தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 31

விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்

பெப்ரவரி 06

“விலையேறப்பெற்ற சீயோன் குமாரர்.” புல. 4:2

இரட்சகராகிய இயேசு தம்முடைய ஜனங்களுக்கு அருமையாயிருக்கிறதுபோல, அவர்களும் தமது ஆபரணங்களென்றும் தமது விசேஷித்த பொக்கிஷங்களென்றும், நமது பங்கென்றும் அவர் சொல்லுகிறார். அவர்கள்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு ஆச்சரியமானது. தமது பிள்ளைகளை மிகவும் வேண்டியவர்களாய் எண்ணியபடியால், தனது விலையேறப்பெற்ற இரத்தத்தினால் அவர்களை மீட்டார். அவ்வளவு உயர்ந்த விலைக்கொடுத்து மீட்டதால் அவர்களைக் கைவிடவே மாட்டார். நேசர் தமது ஜனங்களுக்கு அருமையாயிருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? அவர் அவர்களுக்கு எவ்வளவோ உதவிகளையும், நன்மைகளையும் செய்கிறார். பல வழிகளில் அவர்களோடு ஐக்கியப்படுகிறார். அவர் எவ்வளவோ அருமையானவர். நாம் அவர் பார்வையில் அருமையாயிருப்பதுதான் அதிக ஆச்சரியம்.

நாம் எவ்வளவு பாவிகள், எவ்வளவு நிர்பந்தர், எவ்வளவு கொடியவர்கள், எவ்வளவு நிர்விசாரிகள். அவரின் வழிகள் நம்முடையவைகள் அல்ல. அவருடைய நினைவுகள் நம்முடைய நினைவுகள் அல்ல. அப்படியருந்தும் நம்மை, அருமையான பிள்ளைகளாக, அழகான மனையாட்டிகளாகப் பாவிக்கிறார். அவ்வளவுக்கு அதிகமாய் அவர் நம்மை நேசிக்கிறார். இது மகிமை நிறைந்த சத்தியம். மனிதர் நம்மைக் குறித்து என்ன நினைத்தாலும் அவர் நம்மை விலையேறப்பெற்றவர்களாய் நினைக்கிறார். நாம் விலையேறப்பெற்றதால்தான் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள். இந்தச் சிந்தையோடு இந்த இரவில் படுக்கைக்குச் செல்வோமாக. பரிசுத்தவான்கள் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானவர்கள்தான். அவர்கள் மரணமும் அருமையானதுதான்.

இயேசு சொல்வதைக் கேள்
அவரை விட்டுப் பிரியாதே
பிழைத்தும் செத்தும் பக்தர்
அவருக்கு அருமையானவர்களே.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்

மார்ச் 22

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள்.” எபி. 6:17

சுபாவத்தின்படி மற்றவர்களைப்போல நாமும் கோபாக்கினையின் புத்திரர். மற்றவர்களைப்போலவே அக்கிரமக்காரர். எது மற்றவர்கள். கெட்டுப்போனவர்கள். தேவனுக்கு விரோதமாகவும் அவருடைய இராஜ்யத்திற்கு விரோதமாகவும் கலகம்பண்ணினார்கள். எந்த நற்கிரியைகளையும் தேவன் நமக்கு செய்ய நாம் தகுதியுள்ளவர்களல்ல. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலே தமது குமாரன் இயேசு கிறிஸ்துவால் வாக்குத்தத்தங்களையும் சுதந்தரத்தையும் கிருபையால் ஏற்படுத்தியிருக்கிறார். நம்மையும் ஒரு பொட்டென எண்ணினபடியால் தன் ஆத்துமாவை வியாகுலத்திற்கு ஒப்புக்கொடுத்தார். நம் மூலம் தேவனுக்கு மகிமையுண்டாக அவரில் ஆம் என்றும் ஆமென் என்றும் இரு;கிற வாக்குத்தத்தங்களுக்கு நம்மைப் பாத்திரராக்கினார்.

ஆகையாம் நாம் கிறிஸ்துவோடு சம்மந்தப்பட்டிருக்கிறபடியினாலும், கிறிஸ்துவின் மரணத்தின்மூலம் நமக்கு பங்கிருக்கிறபடியினாலும், வேதத்தின் சகல வாக்குத்தத்தங்களுக்கும் நம்மை சொந்;தரக்காரர் ஆக்கினார். நித்தியி ஜீவனும் என்றுமுள்ள நீதியும், இம்மைக்கும் மறுமைக்கும் நமக்கு வேண்டிய சகலமும் நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கின்றன. நாம் சுதந்தரர், ஆகையால் நமது சுதந்ரத்தில் எல்லாம் இருக்கிறது. இந்தச் சுதந்தரம் நமக்கு கிருபையினால் வந்ததுது. இந்தக் கிருபை கிறிஸ்துவால் கிடைத்தது. மோட்சத்துக்கு நம்மை நடத்துகிறது. நன்றி செலுத்த நம்மை ஏவுகிறது. நான் சுதந்தரவாளியா? வாக்குத்தத்தங்கள் என் பத்திரமா? அப்படிப்பட்ட சுதந்தரத்துக்கு நான் பாத்திரனாக ஜீவிக்கிறேனோ என்று நாம் நம்மை சோதித்தறியக்கடவோம்.

தேவன் வாக்குப்பண்ணினதை
சுதந்தரிப்போம் எந்நாளும்
அவரில் நிறைவடைவோம்
தேவ நாமம் துதிப்போம்.

நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்

பெப்ரவரி 28

“நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.” யோவான் 14:19

கிறிஸ்துவும் அவர் ஜனங்களும் ஒன்றுதான். அவர் தலை, அவர்கள் அவயங்கள். அவரிடத்திலிருந்தே ஜீவனையும், யோசனையையும், வல்லமையையும், பரிசுத்தத்தையும் மற்றெந்த கிருபையையும் பெற்றனுபவிக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கத்தக்கதான நிறைவு அவரிடத்தில் உண்டு. அந்தப் பரிபூரணத்திலிருந்து அவர் தினந்தோறும் வேண்டியதைக் கொடுக்கிறார். இந்நாள் வரையிலும் நமக்கு வேண்டிய கிருபையை இரட்சகர் கொடுத்து வந்தார். இனிமேலும் கொடுத்து வருவார். தேவனாக அவர் இருக்கிறார். தேவனுடைய மக்களுக்கு அவரின் செல்வாக்கைக் கொடுத்துதவுகிறார்.

தமது வார்த்தையை நிறைவேற்றி, தமது கிரியையைப் பூரணப்படுத்தி நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர்களை அவுர் பிழைப்பூட்டுகிறார். அவர்களும் உயிரடைகிறார்கள். உயிரோடிருக்கம் கிறிஸ்து அவர்கள் ஜீவனும் அவர்கள் பிரதிநிதியும் அவர்கள் பிணியாளியுமாய் இருப்பதால் அவர்கள் பிழைப்பார்கள். அவர் காத்து முடிவு பரியந்தமும் வழி நடத்துவதால் அவர்கள் பிழைத்திருப்பார்பள். அவரே அவர்களை ஆண்டு நடத்தி பாதுகாத்து நேசித்து அவர்களை நடத்துகிறார். அவர் பிழைத்திருக்கிறார். தம்முடையவர்களையும் பிழைப்பூட்டுகிறார். அவர்களில் ஜீவன் அவரோடு மறைந்திருக்கிறது.

அன்பர்களே! உங்கள் சந்தோஷத்துகு;கு ஊற்று தேவ ஞானத்தான். உங்களுடைய ஜீவனும் சுகமும், கிறிஸ்துவினுடைய ஜீவனோடும் சுகத்தோடும் ஒன்றுபட்டிருக்கிறது. உங்கள் ஜீவனாகிய கிறிஸ்து சீக்கிரம் வருவார். அவரோடு நீங்களும் பிழைத்து என்றென்றும் அவரோடிருப்பீர்கள்.

இயேசு என்றும் ஜீவிக்கிறார்
நானும் என்றும் ஜீவிப்பேன்
அவர் வாக்களிக்கிறார்
நான் அதன்மேல் கட்டுவேன்.

கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்

பெப்ரவரி 04

“கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்.”  மத். 24:6

அதாவது கவலைக்கொள்ளாதபடி மனமடிவாகாதபடி, திகையாதபடி எச்சரிக்கையாயிருங்கள். துன்பங்களைத் தைரியமாய்ச் சந்தித்து, பொறுமையோடும், மனதிடனோடும் சகித்து தேவனுக்கு முற்றிலும் கீழடங்கப் பாருங்கள். உலகத்தார் கலங்கி நிற்கலாம். நீங்கள் கலங்கக்கூடாது. நீங்கள் என் தொழுவத்தின் ஆடுகள். என் வீட்டின் குமாரர்கள். என் தோட்டத்து வேலையாள்கள். நீங்கள் கலங்கக்கூடாது. உங்கள் காரியங்கள் அனைத்தும் அன்பினாலும் ஞானத்தினாலும் திட்டமிடப்பட்டிருக்கிறது. நீங்கள் என் கரத்தில் சுகமாயிருப்பவர்கள். நீங்கள் உங்களைத் தீங்கிற்கு விலக்கி காப்பதற்கு நான் எப்போதும் உங்களோடிருக்கிறேன். கண்ணீரைத் துடைத்து உங்கள் மனதை லேசாக்குகிறேன். ஆகவே நீங்கள் கலங்கக்கூடாது.

நடக்கிறவைகளெல்லாம் உங்களுக்கு நன்மையாகவேதானிருக்கும். நீங்கள் கவலைப்படும்போது என்னைக் கனவீனப்படுத்துகிறீர்கள். ஆகவே மனகலக்கத்திற்கும் வீண் கவலைக்கும் இடங்கொடாதபடி பாருங்கள். கலங்காதிருக்க என்ன வழி என்று கேட்கிறீர்களா? என் வசனத்தை உறுதியாய் நம்புங்கள். என்னோடு எப்போதும் நடவுங்கள். உங்கள் பயங்கள், எனக்குச் சொல்லுங்கள். உங்கள் கவலைகளையும், சுமைகளையும் என் பாதத்தருகே வையுங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு வரும் என்று அறியுங்கள். தேவன் உண்மையுள்ளவர். அவர் என்னோடிருக்கிறார் என்று நினையுங்கள். துன்பங்களைச் சகிக்கிறதற்குத் தேவையான உதவி கிடைக்குமென்று எதிர்பாருங்கள். நீங்கள் என்னோடு ஐக்கியப்பட்டவர்கள் என்பதை மறந்துப்போகாதீர்கள். சிநேகிதரே, நாம் கிறிஸ்துவோடிருந்தால் கலங்க வேண்டியதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள் என்று அன்பாய் உங்களுக்குக் கூறுகிறேன்.

என் மனமே நீ கலங்காதே
தேவ சித்தமுண்டு காத்திரு
உனக்கு விளங்கா விட்டாலும்
எல்லாம் சுபமாய் முடியும்.

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து

நவம்பர் 26

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து” எரேமி. 48:11

தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால், அவன் மகிழ்ந்து போவான். நமக்குக் கஷ்டங்கள் வராவிடில் நமது வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும். நமது இரட்சகராகிய தேவனை நாம் மறந்து நமது பாதுகாப்பான கன்மலையை அற்பமாக எண்ணுவோம். தேவனை மறந்து விடுவோம். நம்மைப்பற்றியே பெருமையாக எண்ணிக்கொண்டிருப்போம். சோம்பேறிகளாகி விடுவோம். நமது ஜெபங்கள் உயிரற்றுப்போம். பரம காரியங்களில் நாம் சலிப்படைந்து விடுவோம். ஆண்டவருக்கடுத்தவைகளை அசட்டை செய்வோம். அவரோடு நமக்கிருந்த ஐக்கியம் துண்டிக்கப்படுகிறது. ஆவிக்குரிய காரியங்களைப்பற்றிய உரையாடல்கள் இல்லை. நாம் உயிரற்றுப்போகிறோம். நாம் உத்தம கிறிஸ்தவர்களானால், இந்நிலையை நாம் அடையும்பொழுது துன்பங்கள் வரும் என்று எதிர்பார்ப்போம்.

துன்பங்கள் நமக்கு எவ்விதத்திலும் வரும். கழுகு தன் கூட்டைக் கலைப்பதுபோல நாமும் துன்பங்களால் கலங்கடிக்கப்படுவோம். கண்ணீரோடும் ஜெபத்தோடும் நாம் அவரண்டை வரும்வரை ஒரு சோதனைக்குப்பின் மற்றொன்று, ஒரு துக்கத்தையடுத்துப் பிறிதொன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆண்டவரைப் பின்பற்றாத மோவாப் வண்டல்களின்மேல் அசையாமல் தங்கியிருக்கலாம். ஆனால், தேவ மக்களாகிய இஸ்ரவேலர் அவ்வாறிருக்கலாகாது. இத்தகைய நிலையை நாம் அடையாதபடி எச்சரிக்கையாயிருப்போம். கவனமாக கர்த்தருக்கென்று உழைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும் காலம் இது. உறங்காமல் ஆண்டவருக்காக உழைத்திடுவோம்.

பாவத்தால் சோர்வடையாமல்
பாவியின் நேசா, எனைக் காரும்,
காலமும் கர்த்தருக்காயுழைத்து,
காலமும் வாழும் பேறடைவோம்.

அவர் நம்மேல் இரங்குவார்

பெப்ரவரி 22

“அவர் நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

நாம் பாவம் செய்ததால் நம் பேரில் அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் எப்போதுமே அவர் கோபத்தோடிருப்பவரல்ல. நமது பாவம் நம்மை நிர்மூலமாக்குமானால் தேவ இரக்கம் நம்மை பாக்கியவான்களாக்குகிறது. அவர் வார்த்தையின்படி ஆறுதலும் தேறுதலும் உண்டாகும்படி நமக்கு இரங்குவார். அவர் உருக்கம் நிறைந்தவர். அவர் இரக்கத்தில் சம்பூணர். மன்னிக்க ஆயத்தமானவர். இவைகள் தேவனுடைய சொந்த வாக்கியங்கள். நாம் அவைகளை மட்டும் நம்பினோமானால் நம்முடைய பங்களும், திகிலும் பறந்தோடும். நம்முடைய சந்தேகங்களும் மறைந்துப்போம். நாம் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பப்படுவோம்.

நாம் அவரைவிட்டு வீணாய் அலைந்தோம். ஆனாலும் அவர் நம்மேல் இரங்கினார். அலைந்துதிரிந்த ஆட்டைத் திரும்பவும் சேர்த்துக் கொள்கிறார். கெட்ட குமாரனை, ஆடல் பாடலோடு வரவேற்றுக் கொள்கிறார். சாத்தான் என்ன பழி சொன்னாலும் அவர் மனம் துருகவே உருகுவார். உன் பாவங்களும், பயங்களும் வெகுவாய் இருந்தாலும் அவர் மனம் உருகிவிடுகிறார். அவர் வாக்களித்தபடியாலும், அவர் தன்மையின்படியும் இரக்கமுள்ளவராயிருக்கிறார். எத்தனை முறை நமக்கு அப்படி செய்திருக்கிறார். இப்போதும் அவர் மனம் உருக்கத்தால் பொங்குகிறது. நீ பாவத்திற்காக மனம் வருந்துவதைக் கண்டாலோ தப்பிதங்களுக்காக அழுகிறதைப் பார்த்தாலோ அவர் உருகி விடுகிறார். உன் அக்கிரமங்களையெல்லாம் நிராகரித்து உன் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு விடுகிறார்.

இயேசு மனதுருகி
காயம் கட்டுவார்
துக்கிப்பவர்களுக்கு
ஆறுதலளிப்பார்.

மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது

டிசம்பர் 11

“மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது” 1.யோவான் 2:8

இவ்வுலகில் எங்குமே பாவ இருள் மூடியிருக்கிறது. எங்கெல்லாம் சுவிசேஷ ஒளி செல்கிறதோ, அங்கெல்லாம் அவ்விருள் மறைந்து விடுகிறது. பிசாசின் இருள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவ்விடத்திற்கெல்லாம் தேவ ஒளி செல்லும்போது அது நீங்கிப்போய்விடுகிறது. இன்று பல இடங்களில் அவிசுவாசம், அவபக்தி என்னும் மேகங்கள் காணப்படுகின்றன. மெய்யான நற்செய்தியின் ஒளிமட்டுமே அவைகளை நீக்க முடியும். தேவாலயங்களில் பிரசங்கிக்கப்படும் வசனத்தின்மூலம் அவ்வொளி பிரகாசிக்கிறது. நமது இருதயத்திலும் அவ்வொளி வீசுகிறது. இப்படி வந்த பிரசங்கத்தினால் இரட்சிப்பின் வழியையும், மெய்ச் சந்தோஷத்தையும், கீழ்ப்படிதலையும் நாம் அறிந்து கொள்கிறோம்.

இப்பொழுதும் அவ்வொளி நம்மை சூழ தெளிவாகவும், அழகாகவும் பிரகாசிக்கிறது. இந்தப் பிரகாசம் தேவனுடைய சுத்த தயவை விளக்குகிறது. மகிழ்சியாய் இருக்கவும், ஆறுதலாக நடந்து நம்பிக்கையோடு போர் செய்யவும், தீமையை விட்டுவிலகவும், மனநிறைவோடு பரலோகம் சேரவும் நமக்குப் பெலன்தருகிறது. நம்மில் மெய்யான ஒளி பிரகாசிக்கிறதென்றால், கோடானகோடி மக்கள் கண்டு கொள்ளாத ஒளியை நாம் கண்டு கொண்டோமே. ஆகவேதான் நம்முடைய தேவன் ஒளியில் இருக்கும்பொழுது நாமும் ஒளியில் நடந்து, உயிருள்ளவர்களாய் அவரோடு ஐக்கியப்பட்டு, நமக்குக் கிடைத்துள்ள சிலாக்கியத்தைப் பயன்படுத்திக் கொள்வோமாக.

மனிதனை மீட்கவே
தெய்வ ஒளி பிரகாசித்தது
பாவிகளை இரட்சிக்க
அதன் ஜோதி வீசுது.

கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது

ஏப்ரல் 12

“கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவது” அப். 21:14

தேவன் அன்பாகவே இருக்கிறார். அவர் வாக்கு உண்மையானால் அவர் சொன்னபடி செய்கிறவரானால், அன்போடும் நீதியோடும் இரக்கம் பரிசுத்தம் இவைகளால் அவர் நடத்துவாரானால், நமக்கு மகிமையையும், நன்மையையும் உண்டாக்குவது அவர் சித்தமானால், நாமும் இப்படியே அனுதினமும் சொல்ல வேண்டாமா? இந்த விருப்பம் நமது இருதயத்திலும் வளர விட வேண்டாமா? அவர் ஞானம் அளவற்றது. அவர் ஞானமுள்ளதை விரும்புகிறார். அவர் நமது ஷேமத்தையே விரும்புகிறார். நோக்கம் வைத்தே தேவன் கிரியை செய்கிறார். அவர் என்னதான் நமக்குச் செய்தாலும் நாம் நமது சொந்த சித்தப்படியே நடக்கப் பார்க்கிறோம். இப்பொழுது இருக்பிற நிலைமையிலும் வேறுவிதமாய் இருந்தால் நல்லது என்கிறோம். நமது தேவனுடைய சாமர்த்தியம், உண்மை, தயவு இவைகளில் குறைவுபடுகிறோம். எத்தனை மதியுPனம் இது. சில வேளைகளில் யோசனை இல்லாமைதான் இதற்குக் காரணம். விசுவாசக் குறைவினாலும் இது உண்டாகலாம். ஆனால் தன்னயப் பிரியமாகிய பாவந்தான் இதற்கு முக்கிய காரணம். இதற்குக் காரணம் சுய இஷ்டமே. அதனால் வருத்தமும் அடைகிறோம்.

தேவனை எதிர்க்கிறதுpனால் நம்மை வருத்தப்படுத்திக்கொள்கிறோம். உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கிறோம். தேவனுடைய சித்தம் நிறைவுள்ளதென்றும் மேன்மையானது என்றும் சொல்கிறோம். ஆனால் நம் பிரியப்படி நடவாவிட்டால், தேவன் நம்மை சோதித்தால், நம்மை பரீட்சித்தால், நாம் முறுமுறுக்கிறோம் அல்லது சோர்ந்து விடுகிறோம். விசுவாசியே, நீ பரிசுத்தமாய் இருக்கவேண்டும். பாக்கியவானாய் இருக்கவேண்டும். நித்திய நன்மையை அடைய வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் சுய இஷ்டத்தை உடனே உதறித் தள்ளி எப்பொழுதும் அவர் சித்தம் ஆகக்கடவது என்று சொல்லிப்பார்.

என் ஜீவ காலமெல்லாம்
தேவை எதுவோ தருவீர்
உமது சித்தமே நலம்
அதுவே என் பாக்கியம்..

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா

மார்ச் 07

“அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா.” மத். 6:6

கர்த்தருக்குத் தெரியாமல் யாராவது தன்னை இரகசியமான இடங்களில் மறைத்துக்கொள்ளக்கூடுமோ? ஒரு கிறிஸ்தவன் எந்த வகையிலாவது தன்னை அவரிடமிருந்து ஒளித்துக்கொள்ள முடியாது. எப்போதும் கர்த்தருடைய கண்கள் என்மேல் வைக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் அவர் என்னை நன்றாய்ப் பார்க்கிறார். அது என் தகப்பனுடைய கண்கள். என் பிதா என்னை அந்தரங்கத்திலிருந்துப் பார்க்கிறார். என் சத்துருக்களின் இரகசிய கண்ணிகளுக்கு என்னைத் தப்புவிப்பார். என்னைச் சேதப்படுத்தவிருக்கும் தீங்கிற்கு என்னை அருமையாய்த் தப்புவிப்பார்.

என் இதயத்தின் போராட்டங்களையும், என் அந்தரங்க சோதனைகளையும், அவர் பார்த்து அறிந்துக்கொள்கிறார். நான் ஜெபிக்கக்கூடாதபோது அவரை நோக்கிப் பார்ப்பதை அவர் பார்த்தறிவார். என் குறைவுகளையும், நிர்பந்தங்களையும் அவர் கண்ணோக்குகிறார். என் இரகசியமான பாவங்களையும் பொல்லாத சிந்தனைகளையும், தகாத தீய செயல்களையும் அவர் கவனிக்காமலில்லை. எத்தனை பயங்கரமான ஒரு காரியம் இது. இப்படி கண்ணோக்குகிற ஒரு தேவன் நமக்கிரு;கிறபடியால், இனி சோதனைக்கு இடங்கொடாமல், அவர் வழிகளுக்கு மாறாய் செய்யாமல் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். என் பரமபிதா என்னைப் பார்க்கிறார். ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடமும், என்னைப் பார்க்கிறார். என் உள்ளிந்திரியங்களையும் பார்க்கிறார். என் யோசனைகளையும் விருப்பங்களையும் அவர் பார்க்கிறார். இப்படிப் பார்க்கிறவர் எந்தப் பாவத்தையும் அளவற்ற பகையாய்ப் பார்க்கிறார்.

நான் எங்கே இருந்தாலும்
தேவ சிந்தை என்னை காணும்
நீர் என்னைக் காணும் தேவன்
பாவத்தை வெறுப்பேன் நான்.

இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு

மார்ச் 05

“இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.” ஓசியா 12:16

உன் தேவனை நம்பிக்கொண்டிரு அல்லது உன் தேவனுக்காகக் காத்துக்கொண்டிரு. தேவனிடம் காத்திருப்பதே நம்மை பரம சிந்தைக்கு வழி நடத்துகிறது. அவருடைய சிங்காசனத்துக்கு முன் நிறுத்தி அவர் வார்த்தையில் விசுவாசம் தந்து, அவர் இரத்தத்தை நம்ப வைத்து அவரின் சித்தத்திற்கு நேராய் நம்மை நடத்துகிறது. அவர் பாதத்தில் அமர்ந்திருக்கும்போதுதான் அவருக்குப் பிரியமானதை செய்ய நமது மனம் நினைக்கும். காத்திருக்கும் ஆத்துமாதான் சகலத்திலும் தேவனைக் காண்கிறது. எவ்விடத்திலும் தேவன் இருக்கிறார் என்றே உணருகிறது. எந்தக் காரியத்தையும் தேவன் நடத்துகிறார் என்று ஒத்துக்கொள்கிறது. உன் தேவனிடத்தில் எப்போதும் காத்திரு. அப்போதூன் எக்காலத்திலும் மோசத்திற்குத் தப்பி சுகித்திருப்பாய். எந்தச் சோதனையிலும் வெற்றிப் பெறுவாய். கர்த்தர் தம்முடைய நியமங்களின்மூலம் உன்னை மேன்மைப் படுத்துகிறதைக் காண்பாய்.

ஜாக்கிரதையுள்ள ஊழியக்காரன் தன் பட்சமுள்ள எஜமானிடத்திலும், உத்தம வேலைக்கரி தன் எஜமாட்டியிடத்திலும் பட்சமுள்ள பிள்ளை தன் பிரிய தகப்பனிடத்திலும் காத்திருப்பது போல காத்திரு. நீ காத்திருப்பது அவருக்குப் பிரியமானபடியால் அவரிடத்தில் காத்திரு. காத்திரு என்று உன்னிடம் அவர் சொன்னதால் காத்திரு. அவர் இரக்கம் காண்பிக்கும் நேரத்திற்காக காத்திரு. அவருக்காக காத்திருப்பவர்கள் வெட்கப்படமாட்டார்கள். கர்த்தரிடம் காத்திரு. திடமனதாயிரு. அதுவே பெலன். இனி ஆத்துமாவே, இன்று தேவனிடத்தில் காத்திருந்தாயா? இந்த இராத்திரியிலே அவரோடு அமர்ந்து காத்திருக்கிற சிந்தை உன்னிடத்தில் உண்டா? கர்த்தருக்குக் காத்திருக்கிறேன் என்று தைரியமாய் உன்னால் சொல்ல முடியுமா? இல்லையென்றால் இனிமேலாவது காத்திருக்க தீர்மானி.

விசுவாசித்து காத்திரு
திடமாய் நிலைத்திரு
அவர் வார்த்தை உண்மையே
அவர் பெலன் அளிப்பாரே.

Popular Posts

My Favorites

நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்

மார்ச் 10 "நீங்கள் சந்தேகமப்படாமல் இருங்கள்." லூக்கா 12:29 நாம் எல்லாரும் சந்தேகங்கொள்ள ஏதுவானவர்கள், சந்தேகிக்கக்காரணம் இல்லாததையே முக்கியமாய் சந்தேகிக்கிறோம். சிலரோ சந்தேகம் மார்க்கத்திற்கு உரியதுப்போல் அதை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள். இது தவறு. பாவமும்கூட இரட்சகர்...

இவர் யார்