துண்டு பிரதிகள்

Home துண்டு பிரதிகள்

வாய்ப்பைத் தவறவிட்டவள்!

அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.

மெர்லின் பொழுதுபோக்குகளில் அதிக நாட்டமுடையவள். அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவாள். அவள் அதிக சீக்கிரத்தில் ஒரு சிறந்த நாட்டியக்காரியாகவும் மாறினாள்.

தன் ஊரில் நடக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள், குதிரைப்பந்தயம், திரைப்படங்கள், நாட்டிய அரங்கம் போன்ற பற்பல இடங்களுக்கு மெர்லின் தவறாமல் செல்வாள். அவளின் அழகிய நடனம் அந்த நாட்டில் உள்ள பலரைக் கவர்ந்தது. சற்று பிரபலமானவுடன் அவளுக்குப் பெயரும், புகழும், பணமும் பெருகிவிட்டது.

ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது சுவர்களில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததை கண்டாள். தன் காரை நிறுத்தி அதை வாசித்துப் பார்த்தாள். கடவுளைப் பற்றிச் சொல்லும்படியாக ஒரு தெய்வீக மனிதர் அந்த ஊருக்கு கடந்து வருவதாக அதில் விளம்பரப்படுத்தப்பட்ருந்தது. மெர்லின் அந்த நபரின் பெயரை படித்ததும், இவர் பெரியமனிதர் அல்லவா! இவரைப் பற்றி நான் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சிந்தித்தவாறே தன் வீட்டை அடைந்தாள்.

அடுத்தநாள் அவள் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பணிப்பெண் தான் நேற்றைய தினம் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு கடந்து சென்றதையும், அங்கு நடைபெற்ற நிகழ்சிகளையும் பற்றி சொன்னாள்.

இதைக் கேட்ட மெர்லின் மனதிலும், ஒரு விருப்பம் வரவே, அன்று சாயங்கால கூட்டத்திற்கு அவளும் புறப்பட்டாள்.

மெர்லின் தன் காரை ஓட்டிச் செல்லும்போதே கூட்டம் கூட்டமாக மக்கள் அந்த மைதானத்திற்கு செல்வதைப் பார்த்தாள். தனக்கு அந்த கூட்டம் பிடிக்கவில்லையெனில் இடையில் எழுந்து வெளியே வந்துவிட வசதியான ஒரு இடத்தில் காரை நிறுத்தி, உள்ளே சென்றாள். சற்று நேரத்தில் அந்த கூட்டம் ஆரம்பித்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. அவள், இத்தனை நாட்கள் சென்ற கேளிக்கை நிகழ்ச்சிகளிலிருந்து இது வித்தியாசமானதாகவும், அவள் மனதிற்கு ஒரு அமைதியை கொண்டு வருவதாகவும் இருந்தது.

கூட்டம் ஆரம்பமாயிற்று. அந்த தேவமனிதர் பேசத் துவங்கினார். கூடியிருந்த எல்லாரும் மிக ஆவலாக, அவர் சொல்லும் காரியங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பாவத்தில் சிக்கியிருப்பவர்கள் தண்டனைக்கு எப்படி தப்ப முடியும்? என்ற வார்த்தைகளை அவர் பேசும் போது அந்தக் கூட்டத்திலிருந்த அநேகர் தங்கள் பாவங்களை உணர்ந்தார்கள். அதில் நாட்டியப் பெண்ணான மெர்லினும் ஒருத்தி.

கூட்டம் முடியும் இறுதி நேரத்தில் மக்கள் பலர் தங்கள் பாவத்திற்காக மனம் உடைந்து, அழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் மேடையிலிருந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்காகவே பேசப்பட்டதாக உணர்ந்தாள். நீ செய்த பாவங்கள் எவ்வளவு கொடிதானாலும், இயேசுவிடம் அறிக்கையிடு, இன்றே அதை விட்டு விடு. நிச்சயம் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நீ சொர்க்க வாழ்வை அனுபவிப்பாய் என்று அவர் பிரசங்கித்தார்.

இதைக் கேட்ட மெர்லின், தான் கடவுளை விட்டு தூரம் போன பாவி என்று உணர்ந்தாள். ஆனால் அது ஒரு நிமிடம் தான் நீடித்தது. மறுவிநாடி அவள் எண்ணம் சற்று மாறியது. ஐயோ! நாளை ஒரு முக்கிய நடன நிகழ்ச்சி உள்ளதே. ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் நான் ஆட வேண்டுமே, இன்று என் வாழ்வை நான் இயேசுவுக்கு கொடுத்தால், நாளை எப்படி நடனமாட முடியும்? என்று யோசித்தாள். அன்று மேடையிலிருந்து சொல்லப்பட்ட வார்த்தைகள் மூலம் பலர் தொடப்பட்டனர். ஆனால் மெர்லின் தன் டைரியில், ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்வேன்’ என எழுதிக் கொண்டவளாய் அந்தக் கூட்டம் முடியும் முன்னரே மனப் போராட்டத்துடன், காரை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் வீட்டிற்குப் புறப்பட்டாள்.

மெர்லினுடைய உள்மனதில் திரும்பத் திரும்ப அந்த தேவமனிதரின் வார்த்தைகள் ஓடினாலும், அவள் “இன்று அல்ல, இன்னும் ஒரே ஒரு ஆட்டத்திற்குப் பின் நாளை மனம் மாறுவேன்” என்று நினைத்தவாறே நான்கு வழி ரோட்டில் காரை ஒட்டினாள். அப்போது எதிர்புறமாக இருந்து வந்த ஒரு லாரி மின்னல் வேகத்தில் அவள் காரை மோதியது. கார் சுக்கு நூறாக உடைந்தது. இரத்த வெள்ளத்தில் மெர்லின் அந்த இடத்திலே பிணமாக கிடந்தாள். அவள் எழுதி வைத்திருந்த டைரியும் அங்கு திறந்து கிடந்தது. ‘இன்று அல்ல, இன்று அல்ல, நாளை நான் இயேசுவை என் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்வேன்’ என்ற வரிகளுடன் …

பிரியமானவர்களே, நாளையை சந்திப்பதற்கு முன் அவள் இருளுக்குள் சென்றுவிட்டாளே! நாளை என்பது நம்முடைய கையில் இல்லை. நல்ல தீர்மானங்களை எடுக்க காலந் தாழ்த்துவது நல்லதல்ல. அதினால் நாம் அவற்றை இழந்துபோக நேரிடலாம் – மெர்லினைப் போல.

நாம் இந்த பூமியில் வாழும் வாழ்க்கை நிலையற்றது. நிச்சயம் மரணம் ஒருநாள் நம்மை சந்திக்கும். அதற்குப் பின்னர் தான் நமக்கு என்றும் அழிவில்லாத ஒரு வாழ்க்கை ஆரம்பமாக உள்ளது. இந்த பூமியில் நாம் செய்யும் தவறுகளுக்கு பின்னர் நாம் அனுபவிக்கும் தண்டனை முடிவில்லாத நரக வாழ்க்கையே. நித்திய வாழ்வைப் பெற இயேசுவிடம் திரும்புங்கள். இன்றே தீர்மானம் எடுங்கள்.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13)

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

காணாமல் போன படகு

ராஜூ திருப்தியோடு தனது கைவேலைப்பாட்டை ரசித்துக்கொண்டே இருந்தான். காரணம், தன் அயராத முயற்சியால் ஒரு சின்ன விளையாட்டுப் படகை ஒருவார காலத்துக்குள் மிக அழகாக செய்து முடித்திருந்தான். எத்தனை அழகு! என்ன அருமையாக உள்ளது .. என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைந்தான்.

ஓ! இந்த அழகிய படகை ஆற்றங்கரையில் விட்டு விளையாடினால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்த ராஜூ, அதிசீக்கிரமாக ஆற்றை நோக்கி ஓடினான். மூச்சிரைக்க ஓடிவந்தவன் ஆற்றங்கரையில் மகிழ்ச்சியுடன் அதனை மிதக்க விட்டான். அந்த சின்ன படகு அசைந்து அசைந்து செல்வதை கண்டு மிகவும் சந்தோஷமடைந்தான். ஆனால் அந்த நேரத்தில் எதிர்பாராமல் பலமாக அடித்த காற்றினால் அந்த படகு வேகமாக ஆற்றுப்போக்கிலே அடித்துச் செல்லப்பட்டது. எப்படியாவது தன் சின்ன படகை எடுக்க அவன் பெருமுயற்சி செய்தும், அது அவனுக்குக் கிட்டவில்லை. ஏமாற்றத்தோடு வெறுங்கையனாய் சிறுவன் ராஜூ கண்ணீரோடு வீடுவந்து சேர்ந்தான். தான் கஷ்டப்பட்டு செய்த பொருள் தன் கண் முன்னாலே போய்விட்டால் யாருக்கும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்?

இரண்டு நாட்களுக்குப் பிறகு கடைதெரு வழியாக நடந்து சென்ற ராஜூவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. கடைத்தெருவில் ஒரு கடையில் விற்பனைக்காக கண்ணாடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சின்னப் படகை கண்டான். அந்த அழகிய படகு ராஜூ செய்து விளையாடிய அதே படகுதான். அவன் கண்களையே அவன் நம்ப இயலாமல் போனது.

ராஜூ சந்தோஷத்துடன் அந்த கடைக்குள் நுழைந்து, கடைக்காரரிடம், மிகவும் உரிமையுடன் சொன்னான், “ஐயா, அந்த அழகிய படகு என்னுடையது. நான் கஷ்டப்பட்டு செய்தது. இதை நீங்கள் எனக்குத் தர வேண்டும்” எனக் கேட்டான். கடைக்காரர் அவனிடம் “தம்பி, இந்த படகை நான் ஒருவரிடம் ஐம்பது ரூபாய்க்கு வாங்கிவிட்டேன். நீ உன்னுடையது என்று சொல்வதால் நான் வாங்கின அதே விலைக்கு வேண்டுமானால் நீ இதனைப் பெற்றுக்கொள். இது உன் படகு என்று நீ சொல்வதினால் நான் இலவசமாய் இதை உனக்குத் தர முடியாதே” என்று கூறினார்.

நான் செய்த படகுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டுமா? என்று ராஜூ சற்றும் யோசிக்கவில்லை. உடனே தன் வீட்டிற்கு ஒடினான். தான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாயை பொறுக்கி எடுத்து, வேகமாக அந்த கடைக்கு வந்தான். தொலைந்து போன அப்படகை திரும்பவும் தானே விலைகொடுத்து சந்தோஷமாக வாங்கிக் கொண்டு, தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டான்.

பிரியமானவர்களே, ராஜூவின் சிறிய படகைப் போலவே நாமும் இருக்கிறோம். ஆண்டவர் இயேசுதான் நம்மை உருவாக்கினார். ராஜூவின் படகு தொலைத்துவிட்டது போலவே நாமும் பாவம் செய்து நம்மை உண்டாக்கினவரை மறந்து அவரை விட்டு தூரம் போனோம். ஆனால் இன்று நம்மை உருவாக்கினவர், நம்மை அன்புடன் தேடி வந்துள்ளார்.

ராஜூ தன் படகை மீண்டும் விலை கொடுத்து வாங்கினது போலவே, ஆண்டவராகிய இயேசுவும் தன் சொந்த இரத்தத்தையே விலைக்கிரயமாக நமக்காக சிலுவையில் சிந்தினார். ஏன்? அவரால் சிருஷ்டிக்கப்பட்ட நாம் அவருக்கு சொந்தமாக வேண்டும் என்பதற்காகவே.

ராஜூ அந்த படகை அதிகமாக நேசித்ததாலே அந்த பணம் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. தன் பொருளைத் திரும்பவும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே அவனுக்கு பெரிதாக தெரிந்தது.

இதுபோலவே ஆண்டவராகிய இயேசுவும் நம் மேல் கொண்ட அளவற்ற அன்பினாலேயே தன் சொந்த உயிரை நமக்காகக் கொடுத்தார்.

ஓ! இறைவன் நம்மேல் வைத்த அன்பு எவ்வளவு பெரியது பார்த்தீர்களா? பாவத்தினால், அசுத்தத்தினால், இச்சையினால், அருவருப்பினால் இன்று உங்கள் வாழ்க்கையும் கூட தொலைக்கப்பட்டிருக்கலாம். கடவுளை விட்டு தூரம் போயிருக்கலாம். ஆனால் ஆண்டவராகிய இயேசு பாவத்தில் தொலைந்து போன உங்கள் வாழ்க்கையை மீட்கவே இன்று ஆவலுடன் உங்களை அழைக்கிறார்.

நீங்கள் அவருக்கு விரோதமாக எவ்வளவு கொடிய பாவங்களைச் செய்திருந்தாலும், இன்று மனம்வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டால், அவர் உங்களைத் தள்ளிவிடாமல், உங்கள் பாவங்களிலிருந்து நிச்சயம் உங்களை விடுவிப்பார்.

தன் சொந்த இரத்தத்தையே விலையாகக் கொடுத்து நம்மை மீட்கத் துணிந்த அவருக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுக்க நாம் தயங்கலாமா?

“என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுகிறது இல்லை” என்று கூறின இயேசு, நாம் இன்றைக்கு அவரிடத்தில் வந்தால் நம் பாவங்களை மன்னித்து, நமக்குப் பரிசுத்த வாழ்வினைத் தந்து, நம்மை ஆசீர்வதிக்க ஆவலுள்ளவராயிருக்கிறார்.

இன்னமும் தாமதம் ஏன் நண்பரே?

“இழந்து போனைதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.” (லூக்கா 19:10)

“எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே.” (1தீமோத்தேயு 2:5,6)

அண்ணா ஆதரியுங்கள் !!!

பல்லாண்டுகளுக்கு  முன்பு தமிழகத்தில் இரட்டைச் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். வெளித்தோற்றத்திற்கு இருவரும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் குணத்தினாலே அவ்விருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. மூத்தவன் உத்தமனாய் வாழ்ந்து வந்தான். இளையவனோ பஞ்சமாப் பாதகனாய் பல தீய செயல்கள் புரிந்து, தூயவாழ்க்கையற்றும் தனது தனையனுக்குத் தாங்க முடியாத தவிப்பைத் தந்தான்.

ஒருநாள் இளையவன் ஒரு சண்டையில் ஈடுபட்டுக் கொடுங்கொலை புரிந்துவிட்டான். அங்கிருந்த மக்கள் கூச்சலிடவே அவன் மிக்க பீதிகொண்டு வீடு நோக்கி ஓடினான். அதைக் கண்ட ஒரு காவற் சேவகனும் சில பொதுமக்களும் அவனைத் துரத்திச் சென்றனர். அவனோ அதிவேகமாய் வீட்டிற்கு ஓடி அண்ணா என்னை ஆதரியுங்கள். நான் ஒரு கொலை புரிந்துவிட்டேன் என்று சொல்லி அவன் கால்களில் வீழ்ந்து கதறினான். தன் தம்பியின் அவல நிலையை ஒரு கணத்தில் உணர்ந்த அண்ணன், தம்பியின் இரத்தக் கறை படிந்த துணிகளைக் கழற்றி தான் அணிந்துகொண்டு, தன்னுடைய உடைகளைத் தம்பிக்குத் தரித்து அவன் கையிலிருந்த கத்தியைத் தன் கையில் எடுத்துத் தெருவில் வந்து காவற்சேவகனிடத்தில் சரண்புகுந்தான். அங்கிருந்தோர் அவன் தான் கொலைபாதகன் என்று எண்ணி, அவனை நையப்புடைத்தனர். பின் அவன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்படத் தீர்ப்பு அளிக்கப்பட்டான். அவன் மரிப்பதற்குமுன் தன் தம்பிக்கு, உனக்குப் பதிலாய் நான் மரிக்கிறேன். இதை நினைத்து ஆவது உத்தமனாய் நடந்துகொள் என்று ஒரு கடிதம் எழுதி இரகசியமாய் அனுப்பி வைத்தான். இதைக் கண்ட தம்பி ஓவென்று கதறி அழுது, மனம் மாறினான்.

அத்தம்பியைப் போலவே மண்ணில் தோன்றிய மக்கள் யாவரும் பல தீய பாவச் செயல்களைப் புரிந்து, நரகத் தண்டனையை அடைய வேண்டியவராயினர். ஆயினும் கடவுள் தமது திவ்ய கிருபையினாலும், அளவற்ற அன்பினாலும் நம்மீது இரக்கம்கொண்டு, இயேசு என்ற நாமத்தில் மண்ணில் தோன்றி, ஒரு பாவமும் அற்றவராய் வாழ்ந்து, அரிய பல அற்புதங்களை ஆற்றி, உன்னத உபதேசங்களை அன்புடன் அருளிச் செய்து, முடிவில் நம்மை மீட்கும் கிருபாதாரப் பலியாகத் தம்மையே சிலுவையில் பலிகொடுத்தார். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2.கொரி.5:21) என்றும் நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படி அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1.பேது.2:24) என்றும் சத்திய வேதத்தில் கூறப்பட்டுள்ளன.

ஆகவே, நீரும் அத்தம்பியைப் போன்று உமது பாவங்களுக்காகவும், தீய செயல்களுக்காகவும் உண்மையில் மனம் வருந்தி, எல்லாம் வல்ல இறைவனுடைய பாதக்கமலங்களை தழுவி, அவரிடம் உமது பாவங்களை அறிக்கையிட்டு, அவரை உமது உள்ளத்தில் உறையும் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராகில், அவர் உமது பாவம் யாவையும் மன்னித்து, உமக்கு இரட்சிப்பையும், சாந்தியையும் பேரின்பத்தையும் இறுதியில் மோட்சத்தையும் தருவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர் கள் (அப்.16:31).

இன்றே. நீர் இறைவன் இயேசு இரட்சகரை உமது சொந்தத் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராக.

ஏன் எனக்கு அமைதியில்லை

நோய் என்பது வேறு, நோயின் அறிகுறிகள் என்பது வேறு. ஒரு மனிதனுக்குள் கான்சர் நோய் இருந்தால் அது உடனேயே வெளியேத் தெரியாது. ஆனால் காய்ச்சல், தலைவேதனை, சோர்வு, சரீர் வேதனை என பல பிரச்சினைகளை சரீரத்தில் உணரமுடியும். இவைகள் உண்மையான நோய்கள் அல்ல. உள்ளே மறைந்திருக்கும் கான்சர் நோயின் வெளிப்படையான அறிகுறிகளே இவைகள். எனவே மேற்கண்ட நோய்களுக்கு நாம் மருத்துவம் செய்தால் அதனால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். மறைந்திருக்கும் கான்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குரிய சிகிச்சை உரிய நேரத்தில் செய்யப்பட்டால்தான் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பலருக்கு பயம், அமைதியின்மை, பதட்டம், நம்பிக்கையின்மை, மனச்சோர்வு போன்ற மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவைகளை அவர்கள் தங்களின் பிரச்சினைகளாக எண்ணிக்கொண்டு அவைகளைச் சரி செய்ய பலவிதமானக் காரியங்களைச் செய்கின்றனர். சிலர் கோயில்களுக்கு செல்கின்றனர். சிலர் பக்தி ரீதியாக சில காரியங்களை செய்கின்றனர். சிலர் ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கின்றனர். சிலர் புனிதத்தலங்கள் போய்வருகின்றனர். சிலர் மனதை இலகுவாக்கும் சில ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர். ஆயினும் அவர்களுக்கு நிரந்தரமானத் தீர்வுகள் அவைகளால் கிடைப்பதில்லை. எல்லாம் சற்று நேரம் மட்டுமே செயல்படுகின்றன.

காரணம் என்ன? மேற்கண்ட மனப்பிரச்சினைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட நோயின் வெளிப்புறமான அறிகுறிகளே அந்த நோயின் பெயர் என்ன? அதன் பெயர்தான் பாவம். பாவம் என்றால் என்ன? தன்னைப் படைத்த தேவனோடு தனிப்பட்ட உறவுடன் வாழாமையின் பெயர்தான் பாவம். மனிதன் கடவுளின் உறவில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். மனிதன் கடவுளின் உறவினால் மட்டுமே முழுமையான வாழ்வினை அடைகின்ற இயற்கையுடன் படைக்கப்பட்டவன். கடவுளை நாம் நம்பலாம். கடவுளை நாம் வணங்கலாம். கடவுளை நோக்கி தினமும் பிரார்த்தனைகள் செய்யலாம். ஆயினும் கடவுளின் உறவுடன் வாழ்வது என்பது வித்தியாசமான ஒரு அனுபவம். கடவுளின் உறவினை மனிதன் தனக்குள் அனுபவிக்கும் போதுதான் அவனைவிட்டு தனிமை உணர்வு போகின்றது. தனிமை உணர்வு போகின்ற போதுதான் பயம், சோர்வு, பீதி, கவலை ஆகியவைகளும் போகின்றது.

கடவுளின் உறவு இல்லாத உள்ளான ஒரு நிலைமை தான் பாவம். அந்த பாவத்தின் அறிகுறிகள்தான் அகலாத பயங்களும், நீங்காத நிம்மதியின்மைகளும், மறையாத வேதனைகளும், விலகாத மனச்சோர்வுகளும், உள்ளான இருதயத்தில் கடவுளின் உறவினை அடைந்து உணரும்வரை மனரீதியான பலவிதத் துயர்தரும் விஷயங்கள் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.

கடவுளின் உறவினைப் பெறுவது எப்படி? கடவுளின் உறவை மனிதன் பெறுவதற்காக பாவநிவாரணம் செய்யப்பட வேண்டியத் தேவை உண்டு. அந்தப் பாவநிவாரணத்தை செய்திடவே தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் இந்த பூமியில் மானிடனாக வந்து பாவநிவாரணப் பலியாக தம்மையேக் கொடுத்தார். சிலுவையில் இயேசு கிறிஸ்து பாவநிவாரண பலியாக அடிக்கப்பட்டார். அதன் விளைவாக மனிதன் தேவ உறவுடன் வாழ்வதற்கான வாசல் திறக்கப்பட்டது. இந்த இரட்சகராகிய இயேசுவை
நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, இறை உறவுடன் வாழ விரும்பும்போது பாவம் ஒழிகிறது. அதாவது தேவ உறவற்ற நிலை போய், தேவ உறவுடன் வாழ்வதற்கான வாய்ப்பு கிட்டுகிறது. அதன் விளைவாக நாம் உண்மையான இதய அமைதி, நம்பிக்கை. சந்தோஷம், மனத்தூய்மை ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழிதிறக்கின்றது. பலவிதமான வாழ்க்கை சுமைகளினால் வருத்தப்பட்ட மக்களைப் பார்த்து இயேசு ‘என்னிடம் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருகிறேன்’ என்றார். அதாவது அவரோடு ஒரு நெருங்கிய உறவுடன் வாழவரும்போது, அவரால் நமக்கு உண்மையான அமைதி கிடைக்கிறது (மத்தேயு 11:28).

ஆண்டவராகிய இயேசு இன்றும் உங்களை அன்புடன் அழைக்கின்றார். தேவ உறவின்மை என்ற பாவ வாழ்வை விட்டு விலகி, தேவ உறவுடன் வாழ்தலாகிய தூய்மையான வாழ்விற்கு வரும்போது அங்கே பயமும், கவலையும், சோர்வும் நீங்கி உண்மையான தேவ அமைதியை இருதயத்தில் உணரலாம்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவர் இயேசுவே.
தேவ உறவில்லாத என் பாவ
வாழ்வை மன்னியும். எனக்குள் நீர்
வந்து உம்முடைய உறவை
அனுபவிக்கச் செய்யும்,
கவலைகள், பயங்கள், சோர்வுகள்,
சஞ்சலங்கள், பதட்டங்கள்
யாவற்றையும் நீக்கி என்னை
அமைதியுடன் வாழச் செய்யும். உமக்கு
பிரியமாக வாழ்வதற்கு உதவி செய்யும். இயேசுவின்
நாமத்தில் ஆமென்.

செவிகொடுங்கள்

இயேசு சொன்னார்: எனக்குச் செவிகொடுங்கள். (மாற்கு 7:14).

எல்லோரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 4:22).

இயேசு சொன்னார்: வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. (லூக்கா 21:33).

என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. (யோவான் 5:24).

இப்புஸ்தகம் தேவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்திலுள்ள வாக்கியங்கள் அடங்கியது. நீங்கள் பரிசுத்த வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ளவும் வாசிக்கவும் ஊக்கமாய் ஏவுகிறோம். ஏனெனில் அது  எல்லா மனிதருக்கும் தேவ வெளிப்படுத்துதலாயிருக்கிறது.

இரண்டு வீடுகள்

இயேசு சொன்னது : நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷலுக்கு ஒப்பிடுவேன்.

நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழைசொரிந்து, வெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (மத்தேயு 7:24-29).

போடப்பட்டிருக்கிற அஸ்திவாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல வேறே எந்த அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1 கொரிந்தியர் 3:11).

காணாமற்போன ஆடு

இயேசு இந்த உவமையைச் சொன்னார்: உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து,

அவைகளில் ஒன்று காணாமறபோனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே வீட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ?

கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து”: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா?

அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்துச் சந்தோஷம உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷமுண்டாயிருக்கும். (லூக்கா 15:3-7).

நாம் எல்லாரும் ஆடுகளைப்போல் வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். (ஏசாயா 53:6).

காணுமற் போதலும் கண்டுபிடித்தலும்

இயேசு சொன்னார்: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான்.

சில நாளைக்குப் பின்பு இளைய மகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு தூரதேசத்துக்குப்  புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பணணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.

எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக் கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களிலே பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.

அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்த தெளிந்தபோது அவன் என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனை பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது. நானோ பசியினால் சாகிறேன்.

நான் எழுந்து. என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே. பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதரகு நான் பாத்திரனல்ல. உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு தன் தகப்பனிடத்தில் வந்தான்.

அவன் தூரத்தில் வரும்போதே அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதறகு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து. இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரடசையையும் போடுங்கள்: கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள், நாம் புசித்துச் சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணுமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். (லூக்கா 15:11-24).

மன்னிப்பு ஈயாத ஊழியக்காரன்

இயேசு சொன்னார் : பரலோக ராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது.

அவன் கணக்கு பார்க்கத் தொடங்சினபோது பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒரு வனை அவனுக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். கடனைத் தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும அவன் பெண்சாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படி கட்டளையிட்டான்.

அப்பொழுது அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவரே, என்னிடத்தி ல் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி. அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.

அப்படியிருக்க அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப் போகையில், தன்னிடத்தல் நூறு வெள்ளிப் பணம் கடன்பட்டிருந்தவனகிய தன் உடன் வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத்தீர்க்கவேண்டும் என்றான்.

அப்பொழுது அவன் உடன் வேலைக்காரன் அவன் காலில் விழுந்து, என்னிடத்தல் பொறுமையாயிரும், எலலாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அவனோ சம்மதியாமல் அவன் பட்ட கடளைக்கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான்.

நடந்ததை அவனுடைய உடன் வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.

அவனுடைய ஆண்டவன் அப்பொழுது அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் கொடுத்துத்தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். (மத்தேயு 18:23-34).

ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து. கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32).

பேராசையுள்ள கமக்காரன்

இயேசு சொன்னார்: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தியிருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல.

அல்லாமலும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன் நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்துவைக்கிறதற்கு எனக்கு இடமில்லையே?

நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும், என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, பின்பு என் ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருட்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது: நீ இளைப்பாறி புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

தேவனோ அவனை நோக்கி : மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது நீ சேகரித்தது யாருடையதாகும் என்றார்.

தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சோத்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான். (லூக்கா 12:15-21).

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். (லூக்கா 12:31).

பெருமையும் தாழ்மையும்

இயேசு தங்களை நீதிமான்களென்று நம்பி மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக் குறித்து இந்த உவமையைச் சொன்னார்:

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று, தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுரைப் போலவும். இந்த ஆயக்காரனைப் போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன். என் சமபாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு, தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

அவனல்ல இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப் போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். (லூக்கா 18:9-14).

உங்கள் செவியைச் சாய்த்து என்னிடத்தில் வாருங்கள்; கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும், கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். (ஏசாயா 55:3, 6).

ஓர் அனுபவம்! ஓர் அறிமுகம்! ஓர் அழைப்பு!

ஓர் அனுபவம்!

ஒவ்வொருவருக்கும் பலவிதமான அனுபவங்கள் உண்டு. கிராமத்திலுள்ள ஒருவர் முதல் முறையாக பட்டணத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பது ஓர் ஆச்சரியமான அனுபவமாக இருக்கும். தாய் நாட்டை விட்டுகடல் கடந்து கப்பலிலோ, அதிலும் சிறப்பாக ஆகாய விமானத்திலோ வெளி நாடுகளுக்குச் சென்று திரும்புவது மகிழ்ச்சிகரமான ஒரு அனுபவமாக இருக்கும். பெருந் தலைவர் ஒருவர் நம் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும் அல்லவா? பத்து மாதங்கள் சுமந்து குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு பெண்மணிக்கு விலையேறப்பெற்ற அனுபவமாக இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒருவர் தன்னுடைய கடின உழைப்பு, அயராத முயற்சி. கட்டுப்பாடு, திறமை காரணமாக போட்டியில் வெற்றி பெறுவது பெருமிதம் அடையக்கூடிய அனுபவமாக இருக்கும்.

மேற்கூறிய அனுபவங்களை விடயெல்லாம்சிறப்பானது ஆன்மீக அனுபவமாகும். ஒவ்வொரு மனிதனும் இறைவனோடு தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டு அவரோடு நிலையான உறவிற்குள் வருவது எல்லாரும் பெற வேண்டிய ஓர் ஒப்பற்ற அனுபவமாகும்! மனித உள்ளத்தில் இறைவன் தங்க விரும்புகிறார். மனிதன், இறைவனின் அவதாரமாகிய இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக் கொள்வது ஓர் உன்னதமான அனுபவமாகும். இருள் இருந்த இடத்தில் வெளிச்சம் வருவதைப் போலவும் வெறுமையும் குறைவும் மாறி நிறைவடைவதைப் போலவும் உயிரற்ற நிலைமாறி உயிர் பெறுவதைப்போலவும் இந்த அனுபவம் மறக்க முடியாத மகத்தான ஓர் அனுபவமாகும். உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் இருக்கிறதா? நீங்கள் இந்த ஆன்மீக அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்களா?

ஓர் அறிமுகம்!

2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துகொள்ளுதல் அவசியம். இயேசு கிறிஸ்துவை, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஓர் மகாத்மாவாக மக்கள் கருதுகின்றனர். இயேசு கிறிஸ்துவை அல்லாமல் மக்கள் மறுமை வாழ்வில் மோட்ச பாக்கியத்தை அடைய முடியாது. இயேசு கிறிஸ்துவை நீங்கள் நம்புவதும் அவரை ஏற்றுக்கொள்வதும் அவரைத் தொடர்ந்து பின்பற்றுவதும் ஓர் அற்புதமான புதிய வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி ஓரளவிற்கு கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரைப் பற்றிய சரியான உண்மைகளை தெரிந்துகொள்வது உங்களுடைய வாழ்வை நிறைவுபடுத்தும் வாய்ப்பாக அமையமுடியும். இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார்!

ஓர் அழைப்பு!

இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் சோர்வுறச் செய்யும் சூழ்நிலைகள் பல உண்டு’ விடுதலைக்காகவும் ஏங்கி நிற்கும் மக்களை ஆண்டவராகிய இயேசு அழைக்கிறார் “வருந்தி மன பாரத்தினால் சோர்வுற்றவர்களே! என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் உள்ளத்தை இளைப்பாற்றி உங்களுக்கு என் ஆறுதலை அருளிச் செய்வேன்’ என்று ஆண்டவர் இயேசு அன்புடன் அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணத்திற்குப் பின் உள்ள நித்திய வாழ்வை மோட்சத்தில் நீங்கள் அவருடன் என்றென்றும் வாழவேண்டும் என்று உங்களை அழைக்கிறார். இவ்வுலக வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவது ஆசீர்வாதமே. அதற்கு மேலாக உலகத்தின் பல கவர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் பரிசுத்தமாய் வாழ்வதற்கென தம்முடைய வழிகளில் நடக்க ‘நீ என்னை பின்பற்றி வா’ என்று இயேசு இன்று உங்களை அழைக்கிறார்!

கடமையா – பாசமா

கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும், ஏனெனில் நியூயார்க் நகரிலிருந்து வரும் இரயில் பாலத்தைக் கடந்து செல்லவேண்டும்.

பாலத்தை அவருடைய பையன் பீட்டர் பாலம் மூடப்படுவதைப் பார்க்க ஓடோடி வந்தான். வந்த வேகத்தில் திடீரென கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். மறுவினாடியே இரயில் பாலத்தை நெருங்கிவிட்ட கூ சீழ்க்கையை அவர் கேட்டார். ஆனாலும் இரயில் இன்னும் கண்களுக்குப் புலப்படவில்லை. தான் உடனடியாகப் பாலத்தை மூடவேண்டியதை அவர் அறிவார். தவறினால் இரயில் பயணிகள் விபத்திற்குள்ளாவார்கள்! நதியில் விழுந்த பையனைக் காப்பாற்றுவதா அல்லது பாலத்தை மூடி இரயிலுக்கு வழியை அமைப்பதா? கடமையா – பாசமா? திரு. அல்பர்ட் என்ன செய்வார்?

உடைந்த உள்ளத்தோடு பையன் நதியில் மூழ்கிப்போவதைப் பார்த்தப்படி பாலம் மூடப்பட அதை முறைப்படி இயக்கினார். குடமை பாசத்தை வென்றுவிட்டது. இரயில் பாலத்தைக் கடந்ததும் நதியில் குதித்து பீட்டரின் உடலைக் கரைக்கு கொண்டுவந்தார். ஐயோ! காலம் கடந்து விட்டது. பையன் இறந்துவிட்டான்….

இந் நிகழ்ச்சி நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. கதறி அழும் தகப்பனாருடன் நம் உள்ளம் கலந்து விடுகிறதில்லையா? பையனைக் காப்பாற்ற எவ்வளவாய் ஏங்கினார். சிக்கலான நேரம், திடீர் தீர்மானம் செய்யவேண்டும். சொந்தப் பையனா அல்லது பயணிகளின் உயிரா? இரண்டையும் செய்ய இவரால் இயலாது. பையனின் உயிரைப் பொருட்படுத்தாமல், இரயில் இரும்புப் பாதையின் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து, பாலத்தை இயக்கினார். விபரம் அறிந்ததும் எவ்வாறு பயணிகள் திரு. ஆல்பர்ட் அவர்களுக்கு ஆறுதல், நன்றி கூறியிருப்பார்கள்!

இப்போது மற்றொரு முக்கியமான காட்சியை நம் மனக்கண் முன்பாகக் கொண்டுவருவோமாக. இங்கு கீழ்ப்படிதல் மட்டுமல்ல, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட தெய்வீக அன்பும் வெளிப்படுத்தப்படுகிறது. முழு இருதயத்தோடும் கல்வாரிக் காட்சியை நோக்குவோமாக! பரமபிதா தமது திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, மனித இனத்திற்கு இரட்சிப்பாகிய விடுதலையை உண்டாக்கி வைத்திருக்கிறார். இது இலவசம். பாவிகள் மீட்படைய இதுவே வழி. ஒன்று நம் பாவத்திற்கான தண்டனையை நாமே அடைந்து அழியவேண்டும் அல்லது பரமபிதா தம் திருக்குமாரனை உலகத்திற்கு அனுப்பி தண்டனை முழுவதையும் அவர்மேல் சுமத்த வேண்டும். ஆண்டவருக்கு நன்றி! ஒப்பற்ற அவரது அன்பு வெளிப்பட்டது.

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (இயேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16).

திரு. ஆல்பர்ட் தன் பையனை நதிக்கு அனுப்பவில்லை. கால் தவறி தானே விழுந்துவிட்டான். ஆனால் பரமபிதா தம் திருக்குமாரனை அனுப்பினார் (1.யோ.4:14). தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை (இயேசு கிறிஸ்துவை) இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது (1.யோ.4:9).

அருமையான நண்பரே! தேவ அன்புக்கு உம்முடைய உள்ளம் நன்றி செலுத்துகிறதில்லையா? உமக்காக உம் நல்வாழ்வுக்காக உமது பாவப் பிரச்சனைக்காக அவர் தம் திருக்குமாரன் இயேசு கிறிஸ்துவின் உயிரைக் கொடுத்தார் அல்லவா! நீர் அடையவேண்டிய தண்டனையைத் தாமே முன் வந்து ஏற்றுக்கொண்ட அருமை நாதராம் இயேசு பெருமானுக்கு உம்மையே ஜீவபலியாக, காணிக்கையாக அவரது மலரடிகளில் படைக்கமாட்டீரா? உம்மை அரவணைக்க, ஆசீர்வதிக்க, உமது பாவங்களை மன்னிக்க அவர் காத்திருக்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் சிந்திய இரத்தம் உம் பாவபாரத்தை நீக்கும். மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த இயேசு இரட்சகர் இன்றும் உம் உள்ளத்தின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். திறந்துவிடுங்கள்.

வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்.24:15)

மன அழுத்தம், ஆபத்தா?

நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக. வேகமான ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும் நம்முடைய அன்றாட வாழ்வில். மன அழுத்தமானது ஒரு எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது. மன அழுத்தம் என்பதை விளக்கப்படுத்தும் போது வாழ்வில் திணிக்கப்படுகின்ற மேலதிக நம் தாக்கங்கள் தேவைகள் மற்றும் பாரங்களால், மக்களில் ஏற்படுகின்ற எதிர்விளைவு என குறிப்பிடலாம்.

லண்டனில் சுமார் 5.000,000 மக்கள் தங்கள் வேலைகளினால் மிக அதிகமான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக அறிக்கைகள் குறிப்படுகின்றன. 2004 மற்றும் 2005 இல் மொத்தமாக 12.8 மில்லியன் வேலை நாட்கள் மன அழுத்தம் காரணமாக இழக்கப்பட்டுள்ளன. மனஅழுத்தமானது ஒரு ஆரோக்கிய சமூகத்திற்கு பெரிதான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

தோற்றம்:

மன அழுத்தம் ஏற்படும் வேளையில், நாம் நம் வாழ்வை சிந்தித்துப்பார்க்க வேண்டும். மன அழுத்தமானது நம் சுயத்தால், உள்ளான மனதின் காரியங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அல்லது நம் மேல் சுமத்தப்பட்ட ஒன்றாக அமையலாம். எப்படி அமைந்தாலும், அடிப்படைக் கொள்கையில் எந்தவித மாற்றமும் இருப்பதில்லை. மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால். அதனால் அவனுக்கு என்ன லாபம்? என இயேசு கிறிஸ்து கேட்ட கேள்வியே அந்த அடிப்படைக் கொள்கை (மாற்கு 8:36)
இது நமக்கு நிஜமான சவாலோடு அமைகின்றது. முன அழுத்தங்கள் நிறைந்த வாழ்விலிருந்து. சூழ்நிலையிலிருந்து வெற்றி பெற அல்லது தப்புவதற்கு முக்கிய விஷயமாக அமைவது எது? இந்த பூமியில் நம்முடைய வாழ்க்கைக் காலமானது. நித்தியத்திற்கு ஒரு படியேறுகின்ற ஒரு குறுகிய பயணமே. நாம் நித்தியவாழ்வைக் குறித்ததான காரியங்களுக்கு நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோமானால். நம் வாழ்வு வேறொரு தோற்றத்தில் காணப்படும். இந்த உலகின் அழுத்தங்கள். உடைமைகள். தகுதிகள் யாவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. ஏனெனில். நம் வாழ்க்கை முறைக்கேற்ப நம் ஆத்மா. நித்திய காலமும் இருக்கப் போகும் இடத்தின் முடிவு பரலோகம் அல்லது நரகம் ஆகும்.

ஆயத்தமா?

இது ஒரு மிக முக்கியமான விஷயமாகும். எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு நித்திய இடத்திற்கு செல்ல வேண்டியது தவிர்க்க முடியாத கட்டாயமான ஒன்று. நல்ல இடத்தை அடைவதற்குரிய முன்னேற்றப்பாடுகளை செய்து, தயாரான நிலையில் இருந்தால் தான் பரலோகத்தினுள் போக முடியும். அதற்கு நாம் எப்படி தயாராக முடியும்?

நமது பாவங்களை தேவனிடத்தில் அறிக்கைவிட்டு. பாவ வழிகளை விட்டு விலகி மனம் திரும்ப வேண்டும். கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்து அவர் சொல்லிய வழிப்படி நாம் வாழ வேண்டும் (அவரை நம் இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்). தன்னிடத்தில் விசுவாசம் வைக்கிறவர்கள் எவர்களோ, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனையை தன்மீது சுமந்து கிறிஸ்து இயேசு சிலுவையில் மரித்தார். அதன்பின், நமக்கு ஜீவன் கொடுக்கும்படி தேவனாக உயிர்தெழுந்தார். நமக்காக பாடுகள் பட்டு மரித்து, உயிர்தெழுந்து நமக்கு ஜீவன் தந்த கிறிஸ்துவை நாம் தொடர்ந்து பின்பற்றி வாழ வேண்டும். அப்போது தான். நமது வாழ்வில் பரலோகத்தை நாம் நிச்சயத்துடன் நோக்கிப் பார்க்க முடியும்.

இதில், சிறப்பான விஷயம் என்னவென்றால். அழுத்தங்கள் நிறைந்த உலகில் வெற்றி பெறுவதோ. உயிர்வாழ்வதோ முக்கியமல்ல. இரட்சிப்பை அடைவதும், நித்தியத்திற்கான ஆயத்தங்களை செய்வதுமே பெரிய காரியம். இயேசு கிறிஸ்து மூலமாக இரட்சிப்பைப் பெற்ற மனிதன். எவ்வித அழுத்தங்களுமில்லாமல், பரிபூரணம் நிறைந்துள்ள பரலோகத்தை, நித்திய எதிர்காலமாக நோக்கிப் போக முடியும். அங்கு நித்திய மகிழ்ச்சி உண்டு.

அதே வேளை, தேவனை விசுவாசிக்காமல் உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி வாழ்பவர்கள் நித்திய நரகத்தை அடைவார்கள். அங்கே (நரகத்தில்) நித்தியமான மன அழுத்தங்களால் அவதிப்படுவர் என்பதையும் வேதாகமம் நமக்கு எச்சரிக்கின்றது.
இதை வாசிக்கின்ற உனது நிலை என்ன? உலகத்தை ஆதாயப்படுத்த எண்ணி மன அழுத்தங்களாலேயே சாகப் (மடிய) போகின்றாயா? அல்லது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாக கிடைக்கும் நித்திய வாழ்க்கையை நோக்கி வாழப்போகின்றாயா?

மீட்பு

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24)

புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என எண்ணி வீட்டுக்குள் வரவேற்று தேனீர் அருந்தக்கொடுப்பீர்கள். விருந்தினரை வரவேற்று அவர்களை உபசரிப்பது நமது கலாச்சாரம். சில சமயங்களில் அவருக்கு உதவி புரியவும் முன்வருவோம்.

இதுபோன்ற நற்பழக்க வழக்கங்களை, கெடுதியானதும் துன்பம் நிறைந்ததுமான சூழ்நிலைகளில் மனிதர்கள் மறந்து விடுவதுண்டு. இவ்விதமான சூழ்நிலையில் அநேக மதிப்பிற்குரியவர்களும் கூட மிகவும் முரட்டுத்தனம் உள்ளவர்களாகவும், கொடுமையானவர்களுமாய் மாறிவிடுகிறார்கள். பசியுற்றவர்கள் திருடுவார்கள், பயமுற்றவர்கள் தங்கள் அயலாரைக் காயப்படுத்துவார்கள். பொய்யும், பகையும் நம் சூழ்நிலைகளை கெடுத்துவிடும். அனுபவங்கள் மற்றவர்களைக் குறித்து சந்தேகப்படவும் தீமையான எண்ணங்கொள்ளவும் வழிநடத்திவிடுகின்றது. இவ்வாறு நாடுகளுக்கிடையேயும் கெடுதியான இருளான எண்ணங்கள் காணப்படுகின்றது. நீங்கள் எப்படிப்பட்ட கசப்பானவர்கள்? உங்கள் எதிரியைவிட நீங்கள் முன்னேற முயற்சிக்கும்போது அவனுடைய அழிவைக்கண்டு நகைப்பதில்லையா? பள்ளிப்படிப்பிலும் கூட மற்றவர்களைக் குறித்த கரிசனை, பாரம் இல்லாது உங்களுடைய வெற்றியைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லையா? உணவருந்தும்போதும் சுவையான ஆகாரத்தையே விரும்பி அதைப் பெற்றுக்கொள்ள துடிப்பதில்லையா? நீங்கள் ‘தூஆ’ செய்யும்போது உங்களுடைய பிரச்சனைகளுக்காகவே அதிகநேரம் இறைவனிடம் (அல்லாவிடம்) கேட்பது இல்லையா?

இயற்கையாகவே மனிதன் சுயநலமும், தயக்கமும், தீய நாவும் உடையவனாக இருக்கிறான். ஏனெனில் இறைவனின் இரக்கம் அவனில் வாசம் செய்வதேயில்லை. பிறர் உனக்கு எதிராக யாதொரு காரியத்தையும் செய்யும்போது இறைவன் உன்னில் அன்பு கூர்ந்ததுபோல நீ அவர்களில் அன்பு கூறுவதேயில்லை. நாமெல்லாரும் பாவம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து சாத்தானின் சோதனைகளைக் கண்டு நகைக்கிறவர்களாய் காணப்படுகிறோம். இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நமக்கு பிரியமில்லை. மேலும், நம்மைப் படைத்தவரைப்பற்றிய எண்ணமும் நம்மில் இல்லை. நாம் நமது பாவங்களை விட்டுவிட மனமில்லாத அளவிற்கு நமது பாவத்தை விரும்புகிறோம். நமது எல்லா உறுப்புகளும் பாவம் நிறைந்ததாக இருப்பதால், நீதியும் நித்தியமுமான இறைவனின் கோபாக்கினைக்குப் பாத்திரராயிருக்கிறோம். நாம் நமது பாவங்கள் சிலவற்றை அறிந்திருக்கலாம். ஆயினும் இறைவன் நம் ஆன்மாக்களின் ஆழத்தையும் அறிந்திருக்கிறார். நமது பாவங்கள் அனைத்தும் அவருக்கு முன்னிருக்கின்றன. அவருடைய கட்டளையே நம்மை நியாயம் தீர்க்கிறது. அதன் தீர்ப்போ, “இப்பாவி தள்ளப்பட்டு இழக்கப்பட்டிருக்கிறான்” என்பதே.

மனிதத் தன்மைக்கு வேறுபட்ட தன்மையுடையவர் ஒருவர் இருக்கிறார். இவரே நமது பாவக்கட்டுகளைத் தகர்த்தெறிந்தவர். தம்மைப் பகைத்தவர்களையும் தம்மில் நிலைத் திருந்தவர்களையும் அவர் நேசித்தார். இறைவனுடைய மகிமை அவர் ஊடாக முடிவின்றிப் பிரகாசித்தது.

இந்த பாவமற்ற மனிதன் இயேசு கிறிஸ்துவே. இவர் நமதாண்டவர். கன்னிகையான மரியாளிடத்தில் இறைவனுடைய ஆவியினால் பிறந்தவர். அவருடைய உள்ளம் அன்பினாலும், சத்தியத்தினாலும் நிறைந்திருந்தது. அவரைக் குறித்து ரசூல்கள் கூறியதாவது, “அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14) மனிதனை, பிசாசின் தந்திரங்களிலிருந்து விடுவிக்கவும், இறைஅன்பினால் மனிதனை நிரப்பவும் அவர் இவ்வுலகத்தில் வந்தார். அவர் ஊழியம் கொள்ளும்படிவராமல், ஊழியம் செய்யவும், எல்லாரையும் மீட்டுக்கொள்ளும் பொருட்டுத் தம் உயிரையே மீட்புப் பொருளாகக் கொடுக்கவும் வந்தார்.

தமது மகத்தான அன்பிலே, கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து, அவைகளுக்கான விலையை செலுத்தி, இறைவனுடைய கோபாக்கினையை நமக்குப் பதிலாக தாமே சகித்தார். நம்மை நித்திய அழிவிலிருந்து காப்பாற்ற, அவர் மரித்ததினிமித்தம் நம் மெய் மீட்பரானார். தம்மிடத்தில் சுகம் பெற்றவர்களிடத்தில் அவர் கூலி கேட்கவில்லை. மரித்தவர்களை உயிருள்ளவர்களாய் எழுப்பினார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று உனக்கும் கூறுகிறார். உன்னிடம் நோன்பையோ, நற்கிரியைகளையோ அல்லது பலியையோ அவர் கேட்கவில்லை. உன்னை இறை சமாதானத்தில் ஆதரித்து, தம் சொந்த விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுகிறார். உன் இரட்சகரில் நம்பிக்கைவை, அப்போது உன்னுடைய விசுவாசத்தினால் நீ பிழைத்துள்ளாய் என்பதை நீ அறிந்து கொள்வாய்.

தம், நன்மையும் இரக்கமும் நிறைந்த கண்களினால் கடவுள் உன்னையும் மற்றெல்லா பாவிகளையும் பார்க்கிறார் என்பதனை நீ ஒருபோதும் மறந்துவிடாதே. நீ நல்லவன் என்பதால் உன்னை அவர் அவ்வாறு நோக்குகிறாறென்றல்ல, உன்னை நீயே மீட்டுக் கொள்ள முடியாதென்பதை அவர் அறிவார். சகல அங்கலாய்ப்பில் இருந்தும், துன்பத்தின் கண்ணியிலிருந்தும் உன்னை தூக்கியெடுக்க நித்தியமான கிறிஸ்து உன்னிடத்தில் வந்தார். கிறிஸ்துவண்டை வா! நீ சத்தியத்தைக் கண்டு கொள்வாய். இறை நீதியையும் பெற்றுக் கொள்வாய். கடவுள் உன்னைத் தள்ளிவிடாமல் அன்போடுன்னை வரவேற்கிறார். நீ அவரை உலக இரட்சகர் என நம்பியிருந்தால், இறைவன் உன்னை நீதிமானாகக் காண்கிறார். அன்புள்ள நண்பா, இறைவன் உன்னை நேசிக்கிறார். அதுமட்டுமல்ல, உன்னை சுத்தமாக்கவும் சித்தம் கொண்டுள்ளார். தாமதியாமல், அவர் உனக்கு அளிக்கும் அருளுக்காக அவருக்கு நன்றி செலுத்து. இறைவன் மகத்தானவரென்றும், தம்முடைய மீட்பின் நிமித்தம் மக்களை இலவசமாய் நீதிமானாக்குகிறாரென்றும் மற்றவர்களுக்குச் சொல். அவர்கள் மீட்பைப் பெற்றுக்கொள்ளவும், அளவில்லா அன்பினாலும், மகிழ்ச்சியினாலும், மேலும் நன்றியுள்ள இருதயத்தினாலும் நிரப்பப்படவும் உன் நம்பிக்கையினால் அவர்களுக்கு அறிவூட்டு.

நீ உன் தீய பழக்கவழக்கங்களிலேயே உழன்று கொண்டிராமல் அவைகளை விட்டு கிறிஸ்துவோடு வாழவும் அவருடைய பலத்தினால் தூய வாழ்வு வாழவும், கிறிஸ்து உன்னை உன் தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுவிக்க வல்லவராயிருக்கிறார். இதற்கு சந்தேகமேயில்லை. கிறிஸ்துவின் மீட்பு ஒரு முற்றுப்பெற்ற ஒரு வேலை. உன் வாழ்வை அதோடு தொடர்புள்ள போராட்டங்களோடும், சிக்கல்களோடும், தோல்விகளோடும் அவருக்கு அர்ப்பணி. அப்போது அவர் தமது காயப்பட்ட கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஆசீர்வதித்து, தமது சமாதானத்தை உன் சரீரத்திலும், தமது மகிழ்ச்சியை உன் உள்ளத்திலும், தமது சுத்திகரிப்பை உன் மனச்சாட்சியிலும் ஊற்றுவார் என்பதை நீ அறிந்து கொள்வாய். கிறிஸ்துவினுடைய அன்பின்விளைவை மக்கள் உன் வாழ்விலும் உன் வாழ்வினூடாகவும் கண்டு கொள்வார்கள்.

Popular Posts

My Favorites

அவர் முற்றிலும் அழகுள்ளவர்

அக்டோபர் 25 "அவர் முற்றிலும் அழகுள்ளவர்" உன். 5:16 ஆண்டவரை அதிகம் தெரிந்து கொண்டவர்கள் இவ்வாறுதான் அவரை வர்ணிப்பார்கள். அன்பு செலுத்தத்தக்க பண்பு அவரிடத்தில் உண்டு. அவரை நேசிப்பவர்கள் அவரில் வாசம்பண்ணுவார்கள். பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டவர்கள்...