சமாதானம் சமாதானம்

ஏப்ரல் 05

“சமாதானம் சமாதானம்.” ஏசாயா 57:19

இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே சொல்லுகிறது.

பாவத்தைப் பரிகரிக்க இயேசு மரித்ததால் சமாதானம், மோட்சத்தில் உனக்காகப் பரிந்து பேச இயேசு உயிர்த்ததால் சமாதானம், சகலத்தையும் ஆளும் இயேசுவின் கரத்தில் உன் பிரச்சனைகள் இருப்பதால் உனக்குச் சமாதானம். கிறிஸ்து உன்னை நேசிக்கிறதினால் உனக்குச் சமாதானம். அவரின் மரணத்தில் நீ ஒப்புரவாக்கப்பட்டபடியினால் உனக்குச் சமாதானம். மனம் கலங்கவேண்டாம், உன்னைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் எண்ணம் எல்லாமே சமாதானம். உன்னைக் குறித்துத் தேவனால் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் சமாதானம். பரலோகமும் உன்னோடு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்கிறது.

கிறிஸ்து உனக்காக மரித்தபோதும், உன் பாவம் தொலைந்தபோதும் உன் சமாதானம் நிறைவேறி முடிந்தது. உனக்குச் சமாதானம் உண்டாக்குகிற அவரையே நோக்கிப்பார். கெத்செமனே கொல்கொதா இவைகளை அடிக்கடி நினைத்துக்கொள். தேவனைச் சமாதானத்தின் தேவனாகவும் பரலோகத்தைச் சமாதானத்தின் வீடாகவும் சிந்தனை செய். உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்கிற வாக்கை அடிக்கடி தியானி. உன் மனதில் கர்த்தரின் சமாதானம் தங்கட்டும்.

விசுவாசம் வர்த்திக்கப்பண்ணும்
சமாதானம் அளித்திடும்
உமது பெலனை நம்புவேன்
பாவத்தால் கலங்கிடேனே.

நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்

ஏப்ரல் 29

“நான் ஐசுவரியவான் என்று சொல்லுகிறாய்”  வெளி 3:17

கர்த்தர் தமது ஏழை மக்களைப் பார்த்து உங்களுக்காக நான் சவதரித்து வைத்திருக்கிற காரியங்களைப்பற்றி, நீங்கள் ஐசுவரியமுள்ளவர்கள் என்று சொல்வது வேறு. பெருமைக்கொண்ட பேர் கிறிஸ்தவன் தான் ஐசுவரியவானென்று சொல்லிக்கொள்வது வேறு என்கிறார். ஆவியின் சிந்தையுள்ளவர்கள் எப்போதும் தங்களுடைய வறுமையை உணருகிறபடியால் தங்களை வெறுத்து தங்களுக்கு வேண்டியதையெல்லாம் கிறிஸ்துவின் நிறைவிலிருந்து பெற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுகிறார்கள். நம்முடைய பக்தியயும், செய்கையையும், ஐசுவரியத்தையும்பற்றி நாமே மெச்சிக்கொள்வது நல்லதல்ல. அப்படி செய்தால் இயேசுவைவிட்டு நம் கண்களைத் திருப்பிவிட்டோம் என்றே பொருள். சாத்தானும் நம்மேல் ஜெயமடைவான். இரட்சகர் பாதத்தில் விழுந்து நமது குறைவுகளை உணர்ந்து அவருடைய நிறைவிலிருந்து எதையும் செய்யவும் எந்தச் சிலாக்கியத்தையும் அனுபவிக்கத்தக்கதாக தேடும்போதுதான் நாம் சுகமுடன் இருப்போம்.

தங்களை ஐசுவரியவான்களென்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களைப் பார்த்து ஆண்டவர் நிர்ப்பாக்கியமுள்ளவரும், பரிதபிக்கத்தக்கவரும், தரித்திரரும், குருடரும், நிர்வாணியுமானவர்கள் என்று சொல்லுகிறார். இவர்கள் தம்மிடம் வந்து நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், வெண் வஸ்திரத்தையும் பார்வையடையும்படிக்கு கண்ணுக்குத் கலிக்கத்தையும்  வாங்கிக்கொள்ளச் சொல்கிறார். நம்மிடம் இருக்கும் எதையும்பற்றியும் நாம் பெருமை அடையாதிருப்போமாக. தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள், பரலோக இராஜ்யம் உங்களுடையது. ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ என்கிறார். நீங்கள் ஒருபோதும் எதிலும் பெருமையடையாமல் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

என் நிர்ப்பந்தத்தைப் பாருமேன்
நான் நிர்வாணி, குருடன்
ஒன்றுமற்ற பாவி நான்
முற்றிலும் அபாத்திரன்
உமது பாதம் நம்பினேன்
இல்லையேல் கெடுவேன்.

உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது

ஏப்ரல் 13

“உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறது” லூக்கா 10:20

எத்தனை பெரிய பரம சிலாக்கியம் இது. தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்படுதலும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கழுவப்பட்டு ஜீவபுத்தகத்தில் பேர் எழுதப்பட்டிருத்தலும், எருசலேமில் உயிருள்ளோருடன் சேர்க்கப்படுவதும்தான் எத்தனை பெரிய பாக்கியம். தெரிந்துக் கொள்ளப்படுதலே கிருபையின் முதல் காரியம். நாம் கிறிஸ்துவில் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். நாம் கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்டோம். நமது இரட்சிப்பு அவர் கையில் ஒப்புவிக்கப்பட்டது. நமது செயல்கள் அவர் பாதுகாப்பில் இருக்கிறது. நமது பெயர்களும் தேவனுடையவர்களோடு எழுதப்பட்டிருக்கிறபடியால், தேவன் நம்மீதும் நினைவுக்கொண்டிருக்கிறாரென்று நாம் சந்தோஷப்பட வேண்டியவர்கள். தேவன் நம்மை நினைத்தார். நித்திய ஜீவனுக்கென்று நம்மை நியமித்தார். நமது குறைகளுக்காக உடன்படிக்கையில் நிறைவுகளை சேர்த்து வைத்திருக்கிறார். விலையேறப் பெற்றதும், பெரியதுமான வாக்குத்தத்தங்களைத் தந்திருக்கிறார்.

அவருடைய பட்டயம் நமது பாதுகாப்பிற்கு நீட்டப்பட்டிருக்குpறது. அவருடைய நாமம் நமது ஞாபகத்தில் எப்போதும் எழுதப்பட்டிருக்கவேண்டும். அவருடன் எப்போதும் இருக்க வேண்டியதால் பரிசுத்தமே நமது வாழ்க்கையின் கடமையென்றிருப்போம். எவரும் தான் தெரிந்துக்கொள்ளப்பட்டவர் என்றால், அதினால் உண்டாகும் கனியினால்தான் அறிந்துக்கொள்ள முடியும். அந்தக் கனிகளில் பரிசுத்தம் மிக விசேஷித்தது. நாம் பரிசுத்தமாய் இல்லாவிட்டால் நமது பெயர்கள் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதற்கு பொருள் இராது. நமது மனமும், நம்பிக்கையும், விருப்பமும் பரலோகத்தைப்பற்றி இல்லாது இருக்குமானால், நம் பெயர் அங்கு இருப்புதைப்பற்றி சந்தேகப்பட வேண்டும்.

அநாதி சிநேகத்தால் என்னை
மீட்டு முற்றும் இரட்சித்தீர்
ஜீவ புத்தகத்தில் என் பெயரை
எழுதி முத்திரையிட்டீர்.

நீ என்னை மகிமைப்படுத்துவாய்

ஏப்ரல் 10

“நீ என்னை மகிமைப்படுத்துவாய்” சங். 50:15

துன்பங்கள் கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்படி நம்மை ஏவிவிடும்போது அவர் நமக்கு அன்பாய் செவி கொடுத்து தயவாய் உத்தரவருள்வார். ஜெபத்திற்கு உத்தரவு கொடுத்து நம்மை விடுவிக்கும்போது நாம் அவரைத் துதித்துப் போற்றுவோம் என்று அவர் எதிர்பார்க்கிறார். அபாத்திரராகிய நமக்கு அவர் காட்டும் தயவைத் துதிக்கும்போது அவர் வார்த்தைகள் உண்மையாகிறது. ‘தேவன் உண்மையுள்ளவர்” என்று அவரைக்குறித்து அவர் சிங்காசனத்தண்டைக்குப் போகிற யாவருக்கும் இதை நாம் சொல்லும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம். வேத வசனத்தை நம்பி, அவர் பிள்ளைகள்போல் வாழந்து, அவர் சொன்னபடியே செய்வாரென்று எதிர்பார்த்து, சோதனையிலும், வேதனையிலும் அவர் பாதத்தண்டையில் சேர்ந்து அமர்ந்து அவரைத் தொழும்போது அவரை மகிமைப்படுத்துகிறோம்.

நஷ்டங்களில் அவருக்குக் கீழ்ப்படிந்து, சோதனைகளில் அவருக்கு நம்மை அர்ப்பணித்து, தினமும் நமது இருதயத்தை அவருக்குப் பலியாக சமர்ப்பித்து அவரை மகிமைப்படுத்த வேண்டுமென்று ஆசைக்கொண்டு, அவர் ஊழியத்தை கருத்தாய் செய்து, அவரின் ஜனங்களை மனமார நேசித்து, நம் விருப்பப்படியல்ல, அவர் சித்தப்படி என்று நடக்கும்போது அவரை உண்மையாய் மகிமைப்படுத்துகிறோம். இது ஒன்Nறு நமது தலையான கடமையாகட்டும். ஒவ்வொரு காலையிலும் நாம் நமது ஆத்துமாவைப் பார்த்து, ஆத்துமாவே, நீ இன்றைக்கு உன் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமென்று திட்டமாய் கற்பித்து ஒவ்வொரு மாலையிலும் அந்நாள் முழுவதும் கர்த்தருடைய மகிமையையே முக்கியமாகக் கருதி வாழந்தோமா என்று நம்மையே சோதித்துப் பார்ப்போமாக.

தேவ நாமத்தைப் போற்று
அவர் துதியை என்றும் சாற்று
அவர் சொல்லையே தியானித்து
உன் நடையைச் சீர்ப்படுத்து.

நீதிமான்களின் உயிர்த்தெழுதல்

ஏப்ரல் 06

“நீதிமான்களின் உயிர்த்தெழுதல்.” லூக்கா 14:14

கிறிஸ்துவுக்குள்  மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுந்திருப்பார்கள். அழியாமையுள்ளவர்களாய்ப் பலத்தோடும் ஆவிக்குரிய மகிமையோடும் எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவின் மகிமையான சரீரத்துக்கு ஒப்பான சரீரம் அவர்களுக்கு இருக்கும். அவருடைய சத்தம் அவர்களை உயிர்ப்பித்து, அவருடைய வல்லமை அவர்களை எழுப்பும். அவரின் மகிமை அவர்களைச் சூழ அலங்காரமாயிருக்கும். அவர்கள் அவரைப்போலவே இருப்பார்கள். காரணம் அவர் இருக்கிறவண்ணமாகவே அவரைப் பார்ப்பார்கள். அந்த உயிர்த்தெழுதலின் வேளை எவ்வளவு ஒரு மகிழ்ச்சியாய் இருக்கும்.

நாமும் அதோடு சம்மந்தப்பட்டவர்களாயிருந்தும் அதைப்பற்றி அதிகம் நினைக்கிறதில்லை. அந்த நேரத்தை ஆவலாய் எதிர்ப்பார்க்கிறதில்லை. ஒருவேளை தூக்கத்தில் நாம் மரித்து அடுத்த காலை உயிர்த்தெழுதலின் காலையாய் இருக்கலாம். அல்லது இருக்கிறோமா? நீதிமான்களுடைய உயிர்த்தெழுதல் மகிமை நிறைந்தவர்களாய்ப் புறப்பட்டு வருவார்கள். ‘இயேசுவோடு ஐக்கியப்பட்டு, அவர் மகிமையில் பங்கடைந்து, அவர் இருக்கும் இடத்தில் அவரோடுகூட தியானிக்க வேண்டும். தினந்தோறும் அதற்கு ஆயத்தமாக வேண்டும். அவர் சமீபித்திருக்கிறதாக அறிந்து நடக்க வேண்டும். உயிர்த்தெழுதல் அடையும்படி, பிரயாசப்பட்டு துன்பத்தை சகித்து ஜெபித்த பவுலைப்போல் நாமும் இருக்கவேண்டும். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குடையவன் பாக்கியவான்.

விண்மண்ணிலுள்ளோர் யாவரும்
மகா கர்த்தாவைப் போற்றுங்கள்
இயேசு இராஜன் தோன்றுவார்
இரட்சிப்பளிக்க வருவார்.

Popular Posts

My Favorites

கர்த்தருக்கே காத்திரு

பெப்ரவரி 27 "கர்த்தருக்கே காத்திரு." சங். 37:7 எப்பொழுதுமே பாவியானவன் அமைதலற்றவன். அவன் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டபடியால் அவன் ஆவை அவனை நிலையற்றவனாக்குகிறது. கிறிஸ்து அவனைப் பார்த்து என்னிடத்தில் வா, நான் உனக்கு இளைப்பாறுதல்...