நம்மை இரட்சித்தார்

ஏப்ரல் 08

“நம்மை இரட்சித்தார்” 2.தீமோ. 1:9

இரட்சிப்பு இம்மையிலும் கிடைக்கும் நன்மை. நாம் கிறிஸ்துவுக்குள் வந்தால் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நீதிமான்களாக்கி நம்முடைய பாவத்தை மாற்றி நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். இப்போதும் விசுவாசத்தின் பலனாக ஆத்தும இரட்சிப்பைப் பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் பொல்லாப்பினின்றும், சத்துருக்களினின்றும், பயங்களினின்றும் முற்றிலும், நீங்கலானவர்களல்ல. என்றாலும் நமது இரட்சிப்பு நிச்சயந்தான். நாம் இப்பொழுது பூரணமாய் கிறிஸ்துவைப்போல் இல்லை. ஆனால் அவர் இருக்கிற வண்ணமாய் அவரைப் பார்ப்போம். ஆதலால் அவரைப் போலிருப்போம்.

ஒவ்வொரு விசுவாசியும் நீதிமானாக்கப்பட்ட நிலைமையில் இருக்கிறபடியால், தேவனோடு நடந்து தேவனுக்காக வேலை செய்து, தேவ சித்தத்துக்கு ஏற்றபடி வாழ வேண்டும். கிறி;ஸ்து நம்முடையவர். அவருடையதெல்லாம் நமக்குச் சொந்தம். தேவன் நம்முடையவர். அவருடைய குணாதிசயங்களுக்கும், ஆளுகைக்கும் குறைவுவராமல் அவர் நமக்காகச் செய்யக்கூடியதையெல்லாம் செய்வார். இந்த நிச்சயத்தை அறிந்தவர்ப்போல நாம் வாழ வேண்டும். அப்போஸ்தனாகிய பவுல் அப்படித்தான் ஜீவித்தான். இந்த நிச்சயம்தான் வேலைக்கு நம்மைப் பலப்படுத்தி, போராட்டத்தில் நம்மைத் தைரியப்படுத்தி, அடிமைக்குரிய பயத்தையெல்லாம் நீக்கி, கர்த்தருக்கென்று முற்றிலும் நம்மை அர்ப்பணிக்க உதவும். நமக்கு உறக்கம் வரும் வரையிலும் படுக்கையிலே இதைப்பற்றியே தியானிப்போம். தேவன் என்னை இரட்சித்திருக்கிறவர். எனக்கு அவர் சுகத்தையும், ஐசுவரியத்தையும் பட்சமுள்ள உறவினர்களையும், வீட்டு வசதிகளையும் ஓருவேளை கொடாதிருப்பினும், நித்திய இரட்சிப்பினால் என்னை இரட்சித்துள்ளார்.

கிறிஸ்துவால் மீட்கப்பட்டேன்
மேலானதையே நாடுவேன்,
ஸ்தோத்தரித்துப் போற்றுவேன்
அன்பின் சிந்தையில் நடப்பேன்.

உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்

ஏப்ரல் 23

“உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்” எபி. 10:22

அவிசுவாசத்தினால்தான் நாம் தேவனுக்குத் தூரமாய் இருக்கிறோம். அப்போது ஆவியில் குளிர்ந்துப்போய் ஆறுதலற்றவர்களாகிறோம். தேவன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார். அவர் இரக்க சிம்மாசத்தில் வீற்றிருக்குpறார். தன்னைப் பலியாய் கொடுத்ததினால் பாவம் பகைக்கப்பட்டுப் போயிற்று. திரைச்சீலையே இரட்சகர் கிழித்துப் போட்டார். அவரிடம் சேர வழி தாராளமாய் திறந்திருக்கிறது. நம்முடைய பிரதான ஆசாரியன் இரத்தத்தோடு அங்கே நிற்கிறார். தூபவர்க்கம் பொற்கலசத்தில் எரிந்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய மனது நம்முடைய காரியங்களில் உத்தமமாய் இருக்கிறது.

தேவன் தம் குமாரனைக் கொடுத்த அன்பு வெறும் அன்பல்ல. இரட்சகரும் நம்முடைய விஷயத்தில் உண்மையான அன்பு வைத்திருக்கிறார். இல்லையென்றால் நம்முடைய பாவங்களுக்காக மரித்திருக்கவும்மாட்டார். நமக்காக பரிந்து பேச மேட்சத்திற்கு போயிருக்கவும்மாட்டார். நாம் தேவனுக்கு உத்தம பிள்ளைகளாய் நம்பிக்கையோடே அவரிடம் சேருவோமாக. அவரிடம் மனம் திறந்து பேச மனிதன் ஆசைகளையும், விருப்பங்களையும் தாராளமாய் சொல்லலாம். பயந்த வேலைக்கானைப்போல தூர நில்லாமல், தகப்பனிடத்துக்கு ஓடி அவர் மடியில் தலையை வைக்கிற குழந்தையைப்போல் நெருங்கி சேருவோமாக. கோபாமுள்ள தேவனுக்கு முன்பாக நடுங்குகிறதுபோல் தூரத்தில் நில்லாமல் அவரை உறுதியாய் நம்புகிறவர்களைப்போல அவர் அருவே போவோமாக. அடிமையைப் போல் அல்ல, பிள்ளைகளுக்குரிய அமர்ந்த நம்பிக்கையினால் அவரை மகிமைப்படுத்துவோம்.

இயேசுவின் இரத்தம் நம்பி
தேவனிடம் சேருவேன்
இரக்க ஆசனத்தை நோக்கி
தைரியமாய் ஜெபிப்பேன்.

நீங்கள் அசதியாயிராமல்

ஏப்ரல் 14

“நீங்கள் அசதியாயிராமல்” ரோமர் 12:11

அதியாயிருந்தால் சத்தியத்தைப் புரட்டி நன்மைகளை அவமதித்து கர்த்தரைக் கனவீனப்படுத்தி, அந்தகாரப் பிரபுவுக்கு சந்தோஷத்தை உண்டாக்குவோம். அசதி, அவகீர்த்தி, உலக காரியங்களிலும், பரம காரியங்களிலும் ஒன்றே. நம் கடமைகளில் நாம் அசதியாயிராமல் சுறுசுறுப்பாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். நல்ல நோக்கத்தோடு, நல்ல சிந்தையோடு, வைராக்கியத்தோடு நம் வேலையைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இப்படி தன் வேலைகளைச் செய்வது அவனது கடமை.

இந்த வசனத்தில் அப்போஸ்தலன் பரம காரியங்களைக் குறித்துதான் பேசுகிறோம். பரம நன்மைகளைத் தேடுவதில், தாலந்துகளைப் பயன்படுத்துவதில், கிரியைகளை முயற்சி செய்வதில் நல் மாதிரிகளைப் பின்பற்றுவதில் நாம் அசதியாயிருக்கக் கூடாது. விசுவாசித்தின்மூலம், பொறுமையின்மூலம், வாக்குத்தத்தங்களை சுதந்தரித்தவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். முற்பிதாக்களின் நடத்தை உங்களை உட்சாகப்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் அன்பு உங்களை நெருக்கி ஏவ வேண்டும். சுவிசேஷத்திலுள்ள பரிசுத்த கற்பனைகள் உங்களை நடத்த வேண்டும். கிருபையின் மகிமை நிறைந்த வாக்குத்தத்தங்கள் உங்களை உயிர்ப்பிக்க வேண்டும். ஆகவே சோம்பலுக்கு இடங்கொடாதீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் மக்கள் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். உலகம் அதிக ஜாக்கிரதையாயிருக்கிறது, உங்களுக்காக பணி செய்ய தேவதூதர்களும் ஜாக்கிரதையாயிருக்கிறார்கள். தேவ சமுகத்தில் உங்கள் காரியம் முடிக்க இயேசுவும் ஜாக்கிரதையாய் இருக்கிறார். காலம் இனி செல்லாது. கணக்கு ஒப்புவிக்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. நமக்குக் கிடைக்கும் கடைசி தருணம் சீக்கிரம் வரும்.

உமக்கர் உழைக்கும்போது
நாங்கள் என்றும் பாக்கியர்
உழைப்பெல்லாம் அன்பினால்
இன்பமாகும் அதனால்.

நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்

ஏப்ரல் 02

“நான் திரும்பி வருமளவும் இதைக் கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்.” லூக்கா 19:13

நமது நேசர் நமக்கு தேவையானதெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறார். அவர் பயப்படாதே என்கிறார். தாலந்துகளை நமக்குத் தந்து தமது திரவியத்தை நமக்கு ஒப்புவித்திருக்கிறார். தமது பிதாவினிடமிருந்து சீக்கிரம் திரும்பி வருவார். அவர் வருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்கிறார். நாம் தேவனுடைய கரத்தில் அதிக ஜாக்கிரரையாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் காரியத்தில் சுறுசுறுப்பாயிருக்கவேண்டும். தமது வேலையை எப்படி செய்தோம, எந்த நோக்கத்தோடு அதைச் செய்தோம் என்று விசாரிக்க திரும்பவருவார். அவர் வந்து நமது செய்கைகளுக்குத் தக்கபடி நம்மீது கோபப்படுவார், அல்லது மகிழ்ச்சியடைவார். கடிந்துக் கொள்ளவும், புகழ்ந்துக் கொள்ளவும் செய்வார். ஒவ்வொருவனுக்கும் அவனவனுக்குத் தக்கப் பலன் அளிப்பார். இதை நாம் விசுவாசிக்கிறோமா? இதை நம்பினவர்கள் போல் வாழ்ந்து வருகிறோமா?

நாம் ஒருநாள் கிறிஸ்துவின் நியாயசனத்துக்கு முன்பாக நிற்க வேண்டும். அவருக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோமா? அன்பரே, நமது நேரமும், நமது தாலந்தும், ஏன் நாமும்கூட கர்த்தருடையவர்கள். அவருக்கென்றே அவைகளைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அவருக்காகவே எல்லாவற்றையும் உபயோகிக்க வேண்டும். இந்த நாளை கிறிஸ்துவுக்கென்று செலவிட்டோமா? இன்று நமது வேலைகளை கர்த்தருக்குமுன் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்ற நோக்கோடு செய்திருக்கிறோமா? நாம் மற்றவர்களைப்போல தூங்கச் கூடாது. நமக்கென்று வாழாமல் அவருக்கென்று மட்டும் தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்துவை நோக்கி ஜீவனம்பண்ணி அவருக்காக மாத்திரம் பிழைப்போமாக.

என் தாலந்தை உபயோகித்து
இயேசுவில் நான் பிழைத்து
அவர் சித்தப்படி செய்து
அவரைச் சேர்வதே நலம்.

நீதிமான்களின் உயிர்த்தெழுதல்

ஏப்ரல் 06

“நீதிமான்களின் உயிர்த்தெழுதல்.” லூக்கா 14:14

கிறிஸ்துவுக்குள்  மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுந்திருப்பார்கள். அழியாமையுள்ளவர்களாய்ப் பலத்தோடும் ஆவிக்குரிய மகிமையோடும் எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவின் மகிமையான சரீரத்துக்கு ஒப்பான சரீரம் அவர்களுக்கு இருக்கும். அவருடைய சத்தம் அவர்களை உயிர்ப்பித்து, அவருடைய வல்லமை அவர்களை எழுப்பும். அவரின் மகிமை அவர்களைச் சூழ அலங்காரமாயிருக்கும். அவர்கள் அவரைப்போலவே இருப்பார்கள். காரணம் அவர் இருக்கிறவண்ணமாகவே அவரைப் பார்ப்பார்கள். அந்த உயிர்த்தெழுதலின் வேளை எவ்வளவு ஒரு மகிழ்ச்சியாய் இருக்கும்.

நாமும் அதோடு சம்மந்தப்பட்டவர்களாயிருந்தும் அதைப்பற்றி அதிகம் நினைக்கிறதில்லை. அந்த நேரத்தை ஆவலாய் எதிர்ப்பார்க்கிறதில்லை. ஒருவேளை தூக்கத்தில் நாம் மரித்து அடுத்த காலை உயிர்த்தெழுதலின் காலையாய் இருக்கலாம். அல்லது இருக்கிறோமா? நீதிமான்களுடைய உயிர்த்தெழுதல் மகிமை நிறைந்தவர்களாய்ப் புறப்பட்டு வருவார்கள். ‘இயேசுவோடு ஐக்கியப்பட்டு, அவர் மகிமையில் பங்கடைந்து, அவர் இருக்கும் இடத்தில் அவரோடுகூட தியானிக்க வேண்டும். தினந்தோறும் அதற்கு ஆயத்தமாக வேண்டும். அவர் சமீபித்திருக்கிறதாக அறிந்து நடக்க வேண்டும். உயிர்த்தெழுதல் அடையும்படி, பிரயாசப்பட்டு துன்பத்தை சகித்து ஜெபித்த பவுலைப்போல் நாமும் இருக்கவேண்டும். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குடையவன் பாக்கியவான்.

விண்மண்ணிலுள்ளோர் யாவரும்
மகா கர்த்தாவைப் போற்றுங்கள்
இயேசு இராஜன் தோன்றுவார்
இரட்சிப்பளிக்க வருவார்.

தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு

ஏப்ரல் 28

“தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு” 1.பேதுரு 1:5

தேவனுடைய ஜனங்கள் எல்லாரும் தேவன் தங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று எண்ணி தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறார்கள். இப்படி ஜெபிப்பது மட்டும் போதாது, வாக்குத்தத்தங்களைப் பற்றிப் பிடித்து, அவைகள் நிறைவேறும் என்று விசுவாசத்தோடு எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். விசுவாசத்தினால்தான் தேவ வல்லமை நம்மிடமிருந்துப் புறப்படும். விசுவாசத்தினால்தான் தேவ வாக்கைப்பிடித்து கிருபாசனத்துக்குச் சமீபம் சேருகிறோம். மரணத்துக்கும்கூட காக்கப்படுகிறோம்.

அவிசுவாசத்தால் நாம் தேவனைவிட்டு விலகி அலைந்து திரிந்து, பாவத்துக்கும் புத்தியீனத்துக்கும் உள்ளாகிறோம். ஜீவனுள்ள தேவனை விட்;டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களுக்கு இல்லாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். உங்களில் ஒருவரும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பட்டுப் போகாதபடிக்கு அனுதினமும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். தேவன் நம்மை மிருகங்களைப்போல் அல்லாது புத்தியுள்ள சிருஷ்டிகளாகத்தான் பாதுகாப்பார். அவர் உன்னைச் சவாரி பண்ணுகிறவன் குதிரையைப் போலும் கோவேறு கழுதையைப்போலும் கடிவாளத்தில் இழுக்கிறதுபோல் இழுக்காமல், அன்புள்ள பிள்ளைகளைப்போல் நடத்தி, ஆசையுள்ள சிருஷ்டிகளைப்போல் காப்பார். அவர் வல்லமை உங்களுக்கு அவசியம் வேண்டும். அவர் வல்லமையை நம் பிள்ளைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். விசுவாசிகளும் விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் ஜெபிக்கும் போதுதான் அவரோடு பிணைக்கப்பட்டிருக்க முடியும்.

தேவ கரம் என்னைக் காக்கும்
தீய்க்கும் தண்ணீருக்குக் தப்புவேன்
மரணம் என்மீது வரினும்
ஒருகாலும் பயப்படேன்.

என் கனம் எங்கே

ஏப்ரல் 18

“என் கனம் எங்கே” மல்கியா 1:6

கர்த்தர் தமது மக்கள் தம்மை மகிமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார். நாமும் இந்த முக்கியமான கடமையை மறந்திருக்கிறோம். மத்தேயுவைப்போல விசுவாசத்திலும் கிரியைகளிலும், பேதுருவைப்போல உண்மையிலும், உற்சாகத்திலும், யோவானைப்போல மிகுந்த அன்பிலும், பவுலைப்போல இரத்த சாட்சியிலும், உருக்க பாரத்திலும் அவரைக் கனப்படுத்த வேண்டும்.

அன்பர்களே, தேவனைக் கனப்படுத்துவது உங்களுக்கு பிரியமா? அப்படியானால் அவர் செயலை நம்புங்கள். அவர் எப்போதும் உங்களைப் பார்க்கிறாரென்று நினைத்து நடவுங்கள். எல்லாரையும்விட அவர் ஜனத்தை அதிகம் நேசியுங்கள். அவர் ஊழியம் சிறந்து நடக்க எது வேண்டுமானாலும் செய்து உதவுங்கள். தேவனுக்காய் காரியங்களைச் செய்யாவிட்டால் அவர் உங்களைப் பார்த்து என் கனம் எங்கேயென்று நன்றாகக் கேட்கலாம். தேவன் விரும்புகிறபடி அவரைக் கனப்படுத்த வேண்டுமானால் அவரின் தன்மைகளை அறிய வேண்டும். இயேசுவின்மூலம் நல்ல ஐக்கியத்தை வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அவர் சமுகம் முன் நிற்கிறதாக எண்ணவேண்டும். அவர் அதிகாரத்துக்குக் கீழ் அடங்க வேண்டும். அவரின் நேசத்தின் ஆழத்தை ருசித்து, அவரின் சித்தம் செய்ய வேண்டும். அவர் விரும்புகிறதைப் பார்த்து அதன் மேல் நோக்கமாயிருக்க வேண்டும். நீங்கள் அவரைக் கனப்படுத்தினால், உங்களுக்கு நல்ல சமாதானம் தந்து வேண்டிய யாவையும் கொடுத்து, எந்தத் துன்ப வேளையிலும், சகாயத்தையும் தந்து, அன்பாய் உங்களை அடிக்கடி சந்தித்து, எந்தச் சத்துருவையும் கடைசியிலே வெற்றி சிறக்க சத்துவத்தையும், கொடுத்து உங்களைக் கனப்படுத்துவார்.

தேவன் எனக்குப் பிதாவா?
நான் அவரின் பிள்ளையா?
அவரைக் கனப்படுத்தி
அவர் சித்தம் நடப்பேன்.

ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

ஏப்ரல் 25

“ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” தீத்து 2:13

கிறிஸ்தவன் எதிர்பார்க்க வேண்டியவன். அவனுக்கு வேண்டிய நல்ல காரியங்கள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கிருக்கும் வாக்குத்தத்தங்கள் வெளிப்படப்போகிற மகிமையைப் பற்றியது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வரப்போகும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் வந்தார். ஊழியம் செய்தார். துன்பப்பட்டார். பிராயச்சித்தம் செய்தார். திருப்பி போகும்போது நான் மகிமையாய் மறுபடியும் வருவேனென்று வாக்குக் கொடுத்தார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குப் போய் இப்போது நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்மை ஆசீர்வதிக்க சீக்கிரம் வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் ஆறுதல் அடைந்து புத்திரசுவிகாரத்தை அடைவார்கள். நாமும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆட்டவரோடு என்றென்றுமாய் இருப்போம்.

இது நம்முடை நம்பிக்கை, இந்த நம்பிக்கையை எதிர்ப்பார்த்துதான் நாம் வாழ வேண்டும். மரணம் என்று எங்கும் சொல்லவில்லை. மரணத்தையல்ல, இயேசுவின் வருகையே எதிர்நோக்கி ஜீவிக்க வேண்டும். பக்தனாகிய ஏனோக்கு இப்படித்தான் ஜீவித்தான். அவன் தேவனோடு சஞ்சரித்து அவருக்குப் பிரியமாய் நடந்தபடியால் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டான். அப்போஸ்தலர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் இப்படித்தான் வாழ்ந்ததால் நம்மைப்போல் இவ்வுலக காரியங்களால் அத்தனை வருத்தம் அடையரிருந்தார்கள்.

நம்பிக்கையால் ஏவப்பட்டு
கர்த்தரை எதிர்ப்பார்ப்பேன்
மகிமையோடு வருவார்
என்னையும் தம்மிடம் சேர்ப்பார்.

உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது

ஏப்ரல் 09

“உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறது” 2.தெச. 1:3

இந்தப் பாக்கியம் தெசலோனிக்கேய சபையாருக்குக் கிடைத்த சிலாக்கியம். அவர்களின் விசுவாசம் அதிக அதிகமாய் பெருகிற்று. விதை செடியாகி செடி விருட்சமாயிற்று. குழந்தை வாலிபனாகி, வாலிபன் கிறிஸ்துவுக்குள் பெரியவனாவான். விசுவாசம் சத்தியத்தில் வேர் விடுகிறது. அது கன்மலைய உறுதியாய் பிடித்திக்கிறபடியால் என்ன புயல் அடித்தாலும் அறுந்துவிட முடியாது. அது உடன்படிக்கையின்மேலும், மாறாக தேவ சத்தியத்தின்மேலும் பலமாய் நிற்கிறது. முயற்சித்து அது வளருகிறது. சுவிசேஷம் செம்மையாய்ச் செய்வதனால் அது வளருகிறது. நமது விசுவாசம் வளருமேயானால் கிறிஸ்து நமக்கு அதிக அருமையானவராய் இருப்பார். அப்போது அவரைப்போலிருக்க அதிக வாஞ்சை கொள்ளுவோம். விசுவாசத்திற்கும் உணர்ச்சிக்கும் இருக்கிற வித்தியாசம் இன்னதென்று அறிவோம்.

கர்த்தர் வாக்கு தந்தார் என்று பிரசித்தப்படுத்தி நம்புவோம். பரிசுத்தவான்களின் மேலிருக்கிற வாஞ்சை பலப்பட்டு உறுதியாகும். தேவனுக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் நமக்கிருக்கும் வைராக்கியம் பெரியதாகும். தேவ வசனத்தின்மேல் அதிக வாஞ்சையும் ஆசையும் உண்டாகும். தேவ வசனத்தின்மேல் நமக்கிருக்கும் நம்பிக்கை இன்னும் உறுதியாகும். பரம சிந்தை நம்விசுவாசத்திற்குத்தக்கதாய் வளரும். விசுவாசம் வளர வேண்டியது மிக முக்கியம். உங்கள் விசுவாசம் வளருகிற விசுவாசமாய் இருக்கும்படி பாருங்கள்.

விசுவாசித்து நடப்பேன்
கர்த்தர்மேல் பாரம் வைப்பேன்
அவர் சொல்வதை நம்புவேன்
அதுவே போதுமென்றிருப்பேன்.

கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு

ஏப்ரல் 21

“கிறிஸ்து நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு” 1.பேதுரு 3:18

கிறிஸ்து செய்து முடித்த சகல கிரியைகளிலும் பிரயாசங்களிலும் அவர் சகித்த சகல பாடுகளிலும் அவர் கொண்ட நோக்கம் இதுதான். சுபாவத்தின்படி நாம் தேவனுக்கு தூரமானவர்கள்: அவருக்கு விரோதிகள். அவரைக்கண்டால் பயப்படுகிறவர்கள். ஆகவே நாம் பாக்கியத்துக்கும், சமாதானத்திற்கும் தூரமானவர்கள். தேவனோடிருக்கிறது, தேவனைப்போல் இருக்கிறது பாக்கியமாதென்று இயேசுவுக்குத் தெரியும். அவர் தம்முடைய மக்களை நேசித்தபடியால் இந்தப் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும்படியே விரும்புகிறார். அவரின் பிள்ளைகளுக்காக எதையும் செய்யவும், எதையும் சகிக்கவும் அவர் அதிகம் விரும்பினார். ஆதலால் அவர் மனதார நம்முடைய பாவங்களுக்காகப் பாடனுபவித்து, தம்மை பலியாகத் தந்து பாவங்களை நிவிர்த்தி செய்தார். மகிமையோடு நம்மைத் தேவனோடு சேர்க்கும்பபடிக்கு அவர் நோக்கம் கொண்டார்.

கிருபாசனத்தின்மேல்  வீற்றிருக்கும் பிதாவின் அருகே நம்மைக் கொண்டு வருகிறார். இங்கே நாம் மன்னிப்பைப் பெற்று, சமாதானம் அடைந்து, தேவன்பை ருசிக்கிறோம். கிருபாசனத்தண்டையில் நமக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக்கொள்கிறோம். பெரிய வாக்குத்தத்தங்கள் அங்கே நிறைவேறுகின்றன. இங்கே நம்மை ஏற்றுக்கெர்டு தயவு காட்டினார் என்பது அங்கே விளங்கும். பரிபூரணராயும், பாக்கியவான்களாயும் அங்கே இருப்போம். அவரும் மகிழ்ச்சி அடைவார். நாமும் திருப்தியடைவோம். நாம் தேவனிடம் சேருவது, அவர் மரணத்தால் உண்டான பலன். தேவனோடிருப்பது அவர் பட்டபாடுகளின் பிரதிபலன்.

நம்மை தேவனண்டை
இழுத்து சேர்க்கும்படி
பாடுபட்டு உத்தரித்து
இரத்தம் சிந்தி மரித்தார்.

Popular Posts

My Favorites

நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?

மார்ச் 08 "நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?." யோவான் 6:67 ஆண்டவர் இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, அவருடைய சீஷர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி போய்விட்டார்கள். அதேப் போல பலர் இந்நாளிலும் அவரை விட்டுப்போய்விட மனதுள்ளவர்களாயிருக்கிறார்கள். அநேகர்...