நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்

அக்டோபர் 04

“நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்” மத். 5:13

உலகத்தின் உப்பாயிருக்கவேண்டிய நம்மைப் பாவமானது சாரமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. தேவ கிருபையால்தான் அது சுத்திகரிக்கப்பட்டுச் சாரம் உள்ளதாக்கப்படுகிறது. இந்த நன்மைகள் கிறிஸ்துவால் உண்டாகிய அவருடைய ஜனங்களுக்குப் பயனுடையதாகப் பரவுகிறது. தம்முடைய பிள்ளைகளை இயேசு உப்பைப்போல் இருக்கு வேண்டுமென்கிறார். இவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கத்தக்கவர்கள். கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பயனுடைய சாட்சிகளானவர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உப்புக்கல். இதனால் அவன் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயன் உள்ளவனாகிறான். கிறிஸ்தவனை வழிநடத்துபவை வேதவசனங்கள். அவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் போதனை தருவதாக இருக்க வேண்டும்.

பரிசுத்தவான்கள் இல்லாவிடில் இந்தப் பூமி எரியுண்டு அழிந்துபோயிருக்கும். தேவ பிள்ளைகள் இல்லாதிருக்கும் இடம் இருள் நிறைந்த இடம். பிரியமானவர்களே, நீங்கள் உப்பாக இருக்கிறீர்களா? உங்களைச் சூழ்ந்து இருப்போருக்கு உங்களால் நன்மைகள் உண்டா? உங்கள் பேச்சு, வாழ்க்கையும், தேவனுடைய சாரத்தைப் பெற்று எழுப்புதலோடும், கிருபையோடும் எல்லாரையும் சந்திக்கிறதா? நீங்கள் எல்லாருக்கும் பயன்படும் பாத்திரங்களாக இருக்கிறீர்களா? உங்களுடைய நடத்தையால், உலகத்தார் நலமானவைகளைத் தெரிந்து கொள்ளுகிறார்களா? இவ்வாறெல்லாம் இருந்து நீங்கள் உப்பாக வாழ்வீர்களானால், மற்றவர்களுக்கு நீங்கள் பயனுடையவர்களாயிருப்பீர்கள். நன்மைகளையும் செய்வீர்கள். நீங்கள் பாவத்துக்கு மரித்து நீதிக்கு உயிர்த்திருப்பீர்கள். நீங்கள் உப்பென்று உண்மையானால் அதன் குணங்கள் உங்களில் விளங்கும். கிருபை பெற்றவர்களாகிய நீங்கள் உப்பாயிருப்பீர்களானால் சாரமுடையவர்களாகிய நலமானதைச் செய்வீர்கள். சாரம் உள்ள உப்பாயிருங்கள். கிறிஸ்துவே உங்களிலுள்ள சாரம்.

இயேசு எனக்காய் மரித்தார்
என்னில் சாரம் ஊட்டினார்
சாரம் உள்ள உப்பைப்போல்
என்றும் வாழ்வேன், அவருக்காய்.

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

அக்டோபர் 27

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்” சங். 136:23

இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம்.

நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள். உலக இன்பத்திலும் அதன் ஆசாபாசங்களிலும் மூழ்கிப் போனவர்கள். எனவே நமக்கு எவ்விதப் பெருமையான நிலையும் இல்லை. மகிழ்ச்சி என்பது நமக்கில்லை. நாம் நிர்பாக்கியர். நம்மால் பயன் ஒன்றும் கிடையாது. நாம் என்ன பிரயாசப்பட்டாலும் பயன் மரணம்தான். நமது சுபாவமே மிகக்கேடானது. நமது உள்ளான நிலை பரிதாபத்துக்குரியது.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் கர்த்தர் நம்மை நினைத்தார். இத்தாழ்வான நிலையில் நாம் இருக்கும்பொழுதுதான் அவர் தமது குமாரனை அனுப்பினார். தூய ஆவியானவரை வாக்களித்தார். தமது நற்செய்தியை நமக்குத் தந்தருளி நம்மை நினைத்தார். தமது வல்லமையை நமக்குத் தந்தார். மோட்ச வீட்டை நமக்குத் திறந்தார். தமது சிம்மாசனத்தருகில் நிற்கும் பாக்கியத்தை நமக்கு அருளியிருக்கிறார். இவ்வாறாக கர்த்தர் நம்மை நினைத்தார். நாம் தாழ்வில் இருக்கும்பொழுதே தேவன் நம்மை நினைத்தார். அவருடைய இரக்கம் என்றுமுள்ளது. அது நம்மை அவரிடம் சேர்த்திருக்கிறது. கீழான நிலையிருந்த நம் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதியதும் அவருடைய கிருபையே. தமது வசனத்தை நமக்குத் தந்தது அவருடைய இரக்கமே. நமக்கு மகிழ்ச்சியைத் தந்து, நமக்குத் தம்முடைய ஆசீர்வாதங்களைத் தரவும் அவர் காத்திருப்பது அவருடைய தயவுதான். நமது தாழ்வில் அவர் நம்மை நினைத்தருளினார். அவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.

எமது தாழ்நிலையில்
எம்மைக் கண்ணோக்கிய கர்த்தர்
தம் சித்தப்படியே தான்
எம்மை இரட்சித்தார், தயவாய்.

அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்

அக்டோபர் 11

“அவர் லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்” உன். 6:3

விசுவாசிகள் லீலி மலர்களுக்கு ஒப்பிடப்பட்டுள்ளார்கள். இம் மலர்கள் வெளிகளில் வளர்வன அல்ல, தோட்டத்தில் பயிரிடப்படுபவை. தேவ பிள்ளைகள் அவருடைய தோட்டத்தில் வளர்க்கப்படுகிறார்கள். அவர் அவர்களை அதிகம் நேசிக்கிறார். எப்பொழுதும் அவர்களைச் சந்தித்து உரையாடி அவர்கள் நடுவில் உலாவுகிறார். இந்தத் தோட்டத்தில் உள்ள தேவ பிள்ளைகளின், ஜெபங்கள், துதிகள், சாட்சிகள், செய்யும் ஊழியம் ஆகியவை தேவனுக்கு மிகவும் பிரியம். அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தும்போது, அவரின் குரலை அவர்கள் கேட்கும்போதும் விசுவாசிகள் மிக மகிழ்ச்சிகொள்ளுகிறார்கள்.

இது ஓரு விசுவாசியின் உயர்ந்த தன்மையைக் காட்டுகிறதல்லவா? தொடுகிற எவரையும் காயப்படுத்தும் முள்ளைப்போலவோ, எதிரியையும் எவரையும் தாக்கும் கொடிய விலங்குபோலவோ இல்லாது, இவர்கள் லீலி மலர்களைப் போன்று உயர் பண்புடையவர்கள். உள்ளான அழகும், நற்குணங்களாகிய நறுமணமும் கொண்டு யாவராலும் விரும்பப்படுகிறார்கள்.

நண்பனே, நீ எவ்வாறு இருக்கிறாய்? உன் விசுவாச வாழ்க்கை நறு மணத்துடனுள்ளதா? பிறருக்கு தேவ சாட்சியாக வாழ்கிறாயா? எவ்விடத்திலிருப்பினும் ஒளி வீசும் சுடராய் நீ விளங்க வேண்டும். பலருக்குப் பயன்படும் பாத்திரமாக நீ இருக்க வேண்டும். மணம் வீசும் லீலி மலராகத் திகழ வேண்டும். அப்பொழுதுதான் உன் நேசர் உன் நடுவில் வந்து மேய்வார். உன்னோடு உரையாடுவார். உன்னுடனேயே அவர் தங்கியிருக்கும்படிடி அவரை வருந்தி வேண்டிக்கொள். அவர் உன் பிரியமான பிரியா நேசராயிருப்பார். நீ வருந்தி அழைத்தால் அவர் வருவார்.

உம் வல்லமையால் என்னை
உம்முடையவனாக்கும்
உம் லீலி மலர்களைப்போல்
உமக்குக் காத்திருக்கச் செய்யும்.

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்

அக்டோபர் 02

“முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்” ரோமர் 8:37

ஒவ்வொரு விசுவாசியும், தன் சுபாவத்தோடும், உலகத்தோடும், மாம்சத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. ஊழியம் செய்யத் துவங்கினால் அவனுக்கு மனமடிவுண்டாக்கும் காரியங்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. சாத்தான்தான் விசுவாசிக்கு முக்கிய சத்துரு. சாத்தான் சோதனைகளையும், நோய்களையும் மரணத்தையும் கொண்டுவரும்பொழுது தேவபிள்ளை இவைகளின்மீது ஜெயங்கொள்கிறான். இந்த வெற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம்தான் கிடைக்கிறது. இயேசுவின் அன்பே இவர்களைத் தாங்கி வெற்றியைப் பெற்றுத் தருகிறது.

இவர்களின் ஆண்டவரும் இரட்சகரும், சிநேகிதருமான இயேசு ஞானத்தையும், வல்லமையையும் அளிக்கிறார். இவற்றினால் விசுவாசிகள் வெற்றியடைகிறார்கள். இவ்வெற்றியை அடைவது இயேசு நாதர்மீது கொண்ட விசுவாசத்தினாலேயே. பொறுமையும் ஆழ்ந்த நம்பிக்கையும் வெற்றியடையப் பெலன் தருகின்றன. இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி, தோல்வியே காணாதது. இதுபோன்ற முழு வெற்றியை உலகில் எவரும் பெறமுடியாது. இயேசுவன்றி வேறு எவரும் வெற்றி தரவும் முடியாது. அவர் காட்டிய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமானால், நாம் வெறும் வெற்றிபெறுகிறவர்களாய் மட்டுமல்ல, முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாவும் மாறுவோம். விசுவாசியே, இயேசுவின் ஞானத்தின்மீதும், வல்லமையின்மீதும், பாதுகாப்பின்மீதும் உன் நம்பிக்கையை வைத்திருக்க மறவாதே. அவரையே உனது முன் மாதிரியாகக் கொண்டிரு. அப்பொழுது வெற்றி உனக்கு நிச்சயம். வெற்றியடைபவன் மகுடம் பெறுவான். உன் வெற்றிக்கிரீடம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எம் தலைவர் இயேசுவே,
துன்பம் அவருக்காகப்பட்டால்
இன்ப வெற்றியைத் தருவார்
என்றும் வெற்றி வீரராவோம்.

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

அக்டோபர் 31

“இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்” சங். 147:3

மனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக் கடினத்தைக் குறித்து துக்கப்படுவான். தேவன் பாவங்களை மன்னித்தார் என்ற மனநிறைவு ஒன்றே இருதயத்தை இளகச் செய்யும். தேவ ஆவியானவரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்படும்பொழுது, பாவ உணர்வு அதிகம் ஏற்படும். நமது குற்றங்கள், குறைவுகள் எல்லாம் நமது இருதயத்தை நொறுக்கும் தேவ பயம் உண்டாக்கும். இந்நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்க இயேசு கிறிஸ்து மனபாரம் நீக்கி மனமகிழ்ச்சியளிப்பார்.

இந்நேரத்தில் சாத்தான் அதிக தீவிரமாக செயல்படுவான். தேவ வசனத்தைப்பற்றிய அறிவு குறைந்து அவிசுவாசம் பெருகும் போது மனம் கடினமாகும். மனந்திரும்புவதும் கடினமாகும். ஆவி நெர்ந்து போதும். இந்நிலையில் இருதயம் நொறுங்குண்டு போய்விட்டதால் தோன்றும். அப்பொழுது தன்னைக் தேவனுக்கு முன் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நொறுங்குண்ட அவன் இதயம் குணமாகும். ஆண்டவருடைய வசனமும், இரட்சகருடைய இரத்தமுமே, மனசாட்சிக்கு அமைதியை கொடுத்து, உடைந்த இதயத்தைச் சீர் செய்யும். அப்பொழுது காயப்பட்ட இதயம் குணமாகும்.

இதை வாசிக்குத் நண்பனே, உன் இருதயம் நொறுக்கப்பட்டிருந்தால் அதைக் குணப்படுத்தும்படி உன் தேவனிடத்தில் கெஞ்சிக்கேள். கர்த்தரை நோக்கிப்பார். அவர் உன்னைக் குணமாக்குவார்.

காயப்பட்ட இருதயத்தைக்
கழுவி சுத்தப்படுத்தும்
தயக்கமுள்ள நெஞ்சை அது
மயக்கமின்றி விடுவிக்கும்.

அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்

அக்டோபர் 07

“அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்” யோபு 23:10

யோபு சோதனை என்னும் அக்கினிக்குகையில் வைக்கப்பட்டான். அது வழக்கமாக உள்ளதினின்றும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கப்பட்டது. அவனுக்கு வந்த எல்லாச் சோதனைகளிலும் அவன் உத்தமனாக நிரூபிக்கப்பட்டான். குறைவுள்ளவனானாலும் அவன் உண்மையுள்ளவன். தேவன் தன் இருதயத்தையும், நடத்தையையும் விருப்பத்தையும் அறிந்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியும். தன்னுடைய சோதனையின்பின்தான் புதுபிக்கப்படுவான் என்ற நம்பிக்கையும் அவனுக்கு அதிகமாக இருந்தது.

தேவன் நம்மைச் சோதிக்கும் நோக்கமே இதுதான். நம்முடைய எஜமானுக்கு நாம் தகுதியுடையவர்களாகும்படியே அவர் நமக்கு அவைகளை அனுமதிக்கிறார். நித்திய மகிமைக்கு நம்மை ஏற்றவர்களாக்கவே நம்மைச் சோதித்துத் தூய்மை ஆக்குகிறார். நமது பாவங்களும் தவறுதல்களும் இந்தச் சோதனைகளால் நம்மை விட்டு நீங்கி விடும். நமக்கு வேறெதுவும் நடக்காது. நமது பேரின்பத்தின் பலன்கள் அதிகரித்திடும். நித்திய மகிழ்ச்சிக்கு அவை வழிவகுக்கும். நமது தேவன் மாறுகிறவரல்ல. அதுதான் நமக்கு மகிழ்ச்சியும் மனஉறுதியும் தரும். நான் கர்த்தர், நான் மாறாதவர். ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாவதில்லை என்கிறார். கர்த்தர், தேவன் நம்மைப் புதுப்பிக்கச் சோதனையிடும்பொழுது புடமிடும் குகையண்டை அமர்ந்து பணிமுடிந்ததும் அக்கினியை அவித்துவிடுகிறார். சோதனைக்குள் இருக்கும் கிறிஸ்தவனே, கர்த்தர் உன் சோதனையை மாற்றுவார். உன்னைப் புதிப்பிப்பார். அவர் அன்பினால் அவ்வாறு செய்கிறார். இதை நம்பியிரு. அவிசுவாசங்கொள்ளாதே. உன் விசுவாசத்தை வளர்த்துத் தைரியங்கொள். யோபைப்போல் நான் போகும்வழியை அவர் அறிவார், அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் என்று சொல்.

துன்பம் எனும் சூளையிலும்
உம் வாக்கையே நம்புவேன்
நீர் என்னைத் தாங்குகையில்
பொன்னைப்போல் மிளிருவேன்.

Popular Posts

My Favorites

தேவன் பிரியமானவர்

ஓகஸ்ட் 08 "தேவன் பிரியமானவர்" கலா. 1:15-16 அப்போஸ்தலனாகிய பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்து முதல் பிரித்தெடுக்கப்பட்டதையும், கிருபையினால் அழைக்கப்பட்டதையும், கிறிஸ்து தன்னில் வெளிப்பட்டதையும், தான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், பிரித்தெடுக்கப்பட்டதையும் குறித்து இவை யாவும் தேவனுடைய...