கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறபடி, நல்ல தேவன் பெரிய பாவிக்கு பெரிய நன்மைகளை வாக்களிக்கிறார் என்று நம்புவது சுலபமல்ல. நாம் அவைகளை உறுதியாய் நம்பி, நமக்குச் சொந்தமாக்கி கொண்டு, நமக்குரியதாகச் சொல்லி ஜெபிக்கிறதும் அவ்வளவு எளிதல்ல. எங்கே துணிகரத்துக்கு இடங் கொடுக்கிறோமோ என்று பயந்து அவிசுவாசத்துக்குள்ளாகி விடுகிறோம். சாத்தான் சொல்வதைக் கேட்டு சந்தேகத்திற்கும் பயத்திற்கும் இடம் கொடுத்து விடுகிறோம். நான் சத்தியத்தை சொன்னால் ஏன் நம்புவதில்லையென இரட்சகர் கேட்கிறார். வாக்குத்தத்தம் உண்மைதானா? அது பாவிகளுக்குரியதா? கிருபையினின்று அது பிறந்திருக்கிறா? தேவ அன்பும் இரக்கமும் மேன்மை அடைய அது நமக்குக் கொடுக்கப்பட்டதா?

அப்படியானால் தேவ வார்த்தைகளை நம்பி பற்றிக்கொள்ளவும், தேவன் சொன்னபடியே செய்வாரென விசுவாசிக்கவும் வேண்டும். பாவங்களை நாம் எங்கே கொண்டுபோட வேண்டியதோ, அங்கே நம்முடைய அவிசுவாசத்தையும் கொண்டு போடவேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிடில் இயேசுவிடம்தான் கொண்டு போகவேண்டும். அதை அவரிடம் அறிக்கையிட்டு சீஷர்களைப்போல் ‘கர்த்தாவே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்’ என்று கெஞ்சுவோமாக. அல்லது மேலே அந்த மனிதன் சொன்னதுபோல, ‘என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்’ என்று கேட்போம்.

பிழைகளெல்லாம் மன்னித்திரே
விசுவாசிக்க செய்யுமே
உம்முடையவன் என்று சொல்லி
முத்திரை என்மேல் வையுமே

அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்

யூன் 10

“அவர்களைச் சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல்…” எபி. 2:11

ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு மிக பெரியதென்று உணருவோமானால் இந்த வசனத்தில் சொல்லியிருப்பது ஆச்சரியமாய் இருக்கும். இந்த உறவு எத்தனை பெரியது. அவர் பரிசுத்தர். நாம் அசுத்தர். அவர் பெலவான். நாம் பலவீனர். அவர் பாக்கியவான். நாம் நிர்பந்தர். அவர் சர்வ ஞானி. நாம் அறிவீனர். அவர் மகத்துவமானவர். நாம் அற்பர். அவர் வாழ்த்துக்குரியவர். நாம் இழிவுள்ளவர்கள். இவ்வளவு வேறுபாடுகளிருந்தாலும் அவர் நம்மை அங்கீகரித்துக்கொள்கிறார். நமக்கும் அவர்களுக்கும் ஒருவகை ஒற்றுமை இருக்கிறது. நம் இருவருக்கும் பிதா ஒருவர்தான். அவர் தேவன்.

நேசருக்கு இருக்கிற சுபாவமும், ஆவியும் சாயலும் நமக்கும் ஒருவாறு உண்டு. அவருக்கும் நமக்கம் இருக்கும் ஒரே வேலை வேதனை மகிமைப்படுத்துவது மட்டும்தான். கர்த்தருடைய வேலைகளில் இயேசுவுக்கும் நமக்கும் இருக்கும் வாஞ்சை ஒன்றுதான். அவரின் நேக்கமே நமது நோக்கம். அவரின் வாசஸ்தலம்தான் நமக்கும் வீடு. நாம் அவரைக் குறித்தும் மற்ற தேவனுடைய பிள்ளைகளைக் குறித்தும் அடிக்கடி வெட்கப்படுகிறோம். ஆனால் இயேசுவோ நம்மைக் குறித்தும் வெட்கப்படுவதே இல்லை. இவர் இப்பொழுதும், பிதாவுக்கு முன்பாகவும் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும் நம்மைச் சொந்தம் பாராட்டுகிறார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து நமக்காகப் பரிந்து பேசுகிறார். வருங்காலத்தில் பிதாவினால் ஆசீhவதிக்கப்பட்டவர்கள் என்றும், சகோதரர் என்றும் அழைப்பார். ஆண்டவரே நம்மைச் சகோதரர் என்று அழைக்கும் போது நாம் சில காரியங்களில் வித்தியாசப்பட்டாலும் ஒருவரைக்குறித்து ஒருவர் ஒருக்காலும் வெட்கப்படாதிருப்போமாக.

நீசப் புழுவை இயேசு
சகோதரர் என்கிறார்
தேவ தூதர்களுக்கும் அவர்
இம்மேன்மையை அளியார்.

நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்

பெப்ரவரி 09

“நானோ ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கிறேன்.” சங். 109:4

விழிப்பும் விண்ணப்பமும் எப்போதும் இணைபிரியாதிருக்க வேண்டும். ஜெபிக்கிற கிறிஸ்தவன் விழிக்க வேண்டும் விழிக்கிற கிறிஸ்தவன் ஜெபிக்கவேண்டும். ஒன்று மற்றொன்றுக்குத் துணை. நம்முடைய வேலைகளைப் பார்க்கும்போதும் தினசரி அலுவல்களைக் கவனிக்கும்போதும் ஜெபம் மிகவும் அவசியம். அது எண்ணற்ற தீமைகளுக்கு நம்மைக் காத்து மேலான நன்மைகளை நமக்கு கொண்டு வருகிறது. ஜெபத்திற்குச் செவிகொடுப்பதே தேவனுக்குப் பிரியம். உத்தமருடைய விண்ணப்பம் அவருக்குப் பிரியம். அவரை நோக்கி மன்றாடுவது அவருக்குச் சந்தோஷம் என்று எண்ணத்தோடு அவர் சமுகம் போவோமாக.

ஒரு தகப்பனைப்போல் அவர் என்னைக் கண்ணோக்குகிறார். தகப்பனைப்போல் செவி கொடுக்கிறார். அவர் சிம்மாசனத்தண்டை நான் சேராமல் என்னுடைய விண்ணப்பங்களை ஆத்திரத்தோடு செய்து முடிக்கும்போது அவர் விசனப்படுகிறார். தைரியமாய் வா என்று அவர் அழைக்கிறார். அவர் கூப்பிடுதலைக் கவனியாதேப்போனால் ஏதாவது ஓரு துன்பத்தை அனுப்புவார். ஒரு பூசலைக் கட்டளையிடுவார். நம்மை அவர் சிம்மாசனத்தண்டை துரத்த ஒர சத்துருவை எழுப்பி விடுவார். நமது துயரங்கள் நம்மைப் பார்த்துத் தெளிவாய்ச் சொல்கிறதை நாம் கவனிப்போமானால் அவைகள், ‘முழங்கால் படியிடு. உன் ஜெப அறைக்குப்போ அறைக்குப் போ, உன் தேவனை நோக்கிக் கூப்பிடு’ என்று கூறும் சத்தங்கள் கட்டாயம் கேட்கும்.

இடைவிடாமல் ஜெபம்பண்ண
தாரும் வரம் தேவனே
நான் உம்மோடே நடக்க
உமதாவி அருளுமே.

கர்த்தருக்கே காத்திரு

பெப்ரவரி 27

“கர்த்தருக்கே காத்திரு.” சங். 37:7

எப்பொழுதுமே பாவியானவன் அமைதலற்றவன். அவன் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டபடியால் அவன் ஆவை அவனை நிலையற்றவனாக்குகிறது. கிறிஸ்து அவனைப் பார்த்து என்னிடத்தில் வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். விசுவாசி இளைப்பாறுதல் பெற்றிருந்தாலும், சோதனைகளிலும், கவலைகளிலும், அவிசுவாசத்தாலும் அடிக்கடி இழுக்கப்பட்டு, பின்னும் அமைதலய்யவனாகிறான்.

அன்பானவர்களே, உங்களில் கவலைக்குரிய காரியம் இவைகளாய் இருக்கக்கூடாது. நீ கர்த்தரில் இளைப்பாற்றி காத்திருக்க வேண்டும். தேவ சமுகமே உனக்கு ஆனந்தமாய் இருக்க வேண்டும். தேவ சித்தத்திற்குக் காத்திருக்க வேண்டும். அவர் திட்டமிடுகிறதெல்லாம் உன் நன்மைக்காகத்தான் இருக்கும். நீங்கள் பரிசுத்தமாய் வாழவேண்டுமென்பதே தேவசித்தம். தேவ அன்பில் இளைப்பாற்றிக் காத்திருக்கவேண்டும். அவர் சமுகத்தில் அமர்ந்து அவரைப்பற்றி தியானம் பண்ணவேண்டும். தேவ இரக்கத்திற்குக் காத்திருந்தால் இளைப்பாறிக்காத்திரு. அது உண்மையுள்ளது, மாறாததது, தேவனுக்கும் உனக்கும் ஐக்கியம் தேவை. இந்த ஐக்கியத்தில் இளைப்பாறு. அவர் உன் பிதா. கரிசனையுள்ள பிதா. ஞானமுள்ள பிதா. சகாயஞ் செய்யும் பிதா. தேவன் இருக்கிறவிதமாய் அவரைத் தரிச்சிக்க அவரில் காத்திரு. அவர் சகலத்தையும் உன் நன்மைக்காகவும் தன் மகிமைக்காகவும் நேர்ப்படுத்துவார். கர்த்தருக்குக் காத்திரு, பாக்கியமுள்ளவனாயிரு.

தேவ தாசர் தேவ சித்தம்
காத்திருந்து அறிவர்
சோதிக்கப்பட்டும் நித்தம்
அவர் கடாட்சம் பெறுவர்.

அவருக்குக் காத்துக்கொண்டிரு

பெப்ரவரி 07

“அவருக்குக் காத்துக்கொண்டிரு.” யோபு 35:14

உன் காலங்கள் அவர் கரத்தில் இருக்கிறது. உன் பேர் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அவர் உன் தேவனாயிருப்பேனென்று வாக்களித்திருக்கிறார். அவர் சொன்னபடியே செய்கிறவர். இவைகளை மறவாதே. நமக்கு தேவையான எந்த நன்மையானாலும் கொடுப்பேனென்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் வாக்கு உறுதியும் நம்பிக்கையுமானது. அவைகளையே நம்பிக் கொண்டிரு. உன் இருதயம் பயப்படலாம். உன் மனம் திகைக்கலாம். உன் சத்துருக்கள் உன்னை நிந்திக்கலாம். ஆனால் உன் பாதைகளோ கர்த்தருக்கு மறைக்கப்படுவதில்லை. ஆகையால் அவரையே நம்பிக்காத்திரு.

ஆதிமுதல் அவர் வார்த்தை உண்மையாகவே இருக்கிறது. இதை அவரின் அடியவர்கள் பரீட்சித்து பார்த்திருக்கிறார்கள். உண்மைதான் அதன் கிரீடம். ஆதலால் நீ உறுதியாய் நம்பலாம். உன் நம்பிக்கையைப் பலப்படுத்து. உன் ஆறுதல் இன்னமாய் இருக்கட்டும். இப்பொழுதும் நீ குழந்தையைப்போல் கீழ்ப்படி. அவரின் மனமோ உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உனது தப்பிதங்களுக்கு, உன்னை அழிக்க ஒரு பட்டயத்தை பிடித்திருப்பாய். அவர் தோன்றினாலும் தோன்றலாம். அப்போது நீ அவர் என்னைக் கொன்றுப்போட்டாலும் அவுர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று சொல்ல வேண்டும். அப்போது நீ காட்டின நம்பிக்கையின் நிமித்தம், உன்னை மேன்மைப்படுத்தி, திரண்ட ஐசுவரியமுள்ள மேலான தலத்திற்கு கொண்டுபோவார்.

கர்த்தாவே உமது வழிகள்
மிக ஞானமுள்ளவைகள்
கோணலான வழிகளெல்லாம்
உமதன்பினால் உண்டானவையே
ஆகையால் நான் நம்புவேன்
உம்சித்தம் என் பாக்யம் என்பேன்.

உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்

ஜனவரி 29

“உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.”  சங். 119:11

பழைய உடன்படிக்கையின் பலகைகள் பெட்டியில் வைத்து பரிசுத்த ஸ்தலத்தில் பத்திரப்படுத்தப்பட்டது. புது உடன்படிக்கையோடு விசுவாசிகளின் இருதயத்தில் வைத்து பத்திரப்படுத்தப்பட வேண்டும். தினசரி பாரத்தோடு கூடிய ஜெபத்திலும் தியானத்திலும் நாம் தேவனுடைய சுத்த வசனத்தை அறிந்து அனுபவித்து, அதைப் பத்திரப்படுத்தக் பார்க்க வேண்டும். இது தினசரி போஜனத்துக்காக நாம் சேர்க்க வேண்டிய வேலைக்குச் சட்டம். நமது நம்பக்கைக்கு ஆதாரமாகிய கிருபைகளையும், விலையேறப் பெற்ற வாக்குத்தத்தங்களையும் நாம் பத்திரப்படுத்த வேண்டும்.

நமது இருதயத்தில் பத்திரப்படுத்தினால் இந்த விலையேறப் பெற்ற பொக்கிஷத்தை ஒருவனும் நம்மை விட்டு எடுத்துக் கொள்ளமாட்டான். நமக்கு தேவைப்படும்போது நாம் அதைத் தேட வேண்டியதில்லை. ஆகையால் அதன் அருமையை அறிந்து அதிலுள்ளதை மதித்து அதை ஆராய்ந்துப் பார்த்து, தியானஞ் செய்து தினசரி ஆகாரமாய் அதை உள்கொள்ள வேண்டும். நமது மனதில் பத்திரப்படுத்தாமல்விட்டால் நாம் பரிசுத்தமடைய மாட்டோம். நம்முடைய வாழ்வில் கனிகளும் இருக்காது. இருதயத்தில் இருந்தால் தான் நடக்கையில் தெரியும். நாம் அனைவரும் வாசிக்கும்படியான நிருபங்களாயிருக்கும்படி தேவன் தமது பிரமாணங்களை நமது மனிதில் எழுத வேண்டுமென்று தினமும் ஜெபிப்போமாக.

தேவ வாக்கு மதுரம்
அதன் போதகம் சத்தியம்
அறிவு அதனால் வரும்
ஆறுதலும் தரும்.

தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து

செப்டம்பர் 13

“தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து” கொலோசெயர் 1:10

பூமியிலே நமக்கு இருக்கும் அறிவு குறைவுள்ளதே. நாம் அறிந்து கொண்டது அற்பம்தான். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய வசதிகள் நம்மிடம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் மனதில்லாதவர்களாய் நாம் இருக்கிறோம். ஆண்டவரை அறிந்தால் மட்டும்தான், நம்மால் அவரை நேசிக்க முடியும். அவரை நம்பக்கூடும். இல்லாவிடில் நாம் அவருடைய மகத்துவங்களைப் போற்றவும் மாட்டோம். அவரைத் துதிக்கவும் மாட்டோம். தேவனை நாம் தெரிந்து கொண்டால்தான், அவரை நாடி, அவருடைய கோபத்துக்குப் பயந்து, அவருக்குக் கீழ்ப்படிவோம்.

பவுல் இந்தச் சத்தியத்தை அறிந்து கொண்டபடியால் கொலோசெயர் தேவ அறிவில் தேறவேண்டும் என்று ஜெபம்பண்ணினான். நாம் அவரை அறிய வேண்டுமானால், அவருடைய சிருஷ்டிகளையும், செயல்களையும் கவனித்து, அவருடைய வேதத்தை ஆழ்ந்து கற்க வேண்டும். தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே வெளிப்படுத்துகிறார். இதனாலேயே இயேசு கிறிஸ்து என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று கூறுகிறார்.

நீங்கள் தேவனை அறிந்திருக்கிறீர்களா? முன்பு நீங்கள் அவரை அறியாதவர்களாக இருந்ததினால், நன்றியில்லாதவர்களாயிருந்தீர்கள். உங்கள் அறிவு குறைவுள்ளது. ஆகையால் அவரைப்பற்றி மேலும் அறியப் பிரயாசப்படுங்கள். ஒன்றான மெய்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்கிறார் இயேசு. இதை மனதிற்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டால் நித்திய ஜீவன் பெறுவீர்கள். வற்றாத பேறுகளைப் பெறுவீர்கள். தேவ அன்பில் பெருகுவதே உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.

எம் உள்ளத்தில் நீர் பிரகாசியும்
அதை உம்மைப்பற்றி அறிவால்
என்றும் நிரப்பிடும் உம்மை
அறிவதே எமக்கு நித்திய ஜீவன்.

Popular Posts

My Favorites

நாம் அவரை அறியும்படியாக

மார்ச் 25 "நாம் அவரை அறியும்படியாக" பிலி. 3:10 அப்போஸ்தலனாகிய பவுல் ஏழு விசேஷித்த காரியங்களைக் குறித்து விருப்பங்கொண்டான். அவைகளை இந்தச் சுருக்கமான நிருபத்தில் காணலாம். அவை அத்தனையும் கிறிஸ்துவைப் பற்றினதுதான். பவுல் எல்லாவற்றிற்கும் இயேசுவையே...