இலக்கை நோக்கித் தொடருகிறேன்

பெப்ரவரி 03

“இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”  பிலி. 3:14

விசுவாச பந்தயத்தில் ஓடுகிறவன். பந்தயப் பொருள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தம், மகிமை, பரலோகம் இவைகளே இந்தப் பந்தையப் பொருள். அவன் ஓடவேண்டிய ஓட்டம் பரிசுத்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஓட்டத்தில் அNநுக சத்துருக்கள் எதிர்ப்படுவார்கள். துன்பங்களும், சோதனைகளும் வந்தாலும் நமது குறி இலக்கை நோக்கியே கவனிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமென்றே அவன் அனுதினமும் போராட வேண்டும். கிறிஸ்து வைத்த வாழ்க்கையின் மாதிரியே அந்த இலக்கு. அவரைப்போலவே நாம் மாறவேண்டும். அவரைப்போன்றே பாவத்தைப்பகைத்து, சாத்தானை ஜெயித்து, சோதனைகளைச் சகித்து, ஓடவேண்டும்.

இயேசுவோ தமது முன்வைத்த சந்தோஷத்தை நோக்கிக் கொண்டே பந்தயச் சாலையில் ஓடி தமது இலக்கை அடைந்து, கிரீடத்தைப் பெற்று ஜெய வீரராய் தேவ வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர்தான் நமக்கு முன்மாதிரி. நமது விசுவாசத்தைத் துவக்கி முடிக்கிறவரும் அவரே. நமது கண்களும் கருத்தும் அவர் மேலிருக்க வேண்டும். அவர் தேடிய விதமாகவே நாமும் தேடவேண்டும். அப்போஸ்தலனைப்போல் ஒன்றையே நோக்கி, அதையே நாடி இல்கை நோக்கி தொடர வேண்டும். அப்போதுதான் பந்தையப் பொருள் கிடைக்கும். ‘நான் ஜெயங்கொண்டு பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்ததுப்போல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடுகூட உட்காரும்படி கிருபை செய்வேன்’ என்று கிறிஸ்துவும் சொல்லுகிறார்.

நாம் ஓடும் ஓட்டத்தில்
இரட்சகரையே நோக்குவோம்
அந்த இலக்கை நோக்கினால்
பந்தயப் பொருளைப் பெறுவோம்.

நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்

பெப்ரவரி 25

“நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்.” சங். 104:34

தியானம் என்பது ஒன்றைக்குறித்து ஆழமாய் கவனித்து சிந்திப்பது ஆகும். அந்த ஒன்று ஆவிக்குரியதானால் எத்தனை பயனுள்ளதாயிருக்கும். பரலோகத்தை நினைத்து ஆண்டவராகிய இயேசுவைப்பற்றி தியானம் செய்வது எத்தனை இனிமை.

அவரில் விளங்கும் மகிமையைப்பற்றியும் அவர் கிருபையின் ஐசுவரியத்தைப்பற்றியும், அவர் அன்பின் ஆழம்பற்றியும், கனிவான உருக்கம்பற்றியும், இரக்கம்பற்றியும், அவரின் பராக்கிரம புயத்தைப்பற்றியும், அவரின் இரத்தத்தால் கிடைக்கும் புண்ணியத்தைப்பற்றியும் மகத்தான அவருடைய நீதியைப்பற்றியும், அவர் அடைந்த பூரண வெற்றியைப்பற்றியும், அவர் பரமேறின ஜோதிப் பிரகாசத்தைப்பற்றியும், அவர் நமக்காய் மன்றாடி வாங்கும் நன்மைகளைப்பற்றியும், மோட்சத்தில் அவர் வீற்றிருக்கும் மேன்மையைப்பற்றியும், பூமியில் தமது ஜனங்களை காத்துவரும் பாதுகாப்பைப்பற்றியும், இரண்டாம் வருகையைப்பற்றியும், அதன் மகிமையைப்பற்றியும் நாம் தியானிக்க வேண்டும்.

நம் தியானமெல்லாம் இயேசுவைப்பற்றியே இருக்க வேண்டும். இயேசுவைப்பற்றியே தியானிக்க வேண்டும். அவரைப்பற்றியும், அவரின் ஊழியம்பற்றியும், அவர் செய்த கிரியைகளைப்பற்றியும், அவர் இராஜ்யம்பற்றியும் அவர் தாழ்த்தப்பட்டு மேன்மையடைந்ததுப்பற்றியும், நாம் தியானிக்க வேண்டும். அப்படிப்பட்ட தியானம் இனிமையாயிருக்கும்.

உம்மைக் குறித்த தியானம்
என் மனதிற்கு இன்பம்
சிருஷ்டித்தார் இரட்சித்தார்
என்று கீதம் பாடுவேன்.

கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்

பெப்ரவரி 04

“கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்.”  மத். 24:6

அதாவது கவலைக்கொள்ளாதபடி மனமடிவாகாதபடி, திகையாதபடி எச்சரிக்கையாயிருங்கள். துன்பங்களைத் தைரியமாய்ச் சந்தித்து, பொறுமையோடும், மனதிடனோடும் சகித்து தேவனுக்கு முற்றிலும் கீழடங்கப் பாருங்கள். உலகத்தார் கலங்கி நிற்கலாம். நீங்கள் கலங்கக்கூடாது. நீங்கள் என் தொழுவத்தின் ஆடுகள். என் வீட்டின் குமாரர்கள். என் தோட்டத்து வேலையாள்கள். நீங்கள் கலங்கக்கூடாது. உங்கள் காரியங்கள் அனைத்தும் அன்பினாலும் ஞானத்தினாலும் திட்டமிடப்பட்டிருக்கிறது. நீங்கள் என் கரத்தில் சுகமாயிருப்பவர்கள். நீங்கள் உங்களைத் தீங்கிற்கு விலக்கி காப்பதற்கு நான் எப்போதும் உங்களோடிருக்கிறேன். கண்ணீரைத் துடைத்து உங்கள் மனதை லேசாக்குகிறேன். ஆகவே நீங்கள் கலங்கக்கூடாது.

நடக்கிறவைகளெல்லாம் உங்களுக்கு நன்மையாகவேதானிருக்கும். நீங்கள் கவலைப்படும்போது என்னைக் கனவீனப்படுத்துகிறீர்கள். ஆகவே மனகலக்கத்திற்கும் வீண் கவலைக்கும் இடங்கொடாதபடி பாருங்கள். கலங்காதிருக்க என்ன வழி என்று கேட்கிறீர்களா? என் வசனத்தை உறுதியாய் நம்புங்கள். என்னோடு எப்போதும் நடவுங்கள். உங்கள் பயங்கள், எனக்குச் சொல்லுங்கள். உங்கள் கவலைகளையும், சுமைகளையும் என் பாதத்தருகே வையுங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு வரும் என்று அறியுங்கள். தேவன் உண்மையுள்ளவர். அவர் என்னோடிருக்கிறார் என்று நினையுங்கள். துன்பங்களைச் சகிக்கிறதற்குத் தேவையான உதவி கிடைக்குமென்று எதிர்பாருங்கள். நீங்கள் என்னோடு ஐக்கியப்பட்டவர்கள் என்பதை மறந்துப்போகாதீர்கள். சிநேகிதரே, நாம் கிறிஸ்துவோடிருந்தால் கலங்க வேண்டியதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள் என்று அன்பாய் உங்களுக்குக் கூறுகிறேன்.

என் மனமே நீ கலங்காதே
தேவ சித்தமுண்டு காத்திரு
உனக்கு விளங்கா விட்டாலும்
எல்லாம் சுபமாய் முடியும்.

தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்

பெப்ரவரி 18

“தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.” 1.தெச. 1:10

நம்மை மீட்டுக்கொள்ளவே கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். நம்மைப்பரிசுத்தமாக்க இயேசு பரிசுத்தாவியை அனுப்பினார். அவரே திரும்ப வந்து நம்மை அழைத்துக்கொண்டு தாம் இருக்கும் இடத்தில் சேர்த்துக்கொள்ளப் போகிறார். இது மகிழ்ச்சிக்குரிய மகிமையான காரியம். புதிய ஏற்பாட்டில் தேவ ஜனங்களுக்கு இதை அடிக்கடி சொல்லியிருக்கிறார். இதுவே நமது நம்பிக்கை. மிக அவசியமான ஒன்றும் மிக முக்கியமானதுமாகையால் இதையே அடிக்கடி தியானிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

நாம் அவருடைய ஊழியர். நம்மிடம் கணக்கு கேட்க நமது எஜமான் வரப்போகிறார். நாம் அவரின் பிள்ளைகள். நம்மை அவரோடு சேர்த்துக்கொள்ள நமது தகப்பன் திரும்ப வரப்போகிறார். நாம் அவரின் மணவாட்டிகள். நம்மை அவரோடு இணைத்துக்கொள்ளும் மணவாளனாய்த் திரும்பவும் வரப்போகிறார். அவர் திடீரென்று வருவார். எதிர்பாராதபோது வருவார். திருடனைப்போல் வருவார். நாமோ நித்திரை மயக்கம் கொண்டு மற்றவர்களைப்போல் தூங்குகிறர்களாயிராமல் எப்போதும் விழித்திருந்து தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பொழுது விடியும்முன் அவர் வருவார். அவர் நிச்சயம் திட்டமாக சீக்கிரம் வருவார்.

அவர் பரலோகத்திற்குப் போனவிதமாகவே திரும்ப வரும்போது நாம் சந்தோஷப்படுவோமா? ஒருவேளை அவர் வருகை தாமதப்பட்டால் நாம் அவரோடிருக்க சந்தோஷத்தோடே அவரிடம் போவோம். இதற்கு நாம் உடனே ஆயத்தப்படுவோமாக.

துன்பம் துக்கம் பாவம் யாவும்
இரட்சகராலே நீங்கும்
பொறுமையாய் காத்திருப்போம்
அப்போ பெரும் மகிழ்ச்சி அடைவோம்.

அவர் நம்மேல் இரங்குவார்

பெப்ரவரி 22

“அவர் நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

நாம் பாவம் செய்ததால் நம் பேரில் அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் எப்போதுமே அவர் கோபத்தோடிருப்பவரல்ல. நமது பாவம் நம்மை நிர்மூலமாக்குமானால் தேவ இரக்கம் நம்மை பாக்கியவான்களாக்குகிறது. அவர் வார்த்தையின்படி ஆறுதலும் தேறுதலும் உண்டாகும்படி நமக்கு இரங்குவார். அவர் உருக்கம் நிறைந்தவர். அவர் இரக்கத்தில் சம்பூணர். மன்னிக்க ஆயத்தமானவர். இவைகள் தேவனுடைய சொந்த வாக்கியங்கள். நாம் அவைகளை மட்டும் நம்பினோமானால் நம்முடைய பங்களும், திகிலும் பறந்தோடும். நம்முடைய சந்தேகங்களும் மறைந்துப்போம். நாம் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பப்படுவோம்.

நாம் அவரைவிட்டு வீணாய் அலைந்தோம். ஆனாலும் அவர் நம்மேல் இரங்கினார். அலைந்துதிரிந்த ஆட்டைத் திரும்பவும் சேர்த்துக் கொள்கிறார். கெட்ட குமாரனை, ஆடல் பாடலோடு வரவேற்றுக் கொள்கிறார். சாத்தான் என்ன பழி சொன்னாலும் அவர் மனம் துருகவே உருகுவார். உன் பாவங்களும், பயங்களும் வெகுவாய் இருந்தாலும் அவர் மனம் உருகிவிடுகிறார். அவர் வாக்களித்தபடியாலும், அவர் தன்மையின்படியும் இரக்கமுள்ளவராயிருக்கிறார். எத்தனை முறை நமக்கு அப்படி செய்திருக்கிறார். இப்போதும் அவர் மனம் உருக்கத்தால் பொங்குகிறது. நீ பாவத்திற்காக மனம் வருந்துவதைக் கண்டாலோ தப்பிதங்களுக்காக அழுகிறதைப் பார்த்தாலோ அவர் உருகி விடுகிறார். உன் அக்கிரமங்களையெல்லாம் நிராகரித்து உன் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு விடுகிறார்.

இயேசு மனதுருகி
காயம் கட்டுவார்
துக்கிப்பவர்களுக்கு
ஆறுதலளிப்பார்.

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்

பெப்ரவரி 21

“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்.” எபி. 12:6

எல்லா விசுவாசிகளையும் தேவன் நேசிக்கிறார். ஆகையால் எல்லா விசுவாசிகளையும் அவர் தண்டிக்கிறார். தண்டனைதான் அவர் அன்புக்கு அத்தாட்சி. நாம் பி;ளைகளாயிருப்போமானால் தண்டனை நமக்கு அவசியம் வேண்டும். அப்படி அவசியமான தண்டனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரை நஷ்டம் வரும்படி வியாதிமூலம் தண்டிக்கிறார். சிலருக்குக் குடும்பப் பிரச்சனைகளினால் தண்டிக்கப்படுகிறார்கள். தேவனுடைய ஒரே பிரம்பால் நாம் தண்டிக்கப்படாவிட்டாலும், ஒரே கரந்தான் நம்மெல்லாரையுமே தண்டிக்கிறது. ஒரே வகையாய் நாம் எல்லாரும் சீரடையாவிட்டாலும் நம்மெல்லாரையும் சீர்ப்படுத்துகிறவர் ஞானமும் அன்பும் கொண்ட ஒரே பிதாதான்.

சிலர் மனதில் வருத்தப்படுகிறார்கள். சிலர் சரீரத்தில் துன்பப்படுகிறார்கள். சிலர் தங்களின் உறவினர்கள்மூலம் தண்டனையடைகிறார்கள். எந்த அடிகளும் அன்பால் விழுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. தண்டனை நமக்கு வருத்தத்தைத்தான் கொடுக்கும், பிதாவும் அப்படியே வருத்தம் அடைவார். அவர் வேண்டுமென்று நம்மை தண்டிக்கிறதில்லை. தமது இஷ்டப்படி நம்மைத் துன்பப்படுத்துகிறதில்லை. சில சமயங்களில் நமது புத்தியீனமும் நமது துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது. நமது பாவங்கள்கூட பிதாவின் கடிந்துக் கொள்ளுதலை அவசியமாக்குகிறது.

இன்று நமது பிதாவின்கீழ் நம்மைத் தாழ்த்துவோமாக. நம்மை அவர் தண்டிக்கும்போது அவர் நமக்குச் சொந்தம் என்றும் நம்மை நேசிக்கிறாராயென்று நாம் சந்தேகிக்கக்கூடாது. நமக்குத் தண்டனை அவசியமில்லையென்று எண்ணி அவைகளை அசட்டை செய்யாதிருப்போமாக.

தேவ தண்டனை எனக்கு
வருத்தமாகக் கண்டாலும்
அதற்கே கீழடங்குவேன்
தேவ சித்தமே நலம் என்பேன்.

உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்

பெப்ரவரி 08

“உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்.” யோவான் 21:15

நான் எவ்வளவோ குறைவுள்ளவனாயிருந்தாலும், உம்மை அடிக்கடி துக்கப்படுத்தியும், உம்முடைய அன்புக்கு துரோகஞ்செய்தும் உம் வார்த்தைகளை நம்பாமலும், இவ்வுலகப்பொருளை அதிகமாய் பற்றிப்பிடித்தும், கொடியதும் அக்கிரமுமான கேடுபாடுகள் செய்தும், சில வேளைகளில் சாத்தானுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தபோதும் நீர் என் இருதயத்தை ஆராய்கிறீர். என் ஆத்துமாவின் அந்தரங்க கிரியைகள் எல்லாவற்றையும் பார்க்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேனா என்பதையும் நீ அறிவீர். உம்மையல்லாமல் திருப்தியடையக் கூடாத உரு வஸ்து என் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறதென்பதை நீர் அறிவீர். ஆதலால், உம்மை நினைத்து, உம்முடைய அன்பு என் உள்ளத்தில் ஊற்றப்படவேண்டுமென்று நாடி, உம் மகிமை என் ஆத்துமாவுக்குப் பிரசன்னமாக வேண்டுமென்று ஜெபித்து, எல்லாவற்றிற்கும் மேலாக நீர் என்னுடையவரென்றும் சொந்தம் பாராட்டி உம்மை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். உம்மை நேசிக்கிறபடியால் என் இருதயத்தில் பக்தி வைராக்கியம் கொண்டிருக்கிறேன். உம்மை நேசிக்கிறபடியால் உலகத்தை வெறுக்கிறேன். உம்மை விரும்புகிறபடியால் உமக்குப் பிரியமாய் நடக்க ஆசிக்கிறேன். எப்போதாவது உம்மை விட்டுப் பிரிந்தால் அதுதான் எனக்கு மனவருத்தம் கொடுக்கிறதேயன்றி வேறொன்றுமில்லை.

இன்னும் உம்மை அதிகம் நேசிக்க வேண்டாமா? உம்மைத் தியானிக்கும்போது ஆத்துமா ஆனந்தத்தால் பொங்கவேண்டாமா? எப்போதும் உம்மை நேசிக்கவும் எந்த நிமிடமும் உம் அன்பைத் தியானிக்கவும் உம்மேல் ஒரு பெரிய பாசத்தை வளர்ப்பியும் கர்த்தாவே.

என் அன்பு குளிர்ந்தது
என்பதே என் துக்கம்
நேசம் பெருகச் செய்யும்
நீரே என் துருகம்.

என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

பெப்ரவரி 17

“என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.” சங். 119:25

இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவைகளெல்லாம் ஒன்றுமில்லை. நிலையான ஆத்துமாவுக்கு முன், நிலைய்ய இவைகள் ஒன்றுமில்லை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும் நாம் உலக நினைவாலே அதிகம் கவரப்படுகிறோம். நமது ஆசைகள் உலகப் பொருள்மீது அதிகம் ஈடுபடுகிறது. இதனால் நமது நல் மனசாட்சியையும் நாம் கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலகத்தார் இந்த மண்ணை விரும்பி இதிலேயே திருப்தியாகி விடுகிறார்கள். ஆனால் இந்த மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிற தேவ பிள்டுளைகளுக்கோ இது திருப்தியாயிருக்கக்கூடாது. அதை அருவருத்து வாழ்கிறது மிகவும் நல்லதே.

நாம் மேலானவைகளை நோக்க வேண்டும். செட்சைகளை விரித்து மேலே எழும்ப வேண்டும். இம்மைக்குரிய பொருள்களை அற்பமென்று எண்ணவேண்டும். என் ஆத்துமாவே! நீ ஒன் அசுத்தத்தை விட்டெழும்பு. நீ இருக்கிற இடத்திலிருந்தே தேவனை நோக்கிப் பார். இந்த மண்ணை விட்டெழுந்து உதறி மேலான வஸ்திரங்களைத் தரித்துக்கொள். இதுவே இரட்சிப்பின் நாள். தேவன் உன்னை அழைக்கிறார். அவர் உன்னோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறார். இந்த பூமி உனக்கு நிரந்திரமானதல்ல. உன் வீடும் வாசஸ்தலமும் நித்தியம்தான். இந்தப் பூமி கடந்து போய்விட வேண்டிய ஒரு வனாந்தரம். நீ கொஞ்சநாள் தங்கியிருக்கும் இடம். நீ இளைப்பாரும் இடம் மேலே உள்ளது. இவ்விடம் தீட்டுள்ளது.

மரித்து மோட்சம் சேரும் நான்
மண்ணைப் பிடித்திருப்பேனோ?
லோகத்தைவிட்டு என் ஆவி
பரத்தைப் பிடிக்கும் தாவி.

நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.

என் ஆலோசனை நிற்கும்

பெப்ரவரி 20

“என் ஆலோசனை நிற்கும்.” ஏசாயா 46:10

மனுஷன் செய்யும் யோசனை சரியற்றதும் புத்தியற்றதுமாய் காணலாம். அவனுக்கிருக்கும் அறிவு குறைவுள்ளது. மனதும் ஒழுங்கற்றது. ஆனால் கர்த்தரின் யோசனையோ, அளவற்ற ஞானமும் சர்வ வல்லமையுள்ளதாயிருக்கும். மனிதர் தங்களின் காரியங்களைத் தகாத நோக்கத்தோடு முடிவு செய்கிறார்கள். ஆகவே அவர்கள் தத்தளித்து கலங்குகின்றனர். தேவத் தீர்மானங்களோ அமர்ந்த, உறுதியுள்ள, நித்திய யோசனையிலிருந்துண்டாகி, நீதி, கிருபை, பரிசுத்தம், உண்மை, அன்பு இவைகளால் நடத்தப்படுகிறது. மனிதனுடைய யோசனை அடிக்கடி விருதாவாய் போய் விடலாம். தேவ யோசனை மட்டும் என்றுமே விருதாவாகாது. மனித யோசனை பிறரைத் தீமைக்கு வழி நடத்தலாம். தேவ யோசனையோ சகலமும் நம்மைக்கே என்றிருக்கிறது. அவரின் யோசனையில் நமக்கு நித்திய நன்மையும் அடங்கியிருக்கிறது. இம்மைக்குரிய சகல சம்பவங்களும் அவருடைய எண்ணத்தில் அடங்கியிருக்கிறது.

ஆதலால் எதற்கும் நாம் கலங்க வேண்டிய அவசியமில்லை. கொடுமை, அநியாயம், போராட்டம் இருக்கலாம். சுழல் காற்றிலும் பூசலிலும் நடத்துபோகிற நமது தேவன், ‘என் யோசனை நிலைநிற்கும்” ‘எனக்குப் பிரியமானதையெல்லாம் செய்வேன்” என்கிறார். அன்பரே, நமது தேவன் எப்போதும் எவ்விடத்திலும் கிரியை செய்கிறார் என்று மறந்து போகாதீர்கள். வானத்திலும், பூமியிலும் அவர் தமது சித்தப்படியே செய்து, நம்மை பார்த்து, நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறியுங்கள் என்கிறார்.

என் குறைவை தேவன் நீக்கி
இறங்கி என்னை இரட்சிப்பார்
தம் ஆலோசனைப்படி நடத்தி
மோட்சக் கரை சேர்ப்பார்.

Popular Posts

My Favorites

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

ஏப்ரல் 30 "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்"  மத். 5:5 சாந்தகுணம் மனப்பெலவீனமல்ல. பல சமயம் நாம் தவறாய் இரண்டையும் ஒன்றாக்கி விடுகிறோம். கல்மனமுள்ளவர்களிடமும் சாந்த குணம் இருக்கிறது. சாந்த குணம் உள்ளவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவர்...