தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 2

என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்

ஓகஸ்ட் 20

“என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும்” ஏசாயா 51:5

இந்த நம்பிக்கை நல்லது. ஏனென்றால், அந்தப் புயம் சர்வ வல்லமையில் பலப்பட்டு, சர்வ ஞானத்தால் நடத்தப்பட்டு, உருக்கமான அன்பினால் பிரயோகிக்கப்படுகிறது. நாம் சாயும்படி நம்மை ஆதரிக்க அப்புயம் உள்ளது. நமக்காக கிரியை செய்யவும், நமக்கு வேண்டியதை சேர்த்து வைக்கவும், அது நீட்டப்பட்டிருக்கிறது. நமக்காகப் போராடவும், சத்துருவின் கையிலிருந்து விடுவிக்கவும், பெலவீனத்தின்போது நம்மை ஆதரிக்கவும், வியாதியிலும், கண்ணீரிலும் இருந்து நம்மைத் தூக்கி விடவும், இந்தக் கரம் நமக்கு நீட்டப்பட்டிருக்கிறது. இது பிதாவின் சர்வ வல்லமையான கரம். இந்தப் புயம் வானத்தையும், பூமியையும் தாங்கும் புயம்.

நம்முடைய சகோதரனுடைய புயமானாலும், பாதாளத்தின் வாசல்களை அடைத்து, துஷ்ட ஆவிகளைப் பிடித்து அடக்குகிற புயம். இந்தப் புயத்தின்மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது கரத்தின்மேல் நம்பிக்கை வைப்பது வீண். மற்று எதிலும் நமது நம்பிக்கை வளர்ந்துவிட கூடாது. எப்போதும் எதிலும் கர்த்தரின் புயத்திலேயே நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். தேவ வசனம் இப்படிச் சொல்கிறது. தேவன் அதுதான் சரி என்று கட்டளையிட்டிருக்கிறார். அவர்கள் அந்தகாரத்திலும், வருத்தத்திலும் என்னை நம்புவார்கள். என்னுடைய வாக்குத்தத்தங்கள் அவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும். அது அவர்களுக்குத் தேவையென்று அறிவார். மற்றவை எல்லாம் அவர்களை மோசப்படுத்திவிடும். தேவன் கூறியுள்ளார். அதை நிச்சயமாகவே நிறைவேற்றுவார். தேவனுடைய வல்லமையான கரத்தில் நம்பிக்கை வைத்து அவருடைய மகத்துவமான செயலைப் பின்பற்றி, அவரின் கரத்தின் கிரியையை நம்பியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் பாக்கியராய் இருக்கமாட்டோம்.

சகலத்தையும் சிருஷ்டித்த
தேவனுடைய கரமே
எங்கள் பெலன் அடைக்கலம்
என்றும் எங்கள் துணையே.

கிறிஸ்து நமக்காக மரித்தார்

ஜனவரி 24

“கிறிஸ்து நமக்காக மரித்தார்.” ரோமர் 5:8

இது எத்தனை மகத்துவம் நிறைந்த சத்தியம். இன்றைய நாளில் இதைச் சற்று கவனமாய்ச் சிந்திப்போம். தேவனின் ஒரே மகனும், சகல நன்மைக்கு ஊற்றும், எல்லா மேன்மைக்கு மகிமையும், முதலும் முடிவுமாய் கிறிஸ்து மரித்தார். தேச சுபாவத்தையும் மனுஷ சுபாவத்தையும் தம்மில் ஒன்றாய் சேர்த்து வைத்திருந்த இயேசுவானவர் மரித்தார். உடன்படிக்கையில் நமது சுதந்தரராக ஏற்பட்டு நமக்காக பூமிக்கு இறங்கியவர். மரணத்தைவிட தம் சிநேகிதரை நேசித்ததால் அவர் மரித்தார். நம்மை அவர் நேசித்ததாலும் பிதா அவரை தெரிந்துகொண்டதினாலும் அவர் நமக்காக மரித்தார். நாம் நிர்பந்தரும், துன்மார்க்கவுரும், பெலனற்றவர்களும், சத்துருக்களுமாயிருந்தபோது அவர் நமக்காக மரித்தார்.

நமது சரீரத்திற்குச் சிரசாகவும், பிணிப்போக்கு ம் மருந்தாகவும், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கவும் தன் மணவாட்டிக்கு மணவாளனாகவும், மந்தைக்கு மேய்ப்பனாகவும், பிதாவின் சித்தத்தை முடிக்க வந்த பணிவிடைக்காரனாகவும், அவர் நமக்காக மரித்தார். நம்மை மரணத்திலிருந்து மீட்கவும், நித்திய ஜீவனுக்கு உயர்த்தவும், தேவனோடு ஒப்புரவாக்கவும், தமது பரிசுத்த வாழ்வுக்கு நம்மை தகுதியுள்ளவர்களாக்கவும், நமக்கு முடிசூட்டி தம்மோடு இருக்கச் செய்யவுமே அவர் மரித்தார். நாமும் எந்நாளும் இயேசுவை நோக்கிக் கொண்டே ஜீவனம்பண்ணுவோமாக.

பாவிகளைத் தேடி வந்தார்
பாவங்கள் யாவையும் போக்கினார்
நம்மை மீட்க அவர்
ஆக்கினைக்குள்ளானார்
மேய்ப்பன் இரத்தம் சிந்தவே
ஆட்டுக்கு உயிர் வந்ததே.

எங்களை எப்படிச் சிநேகித்தீர்

செப்டம்பர் 23

“எங்களை எப்படிச் சிநேகித்தீர்” மல். 1:2

இது எவ்வளவு விபரீதமான கேள்வி! கர்த்தருடைய ஜனங்கள் இவ்வாறு கேட்பது சரியல்ல. ஆயினும், அநேகர் இப்படிப்பட்ட துணிகரமான கேள்வியைக் கேட்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாகிலும் கர்த்தர் உங்களை எப்படிச் சிநேகித்தார் என்று கேட்டதுண்டா? அவர் உங்களுக்கு செய்துள்ள நன்மைகளை எண்ணிப்பாருங்கள். உங்கள் பாவங்களுக்காக மரிக்கத் தம்முடைய குமாரனையே தந்தார். உங்களை உயிர்ப்பித்து, உங்களுக்கு போதித்து, வழிநடத்தித் தூய்மையாக்கத் தமது ஆவியானவரைத் தந்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தைப் போதிக்க தம்முடைய போதகர்களைத் தந்தார். உங்கள் துயரத்தில் உங்களை ஆற்றித் தேற்றக் கிருபையாகப் பல வழிகளைத் திறந்திருக்கிறார். உங்களுக்கு ஊழியம் செய்யச் தம்முடைய தூதர்களையும் அனுப்பியுள்ளார். உங்களைப் பாதுகாக்க உடன்படிக்கையனி; ஆணைகளையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் நித்திய காலமாகச் சுதந்தரித்து வாழத் தமது பரம வாசஸ்தலத்தையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்.

உங்களைத் தமது ஆத்துமாவுக்கு அருமையாக எண்ணுகிறார். தமது ஆபரணங்கள், மகுடம், குமாரர், குமாரத்திகள் என்று அழைத்து மேன்மைப்படுத்தியிருக்கிறார். உலகம் வெறும் களிமண். நீங்களோ பொன் என்றும், அது பதர், நீங்கள் கோதுமை மணி, அதுவுமன்றி நீங்கள் ஆடுகள், அது பாம்பு. நீங்கள்புறாக்கள் என்று கூறுகிறார். உங்களுக்கும் அவருக்கும் உள்ள உறவைக் கவனியுங்கள். அவர் உங்கள் பிதா. இயேசு உங்கள் உடன்பிறப்பு. நண்பன். உங்களுக்காகப் பரிந்துரைப்போர், தலைவர், மன்னர், உங்களுக்கு மன்னிப்பை அருளினார். பரம நன்மைகளால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆச்சரியமான அவருடைய அன்பிற்கு ஒப்பில்லை.

என்றும் நன்றியுடன்
நானிருக்க அருளும்
உமதன்பிற்காகத் துதித்து
உமதிரக்கத்திற்காய் நன்றி சொல்வேன்.

அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

செப்டம்பர் 17

“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34

நமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.

அவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.

வல்ல மீட்பர் இயேசுவே
என்னைத் தயவாய் மீட்டீரே
சாத்தானின் கரத்திலிருந்தென்னைத்
தயவாய் மீட்டுக் கொண்டீரே.

நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்

பெப்ரவரி 28

“நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.” யோவான் 14:19

கிறிஸ்துவும் அவர் ஜனங்களும் ஒன்றுதான். அவர் தலை, அவர்கள் அவயங்கள். அவரிடத்திலிருந்தே ஜீவனையும், யோசனையையும், வல்லமையையும், பரிசுத்தத்தையும் மற்றெந்த கிருபையையும் பெற்றனுபவிக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கத்தக்கதான நிறைவு அவரிடத்தில் உண்டு. அந்தப் பரிபூரணத்திலிருந்து அவர் தினந்தோறும் வேண்டியதைக் கொடுக்கிறார். இந்நாள் வரையிலும் நமக்கு வேண்டிய கிருபையை இரட்சகர் கொடுத்து வந்தார். இனிமேலும் கொடுத்து வருவார். தேவனாக அவர் இருக்கிறார். தேவனுடைய மக்களுக்கு அவரின் செல்வாக்கைக் கொடுத்துதவுகிறார்.

தமது வார்த்தையை நிறைவேற்றி, தமது கிரியையைப் பூரணப்படுத்தி நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர்களை அவுர் பிழைப்பூட்டுகிறார். அவர்களும் உயிரடைகிறார்கள். உயிரோடிருக்கம் கிறிஸ்து அவர்கள் ஜீவனும் அவர்கள் பிரதிநிதியும் அவர்கள் பிணியாளியுமாய் இருப்பதால் அவர்கள் பிழைப்பார்கள். அவர் காத்து முடிவு பரியந்தமும் வழி நடத்துவதால் அவர்கள் பிழைத்திருப்பார்பள். அவரே அவர்களை ஆண்டு நடத்தி பாதுகாத்து நேசித்து அவர்களை நடத்துகிறார். அவர் பிழைத்திருக்கிறார். தம்முடையவர்களையும் பிழைப்பூட்டுகிறார். அவர்களில் ஜீவன் அவரோடு மறைந்திருக்கிறது.

அன்பர்களே! உங்கள் சந்தோஷத்துகு;கு ஊற்று தேவ ஞானத்தான். உங்களுடைய ஜீவனும் சுகமும், கிறிஸ்துவினுடைய ஜீவனோடும் சுகத்தோடும் ஒன்றுபட்டிருக்கிறது. உங்கள் ஜீவனாகிய கிறிஸ்து சீக்கிரம் வருவார். அவரோடு நீங்களும் பிழைத்து என்றென்றும் அவரோடிருப்பீர்கள்.

இயேசு என்றும் ஜீவிக்கிறார்
நானும் என்றும் ஜீவிப்பேன்
அவர் வாக்களிக்கிறார்
நான் அதன்மேல் கட்டுவேன்.

கர்த்தர் யோசேப்போடே இருந்தார்

செப்டம்பர் 28

“கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” ஆதி. 39:21

யோசேப்பு, தன் தகப்பனைவிட்டுப் பிரிக்கப்பட்டு, தன் வீட்டையும் விட்டு, அடிமையாக விற்கப்பட்டான். பொய்யான குற்றம் சாட்டப்பட்டுக் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால் கர்த்தர் அவனோடு இருந்தார். நம்முடைய வாழ்வில்கூட சோதனைகள் பெருகியிருக்கும்போதுதான் தேவ தயவு காணப்படும். நாம் நீதியினிமித்தம் துன்பப்படும்பொழுதுதான் சிறப்பு ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும். யோசேப்புக்கும்கூட அவனுக்கு வந்த கஷ்டங்கள் எல்லாவற்றையும் தேவன் நன்மையாக மாற்றினார். கர்த்தர் நம்முடன் இருந்தால், சிறைச்சாலையும் அரண்மனையாகும். துயரங்களிலும் பண்டிகை ஆசரிக்க முடியும். யோசேப்போடு தேவன் இருந்ததால் அவனை ஆதரிக்க, ஆறுதல்படுத்த, அவனோடு பேச சிறைச்சாலை தலைவனிடத்தில் தயவு கிடைக்கப்பண்ணினார். அவனுக்குச் சிறப்பு வரங்களைக் கொடுத்தார்.

அவனை எகிப்தை ஆளத்தகுதிப்படுத்தித் தம்முடைய நாமத்தில் துன்பப்படுகிற யாவருக்கும் ஆறுதல்படுத்தும் பாத்திரமாகவும் ஆக்கினார். விசேஷித்த மகத்துவத்தோடு கர்த்தர் யோசேப்போடே இருந்தார். மேன்மையடையும்முன் அவன் தாழ்த்தப்பட்டான். சிறைச்சாலைதான் அரண்மனைக்குப் போகும் நேர்வழியாகும். சிலுவையின் வழியாகத்தான் மகுடம் பெறமுடியும். கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆளவேண்டுமானால், அவரோடு பூலோகத்தில் துன்பத்தை அனுபவிக்கவேண்டும். பிரியமானவரே, கடமை உம்மை எங்கு வேண்டுமானாலும், துன்பம் உம்மை எங்கு துரத்திடினும் கர்த்தர் உம்மோடு இருப்பார். கர்த்தராகிய சூரியன் நமது வாழ்விலிருக்கும்பொழுது, எந்தத் துன்பமாகிய மேகம் நம்மை மூடினாலும் நாம் அஞ்சத் தேவையில்லை. தேவ சமுகம் நமக்கு இன்பமாக இருக்கும். எவ்வளவு அருமையான உண்மை இது.

நீர் என்னோடிருப்பதே
எந்நாளும் என் வாஞ்சை
எத்துன்பம் வந்திடினும்
முறுமுறுக்காது ஏற்பேன்.

இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே

ஓகஸ்ட் 26

“இதோ, பொறுமையாய் இருக்கிறவர்களைப் பாக்கியவான்கள் என்கிறோமே” யாக். 5:11

நம்முடைய துன்பங்கள் நமக்குச் சோதனைகள். ஒவ்வொருவனும் சோதிக்கப்படுவான். சோதனை நேரத்தில் அநேகர் சோர்ந்து போகிறவர்கள். சிலர் பின்வாங்கிப் போகிறார்கள். துன்பத்திற்குத் தக்கதாக மகிழ்ச்சியடைவோம் என்று மறந்து விடுகிறார்கள். தாழ்மைப்பட்டவன் பயனடைவான். கடினப்பட்டவன் அதை வெறுக்கிறான். துன்பத்தினால் சிலர் இரட்சகருடைய பாதத்தில் இழுக்கப்படுகின்றனர். சிலரோ அவரை விரோதிக்கின்றனர்.

கிறிஸ்தவனைப்போல துன்பத்தைத் தாழ்மையோடும், விசுவாசத்தோடும், திடனோடும், பொறுமையோடும், சகிக்கிறவன் பாக்கியவான். முறுமுறுக்காமல், கசந்துகொள்ளாமல் சகிக்கிறவன் பாக்கியவான். இவன் பிரம்பை அல்ல, அதைக் கையாடுகிறவரைப் பார்க்கிறான். கரத்தை மட்டுமல்ல, அடிக்கிற கரத்தின் மனதையும் பார்க்கிறான். இது ஒரு பாடம் என்றும் இது ஒரு சிட்சை என்றும் தண்டிக்கிறவர் தன் தகப்பன் என்றும் ஏற்றுக்கொள்கிறான். தண்டிப்பது அவருக்குப் பிரியம் இல்லை. நமக்குத்தான் பயன். அவர் பரிசுத்தத்தில் எனக்குப் பங்கு உண்டு. என்னைப் பரிசுத்தவானாக்கும்படி ஜெபம்பண்ணினேன். நான் மோட்சத்துக்குப் பாத்திரவான் என்பதற்கு அத்தாட்சி கேட்டேன். இதுவே அதன் பதில். ஆகவே, நான் முறுமுறுப்பது நியாயமா. பிதா எனக்குக் கொடுக்கும் பாத்திரத்தில் நான் பானம்பண்ணாமல் இருப்பேனா என்பான். இப்படிப்பட்டவன்தான் துன்பத்தைச் சகித்து, பொறுமையோடு அதற்கு உடன்படுவான்.
இவன்தான் பாக்கியாவன். துன்பங்களால் இவனுக்கு நன்மைவராமல் போகாது. நெடுங்காலமாய் அவன் துன்பப்படவும் மாட்டான்.

தேவ ஞானம் நடத்தும்
தேவ கிருபை தாங்கும்
ஒன்றும் அறியா பாவி நான்
தேவ சித்தம் என் பாக்கியம்.

இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை

யூலை 25

“இயேசுவைத் தரவிர வேறொருவரையும் காணவில்லை” மத்.17:8

மோசேயும் எலியாவும், சீஷர்களோடு மலையின்மேல் இருந்தார்கள். அவர்கள் போனபின்பு இயேசுவானவர்மட்டும் இருந்தார். உலகில் எல்லாம் மாறிப்போகிறது. சுகம், ஆஸ்தி, வாலிபம், இன்பங்கள், மனிதன் எல்லாமே மாறிப்போகிறது. ஆனால் எது மாறினாலும் இயேசு அப்படியே இருக்கிறார். அவருடைய அன்பும் தன்மையும் மாறுவதில்லை. நம்மேல் அவர் வைத்திருக்கிற சித்தமும் மாறுகிறதில்லை. அவர் கிருபையுள்ளர். உண்மையுள்ள அவருடைய வாக்கும் மாறுகிறதில்லை. ஆசாரிய ஊழியத்திலும், மன்றாட்டு ஊழியத்திலும், இராஜ உத்தியோகத்திலும் அவர் மாறுகிறதில்லை. அவருடைய இரத்தம் எப்போதும் பலனுள்ளது. தகப்பனாகவும், சகோதரனாகவும், புருஷனாகவும், சிநேகிதனாகவும் அவரோடு நமக்கு இருக்கும் உறவில் அவர் மாறுகிறதில்லை. அவர் நேற்றும் இன்றும் ஒரே விதமாய் இருக்கிறார். இந்த வசனம் நமக்கு எப்போதும் ஞாபகக் குறியாய் இருக்க வேண்டும்.

இயேசுவால் மட்டும்தான் நம்மை கிருபாசனத்தண்டை கூட்டிக் கொண்டு போக முடியும். அவரைத்தான் நம்பி விசுவாசிக்கலாம். தேவன் நம்மை அங்கீகரிப்பாரென்று நம்ப அவர்தான் நமக்கு ஆதாரம்., மாதிரி. அவரே நம்முடைய சந்தோஷமும், கீதமும், நம்முடைய இராஜனும் நியாயப்பிரமாணிகனுமாய் இருக்கிறார். அவர் மாறாதவர். ஆகையால் எல்லாவற்றிலும் அவரையே பற்றப் பிடித்திருக்கலாம். நமது கண்களையும் சித்தத்தையும் அவர்மேல் வைப்போமாக. மோசேயும் எலியாவும் போனாலும் இயேசுவானவர் இருக்கிறார் என்று சந்தோஷப்படுவோமாக. மேகம் இருண்டு இருந்தாலும். பிரகாசமாய் காணப்பட்டாலும் அவர் மாறாதவர். இயேசுவானவர் சகல வருத்தங்களையும் இன்பமாக்கி, பயன்படுத் வாழ்வில் வரும் சோதனைகளுக்கு நம்மை விலக்கி காப்பார் என்று எதிர்பார்த்திருப்போமாக.

இயேசு நல்ல பெருமான்
எனக்கு முற்றிலும் ஏற்றவர்
எனக்கு வேண்டியது எல்லாம்
அவரிடம் என்றுமுள்ளது.

பரிசுத்த ஜனம்

டிசம்பர் 18

பரிசுத்த ஜனம். ஏசாயா 62:12

கர்த்தருடைய ஜனம் எல்லாருமே பரிசுத்த ஜனம்தான். அவர்களுக்கு மெய்யுணர்வைத் தந்து மனஸ்தாபப்படும் உணர்வையும் அடைய அவர் செய்கிறார். இவர்தான் பாவத்தின்மேல் வெறுப்பைத் தருகிறவர். பரிசுத்தர்களாயிருக்கத் தேவன் தமது ஜனத்தைத் தெரிந்துகொண்டபடியால், அவர்கள் பாவம் செய்வதைவிட்டுவிடுகிறார்கள். இந்த ஜனங்கள் பரிசுத்தமாகவேண்டுமென்றே இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். ஓளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்குபெற அவர்கள் தகுதியாகும்படி தேவஆவியானவர் அவர்களுக்குள் வாசம்பண்ணுகிறார். பரிசுத்தம்தான் அவர்களுடைய ஜீவன். அவர்களுடைய இன்பம் அவர்கள் பரிசுத்தத்தின்மீது வாஞ்சை கொண்டு நாடித் தேடுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரதத்ததினால் மீட்கப்பட்டு, அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவராலே நீதிமான்களாக்கப்படுகின்றனர். நீதிமான்களாக்கப்படுவதுதான் பரிசுத்தமாக்கப்படுதலுக்கு அடிப்படை. ஒருவன் நீதிமானாக்கப்பட்டால், அவன் பரிசுத்தமாக்கப்படுவான். பரிசுத்தமாக்கப்படுவதால், தான் நீதிமானாக்கப்பட்டதை நிரூபிப்பான். பாவம் வெறுக்கப்பட்டு, அது கீழ்ப்படுத்தப்படாவிட்டால், அது மன்னிக்கப்படுவதில்லை. பாவம் செய்கிற எவனும் நீதிமானல்ல, பரிசுத்தவானுமல்ல. இயேசுவைத் தன் சொந்தம் என்றோ, தான் பரிசுத்தஆவியைப் பெற்றவன் என்றோ சொல்லுவது தவறு. பரிசுத்தவான்கள் யாவரும் பாவத்திற்காகத் துக்கப்பட்டு, அதனோடு போராடி வெல்லுகிறார்கள். தங்கள் தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமாக நிற்கிறார்கள். இவர்கள்தான் மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள். உனது நிலை என்ன? பரிசுத்தர் கூட்டத்தில் நீ இருக்கிறாயா ?

கர்த்தாதி கர்த்தர் பரிசுத்தர்
கிறிஸ்துவும் பரிசுத்தர்
தூய ஆவியானவரும் பரிசுத்தர்
அவர் பரிசுத்தராதலால் நாமும் பரிசுத்தராவோம்

உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்

ஜனவரி 17

“உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமுள்ளவர்களாயிருப்பார்கள்.” சங்கீதம் 110:3

எந்த மனுஷனும் தன் சுயமாய் இரட்சிப்படைந்து கிறிஸ்துவிடம் வரமாட்டான். இரட்சிக்கப்படவும் மாட்டான். கிறிஸ்துNவே தேவகிருபையால் ஒவ்வொருவரையும் இரட்சிக்கிறார். மனுஷ சுபாவம் குருட்டுத்தனமுள்ள, பெருமையுள்ளது. ஆனால் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமோ தேவனால் உண்டாகிறது. தேவ போதனையால்தான் எவரும் பரிசுத்தம் பெறமுடியும். நாமும் மனதிலும் நடக்கையிலும் பரிசுத்தமாக்கப்பட வாஞ்சைக்கொண்டு பரிசுத்தாவியானவரின் போதனையில் தினந்தோறும் நடக்கவேண்டும். இப்படி ஒரு பாக்கியமான அனுபவம் கிடைப்பது எத்தனை கிருபை. நாம் சுபாவத்திலே நல்லவர்களாயும் மனதிலே பரிசுத்தமாயும் இருக்க இதுவே காரணம். அறிவினாலே நல் உணர்ச்சியும், நல் விருப்பமும், நற்கிரியையும் நம்மில் உண்டாகிறது என்று நாம் நினைக்கிறோம். இல்லை, கர்த்தரின் வல்லமையினால்தான் நாம் நல்மனமுடையவர்களாயிருக்கிறோம். இந்த வல்லமை நமது மனதிலும் சுபாவத்திலும் இரகசியமாய்ச் செயல்படுகிறபடியால் நமக்கு அது தெரிகிறதில்லை.

தேவன் உன்னைத் தம்முடைய கிருபையில் அழைத்திருக்கிறார் என்பதைப்பற்றி நீ சந்தேகம் கொள்கிறாயா? அப்படியானால், கெட்டுப்போன ஏழைப்பாவியாகிய இயேசுவினால் இரட்சிக்கப்பட எனக்கு மனமிருக்கிறதா? பாக்கியவானாக மட்டுமல்ல, பரிசுத்தமாக்கப்படவும் எனக்கு வாய்சையிருக்கிறதா? இரட்சிக்கப்பட மாத்திரமல்ல பிரயோஜயமுள்ளவனாயிக்கவும் வேண்டுமென்று ஜெபிக்கிறேனா? நீயே உன்னை சோதித்துப்பார். அப்படி செய்வாயானால் நீ கர்த்தரின் பிள்ளைதான். அவர் தமது வருகையின் நாளில் நீ தைரியமாய் சந்திக்கும்படி உன்னை மாற்றியிருக்கிறார்.

இரட்சிப்படைய வாஞ்சையுண்டு
உமது முகம் காட்டுமே
சுத்தனாக ஆசையுண்டு
என்னில் கிரியை செய்யுமே.

Popular Posts

My Favorites

கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்

யூன் 24 "கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும்." சங். 61:2 இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அந்தக் கன்மலை கிறிஸ்துதான். முன்பு வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பிறகு முன்னடையாளங்களால் முத்தரிக்கப்பட்டு பிரசன்னமானவர் இவரே. தாகம் தீர்ப்பதற்காகவே அடிக்கப்பட்ட கன்மலை இவர். களைத்துப்போனவர்களுக்கு...