இன்று உங்களுக்கு ஒரு விடுதலை
தேவையாயிருக்கிறது!
பாவத்தின் வல்லமையிலிருந்த உங்களுக்கு விடுதலை தேவை!
‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்…” (யோவான் 8:32) என்று இயேசு சொல்லுகிறார்.
ஆகவே கலங்காதீர்கள்!
சத்தியம் உங்களை விடுதலையாக்கும். சத்தியத்தை அறிய அறியத்தான் நீங்கள் விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும்.
சத்தியம் என்றால் என்ன?
நம்மை உண்டாக்கின தேவன் சத்தியமுள்ளவர் (யோவான்8:26), இயேசு கிறிஸ்து சத்தியமுள்ளவர் (யோவான்14:6), பரிசுத்த ஆவியானவர் சத்திய ஆவியானவர் (யோவான்16:13).
இவர்களை அறிய அறிய நம் வாழ்க்கையில் விடுதலை உண்டாகும். இவர்களை எப்படி அறிந்து கொள்வது? சத்திய வசனமாகிய வேத வசனங்கள் மூலமாகத்தான் சத்திய தேவனை அறிந்து கொள்ள முடியும் (யோவான்17:17).
வேத வசனம் சத்தியம். வேத வசனங்களை வாசித்து சத்தியத்தை அறிந்து கொள்ளும்போது நம் வாழ்க்கையில் விடுதலையை அனுபவிக்க முடியும்.
வேத வசனங்கள் மனிதனால் எழுதப்பட்ட தத்துவங்களல்ல.
‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது,” 2.தீமோ.3:16
பரிசுத்த ஆவியானவர், பரிசுத்த மனிதர்களைக்கொண்டு
எழுதியதுதான் வேத வசனங்களாகிய வேத புத்தகம்.
உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது வேத புத்தகம்தான்!
உலகிலேயே அதிகமாக விற்பனையாகும் புத்தகம் வேத புத்தகம்தான்!
தமிழில் முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் வேத புத்தகம்தான்!
உலகிலேயே அதிகமான புத்தகங்கள், விளக்க உரைகள் எழுதப்பட்டது வேத புத்தகத்திற்குத்தான்!
காரணம்,
வேத புத்தகம் தேவனுடைய வார்த்தைகள்.
‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்….இருக்கிறது.” எபி.4:12.
தேவனுடைய வார்த்தையாகிய சத்தியம் வல்லமையுள்ளது.
பாவியை பரிசுத்தமாக்கும் வல்லமை வேத வசனத்திற்கு உண்டு! வியாதியஸ்தரை குணமாக்கும் வல்லமை தேவனுடைய வார்த்தையில் உள்ளது! துக்கத்தில் மூழ்கிப்போகிறவர்களை ஆறுதல்படுத்தும் வல்லமை தேவனுடைய வார்த்தைக்கு உண்டு! சோர்ந்து போகிறவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை வேத வசனத்தில் உள்ளது! எந்த சூழ்நிலையில் இருக்கிற மனிதனையும் விடுவிக்கிற வல்லமை வேத வசனத்திற்கு உண்டு!
வசனத்தில் வல்லமை மட்டுமல்ல, ஜீவனும் (உயிர்) இருக்கிறது. வேத வசனங்களை வாசிக்கும்போது, அது நம்மோடு பேசுவதை உணர முடியும்! இந்த ஜீவனும், வல்லமையுமுள்ள வேத வசனங்களை வாசிப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! உங்களுக்கென்று ஒரு வேத புத்தகம் இல்லாவிட்டால் உடனே ஒரு வேத புத்தகத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.
தினமும் வேதத்தில் பிரியமாய் இருந்து. அதை வாசித்து, தியானியுங்கள். உங்கள் வாழ்க்கையில் பரிசுத்தமும், சுகமும், விடுதலையும், ஆசீர்வாதமும் உண்டாவதை காண்பீர்கள்.
சத்தியம் உங்களை பரிசுத்தமாக்கும்.
வேத வசனமாகிய சத்தியத்தை வாசித்து அறியும்போது உண்டாகிற ஆசீர்வாதங்கள் என்ன?
‘உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம்.” யோவான்17:17
வேத வசனங்கள் நம்மை பரிசுத்தப்படுத்தும்.
இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம். களியாட்டும், வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் ரோமர் 13:12,13,14.
நீங்கள் பரிசுத்தமாய் வாழ விரும்புகிறீர்களா?
தினமும் முழங்காலில் நின்று வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள். வேத வசனங்களை மனப்பாடம் செய்து உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சத்திய வசனமாகிய வேத வசனம் உங்களை பரிசுத்தப்படுத்தும்.
‘வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே’ சங்.119:9
கர்த்தருடைய வசனங்கள் தான் நம் வழிகளை சுத்தம் பண்ண முடியும்.
“நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” சங்.119:11.
வேத வசனங்களை வாசித்து, தியானிப்பது மட்டுமல்ல, அதை நம் இருதயத்தில் வைத்து வைக்க வேண்டும்.
விசுவாசம்!
“விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” ரோமர்10:17
அதாவது தேவனுடைய வசனத்தைகேட்கும்போது விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்.
வேத வசனங்களை வாசிக்கத்தான் விசுவாசம் பெருகும். விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாயிருக்கிறவர் இயேசு கிறிஸ்து எபி. 12:1.
இயேசுவை ஒரு மனிதன் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ளும்போது அவனுக்குள் விசுவாசம் துவக்கப்படுகிறது. இந்த விசுவாசம் வளர்ந்து பெருக வேண்டுமானால் தேவனுடைய வசனங்களை கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், தியானிக்கவேண்டும்.
உங்களுக்குள் ஆண்டவர் மீது விசுவாசம் பெருக வேண்டுமா? அதிகமாக வேத வசனங்களை வாசித்து, தியானியுங்கள்.
“விசுவாச வீரன்” என்று அழைக்கப்பட்டவர் ஜார்ஜ் முல்லர் என்கிற தேவ ஊழியர். கடந்த நூற்றாண்டில் இங்கிலாந்து தேசத்தில் வாழ்ந்தவர். விசுவாசத்தினால் கர்த்தருக்காக இவர் பெரிய காரியங்களை சாதித்தார்.
இவர் விசுவாச வீரனாக திகழ்ந்ததற்கு காரணம், வேத வசனங்கள்தான். இவர் தேவ புத்தகத்தை இருநூறு (200) முறை வாசித்து முடித்திருக்கிறார். நூறு முறைக்கு மேலாக முழங்காலிலேயே நின்று வேதத்தை வாசித்து முடித்தாராம்!
விடுதலை!
“சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” யோவான் 8:32
வேத வசனமாகிய சத்தியம் ஒரு மனிதனுக்கு விடுதலையை கொண்டு வரும். வேத வசனத்தை வாசிக்க வாசிக்க இந்த விடுதலையை உணரமுடியும்.
துக்கத்திலிருந்து விடுதலை!
“உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.” சங்.119:92
தேவனுடைய வசனம் நமக்கு மனமகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆகவே, அதை வாசிக்க வாசிக்க துக்கம் மறைந்து போகும்.
ஒரு கிறிஸ்தவரல்லாத ஒரு தாயார் மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். இவர்கள் கணவரோ மிகவும் கண்டிப்பானவர். இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதையே விரும்பாதவர். ஆலயத்திற்கோ, கூட்டங்களுக்கோ
இவர்கள் செல்ல முடியாது. டி.வியில் கூட கிறிஸ்தவ நிகழ்ச்சியை பார்க்க முடியாது.
இந்தச் சூழ்நிலையில் இவர்கள் எப்படி விசுவாசத்தை காத்துக் கொள்ள முடியும்? ஒரு சமயம் என்னிடத்தில் சொன்னார்கள்:
“வேத புத்தகம்தான் என்னுடைய ஒரே ஆறுதல். துக்கம் என்னை நெருக்குகையில் வேதத்தை திறந்து வாசிப்பேன். அப்பொழுது அதற்குள்ளிருந்து ஆண்டவர் என்னோடு பேசுவதை உணருகிறேன்.”
“வேத வசனங்களே என் மனமகிழ்ச்சி. இந்த வீட்டில் எனக்கு ஒரே துணை வேத புத்தகம்தான்” என்றார்கள் மகிழ்ச்சியோடு.
நீங்களும் வேதத்தை வாசிக்க வாசிக்க கவலையிலிருந்து விடுதலை அடைவீர்கள்.
பயத்திலிருந்து விடுதலை!
ஒரு சகோதரன் தன் அனுபவத்தை கூறினார். இவர் உள்ளத்தில் எப்பொழுதும் ஒரு பயம். எதற்காகவும் பயந்து கொண்டேயிருப்பார். பயம் இவரை அடிமையாக்கி விட்டது.
ஒருசமயம் ஏசாயா 41:10ஐ வாசித்தபோது ஆண்டவர் இவரோடு பேசினார்:
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”
என்று ஆண்டவர் இந்த வசனத்தின் மூலம் பேசினவுடன் பயம் உள்ளத்தை விட்டு விலகினது. இந்த சத்திய வசனம் விடுதலை கொடுத்தது.
நீங்களும் விசுவாசத்தோடு வேத வசனத்தை வாசிக்க வாசிக்க பயத்திலிருந்து விடுதலையடைவீர்கள். உங்களுக்குள் தைரியமும், பெலனும் உண்டாகும்.
ஆதலால், தினமும் தவறாமல் வேதத்தை வாசியுங்கள்!
வசனத்தை கருத்தாய் தியானியுங்கள்! வசனத்தின்படி வாழுங்கள்!
சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!
சத்தியமுள்ள தேவனே!
உமது வசனமாகிய சத்திய வசனத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம்!
நீர் விரும்புகிற வண்ணமாக சத்தியத்தை அறிந்து கொள்ள எனக்கு கிருபை தாரும்!
உம்முடைய சத்தியத்தினால் என்னை பரிசுத்தமாக்கும்!
உம்முடைய சத்திய வசனங்களினால் என் விசுவாசத்தை பெருகச் செய்யும்!
உம்முடைய வசனமாகிய சத்தியம் என்னை விடுதலையாக்கட்டும்!