நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்

யூலை 09

“நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்.” எரேமி. 32:38

இது இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதாய் இருந்தாலும், மெய்யான இஸ்ரவேலரான விசுவாசிகளுக்கும் ஏற்றதுதான். ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட எவரைக்குறித்தும் இப்படி சொல்லலாம். அழுகையோடும் விண்ணப்பத்தோடும் தேவனிடம் திரும்புகிற எந்தப் பாவிக்கும் அவரின் கிருபையின் வார்த்தையை நம்புகிற ஒவ்வொருவருக்கும், எந்த ஓர் உண்மையான விசுவாசிக்கும் இந்த வாக்குத்தத்தத்தில் பங்குண்டு.

நான் அவர்கள் தேவனாய் இருப்பேன் என்பதின் ஆழ்ந்த சத்தியம் என்ன? அவர்கள் என் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து, என் வார்த்தையை அங்கிகரித்து, என் சிம்மாசனத்தண்டை பணிந்து, எனக்கு ஊழியம் செய்து, என் சித்தத்தை நிறைவேற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக என்னை உயர்த்தி, தங்களின் தேவனாக என்னை நம்பி, என்னை ஆராதித்து என்னை நேசிப்பார்கள் என்பதே இதன் கருத்து. நான் அவர்களின் தேவனாய் இருப்பேன் என்றால், அவர்களை நடத்த என் ஞானமும், அவர்களை ஆதரிக்க என் வல்லமையும், அவர்களுக்கு நிச்சம் உண்டாக்க என் அன்பும், அவர்களை இரட்சிக்க என் கிருபையும், அவர்களைச் சுத்திகரிக்க என் பரிசுத்தமும், அவர்களை ஆறுதல்படுத்த என் ஆவியும் கிடைக்கும் என்பதே சத்தியம்.

அவர்கள் தேவனாக நான் அவர்களோடு இருப்பேன். அவர்கள் பட்சத்தில் இருப்பேன். அவர்களுக்குத் தேவனாய் இருப்பேன். அவர்களை விட்டுவிலகவும் மாட்டேன். கைவிடவும் மாட்டேன். நான் வாக்களித்தபடியெல்லாம் அவர்களுக்குச் செய்வேன். என் உடன்படிக்கையில் சவதரித்து வைத்திருக்கிறதெல்லாம் அவர்களுக்குக் கொடுப்பேன். விசுவாசியே, இந்த வாக்குத்தத்தத்தில் தேவன் உனக்குக் காட்டும் மகா பெரிய இரக்கத்தைப் பார்.

இதுவே எனக்காதாரம்
என் கவலைகள் நீங்கும்
அவர் என் தேவனானால்
துக்கம் களிப்பாகுமே.

நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்

ஜீலை 28

“நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்” யோவான் 13:18

விசுவாசிகள் எல்லாரும் நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துக்கொள்ளப்படுகிறார்கள். தமது சுய சித்தத்தின்படி அவர்களைத் தெரிந்துகொண்டார். பிதாவினால் தமக்குக் கொடுக்கப்பட்டவர்களாகவே அவர்களைத் தெரிந்துகொள்கிறார். தமது ஜனங்களை, தமது மணவாட்டியாகவும் ஊழியர்களாகவும், சாட்சிகளாகவும் இருக்கத் தெரிந்துகொண்டார். அவர் இவர்களைத் தெரிந்துகொண்டதால்தான் இவர்கள் அவரைத் தெரிந்துக்கொண்டார்கள். அவர் தாம் தெரிந்துக் கொண்டவர்களை அறிவார். ஆகவே அவர்களுடைய மனம், விசுவாசம், நம்பிக்கை, அன்பு, பயம், துக்கம், குறைவு இவைகளையெல்லாம் அறிந்திருக்கிறார். தேவன் இவர்களைத் தெரிந்துக்கொண்டதால் ஆறுதல் அடைகிறார்கள். இவர்களை அங்கீரித்து மற்றவர்களினின்று இவர்களை வித்தியாசப்படுத்துகிறார்.

இப்படி இயேசு தம்முடைய ஜனங்கள் எல்லாரையும் அறிந்திருக்கிறபடியால் அவர் தேவனாய் இருக்க வேண்டும். தேவனைத் தவிர வேறு யாரும் எண்ணமுடியாத இக்கூட்டத்தாருடைய தொகை, பேர், இருப்பிடம், எண்ணம், மனநிலை எல்லாவற்றையும் திட்டமாய் அறிந்திருக்க முடியும். அன்பர்களே நம்முடைய பெருமையைத் தாழ்த்த, விசுவாசத்தை கனம்பண்ண, குறைகளை நிறைவாக்க நம்முடைய வழிகளை உறுதிப்பண்ண, நற்கிரியைகளுக்குப் பலன் அறிக்கத்தக்கதாக அவர் நம்மை அறிவார். இயேசு நான் எங்கிருந்தாலும், வீட்டிலும் வெளியிலும், தேவாலயத்திலும் எப்படி நடக்கிறேன் என்று அறிவார். தகப்பன் தன் பிள்ளையை அறிந்திருக்கிறதுப்போலவும், கணவன் தன் மனைவியை அறிந்திருக்கிறதுபோலவும், அவர் தாம் தெரிந்துகொண்டவர்களை அறிவார். இவ்விதமாய் என்னையும் அறிவார்.

தேவன் நம்மை மீட்டது
நித்திய சந்தோஷ கிருபையே
நேசத்தால் சேர்த்தார்
இலவசமாய் மீட்டார்.

பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்

யூலை 15

“பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” 1.கொரி. 5:8

இந்த இடத்தில் பஸ்கா பண்டிகையைக் குறித்தே பவுல் அப்போஸ்தலன் கூறுகிறான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதலாவது கொல்லப்பட்டு கதவின் நிலைகளில் இரத்தம் தெளிக்கப்பட்டபோது எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் அழிந்தார்கள். இஸ்ரவேலர் விடுதலை அடைந்தார்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி. அவருடைய இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டு நம்மேல் தெளிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சத்துருக்கள் அழிந்துப் போனார்கள். நமக்கு இரட்சிப்பு கிடைத்தது. இஸ்ரவேலர் பஸ்காவின் இரத்தம் சிந்தப்பட்ட ஆட்டுக்குட்டியைப் புசித்தார்கள். இரத்தம் சிந்தி நம்மை மீட்ட கிறிஸ்துவை நாம் உள்கொள்ளு வேண்டும். ஆகவே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.

அது நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டுப் பலியிடப்பட்ட கிறிஸ்துவை புசிக்கிற பண்டிகை. அவர் நம்மை மீட்கும் பொருளாக மாத்திரமல்ல பஸ்காவுமாய் இருக்கிறார். அவருடைய மகிமையைப் பற்றியும் அவர் நிறைவேற்றின கிரியைப்பற்றியும் அவர் முடித்த வெற்றியைப்பற்றியும் அவருக்குக் கிடைத்த நித்திய கனத்தைப்பற்றியும், விசுவாசமுள்ள சிந்தையால் நம்முடைய ஆத்துமா போஷிக்கப்படுகிறது. நம்முடைய கண்களை நித்தம் கிறிஸ்துவண்டைக்கு உயர்த்த வேண்டும். மனம் அவரையே தியானிக்க வேண்டும். இதயம் அவரையே உள்கொள்ள வேண்டும். அவர் ஜீவன் அளிக்கும் தேவன். என்னைப் புசிக்கிறவன் என்னால் பிழைப்பான் என்கிறார். நாம் ஆசரிக்க வேண்டிய பண்டிகையின் சாரம் கிறிஸ்துதான். ஆதலால் நாம் தினந்தோறும் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். அதிக ஜெபத்தோடும், ஸ்தோத்திரத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், தாழ்மையோடும், பயபக்தியோடும், உத்தம மனஸ்தாபத்தோடும், மெய்யான சந்தோஷத்தோடும் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். தேவன் கற்பித்திருக்கிறபடியால் நாம் அதை ஆதரிக்க வேண்டும். அதை ஆசரிப்பதால் இரட்சகர் மகிமைப்படுகிறபடியால் அதை ஆசரிக்க வேண்டும்.

இயேசுவே உள்கொண்டு
ஆனந்தம் கொள்வோமாக
ஜீவன் சுகம் பெலன்
எல்லாம் அவரால் வரும்.

நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்

யூலை 29

“நாம் இங்கே தேவ சந்நிதியில் சேரக் கடவோம்” 1.சாமு 14:36

நாம் சுபாவப்படி தேவனுக்குத் தூரமானவர்கள். கிருபையினால் மட்டுமே அவரோடு ஒப்புரவாகி அவரோடு கிட்டச் சேர்கிறோம். ஆயினும் நாம் அவருக்கு இன்னும் தூரமாய்தான் இருக்கிறோம். ஜெபம்பண்ணும்போது கிருபாசனத்தண்டையில் நாம் அவரைச் சந்திக்கிறோம். இதை நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் சில சமயத்தில் அவர் சமுகத்திதால் இருக்கிறோம். ஜெபமானது தேவனுக்குக் கிட்டி சேருதல் என்பதை நாம் மறுக்கக்கூடாது. அடிக்கடி ஜெபம்பண்ணினால் அடிக்கடி அவரிடம் கிட்டி சேருவோம். இதற்காகவே அவர் இருக்கிறாரென்று விசுவாசிக்க வேண்டும். பிராயச்சித்த பலியை ஏற்றுக்கொண்டு அவர் வசனத்தை அதிலும் அவர் அருளின் வாக்குத்தத்தங்களை நம்ப வேண்டும். நமக்கு கேட்கிற விருப்பமும் வேண்டும். நமக்கு உள்ளபடி தேவையானவற்றையும் வாக்களிக்கிறார் அல்லவா?

நியாயமாய் கேட்கும்போது நிச்சயமாய் கிடைக்குமென்று கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தையே தஞ்சமென்று பற்றிப் பிடிக்க வேண்டும். கேட்டது கிடைக்கும்வரை தொடர்ந்து கேட்கவேண்டும். அவர் சந்நிதியில் பிள்ளையைப்போலவும், பாவியைப்போல் பணிவோடும், அவரை அண்டினவர்கள்போல அடிக்கடி போக வேண்டும். சுத்தமான சாட்சியோடும், கோபமின்றியும், சந்தேகமின்றியும், இருதயத்தில் அக்கிரமத்தை பேணி வைக்காமல் போக வேண்டும். தனிமையிலும், குடும்பத்திலும், தேவாலயத்திலும், தெருவில் நடக்கும்போதும் அவரைக்கிட்டி சேருவாமாக. அவர் நம்மை அழைக்கிறார். புத்தி சொல்ல வா என்று அழைக்கிறார். அவர் சமூகத்தில் போவோமாக. அவர் அழைக்கும்போது போகாவிட்டால் அது பாவமாகும். நாமும் வருத்தப்படுவோம்.

கர்த்தாவே இரங்குவேன்,
கடைக் கண்ணால் பாருமேன்
பாவப் பேயைத் தொலைத்திடும்
உம்மைச் சேரச் செய்திடும்.

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்

யூலை 08

“அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

ஏதோ ஓரு துக்கமான காரியம் நடந்துவிட்டதாக இந்த வசனம் சொல்கிறது. கர்த்தர் தமது ஜனங்களைவிட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். கர்த்தர் கோபங்கொண்டார். ஆனால் நம்மைப்புறக்கணிக்கவில்லை. அப்படி நமதுமேல் கோபமாய் இருக்கமாட்டார் என்று வாக்குப்பண்ணியுள்ளார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார். நாம் திருந்தவேண்டும் என்பதற்காகவே அவர் கோபிக்கிறார். பேதுருவின் மனதை நோகப்பண்ணி அழுகையோடும் விண்ணப்பத்தோடும் அவனைத் திரும்பினதுபோல நம்மையும் திரும்ப நோக்கிப் பார்ப்பார். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது, சமாதானத்தோடே போ என்று மரியாளுக்குச் சொன்னதுபோல் நமக்கும் சொல்லுவார்.

நம்முடைய பயங்களை ஓட்டி நம்மைத் தம்முடைய மடியில் சேர்த்து தமது அன்பை நம்மேல் பொழிவார். அவர் வாக்குபண்ணினவைகளை மாற்றாது அப்படியே செய்வார் எப்பொழுதும் அப்படிச் செய்வார். அவர் இருதயம் அன்பினால் நிறைந்திருக்கிறபடியால் அப்படிச் செய்வார் என்பது நிச்சயம். அவர் இரக்கத்தில் பரியப்படுகிறவர் என்பதால் அப்படிச் செய்வார் என்று சொல்லலாம். நம்முடைய புத்தியீனத்தைக் குறித்து நாம் புலம்பினாலும், அவர் மன்னிப்பைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. பட்சமும் கிருபையும் நிறைந்த தேவனுக்கு மனஸ்தாபம் உண்டாக்கினோம் என்று அழுதாலும் மனம் கலங்க வேண்டியதில்லை. நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவர் திரும்ப இரங்குவார் என்று எதிர்பார்த்திருப்போமாக இஸ்ரவேல் வீட்டாருக்குத் தம்மை மறைத்துக்கொள்ளுகிற கர்த்தருக்குக் காத்திருந்து அவர் வருகைக்கு ஆயத்தமாய் இருப்போமாக.

இயேசுவே எங்கள் துன்பங்கண்டு
உருக்கமாய் இரங்குமேன்
எங்கள்மேல் கிருபைகூர்ந்து
சகல பாவம் நீக்குமேன்.

இராக்காலம் வருகிறது

யூலை 02

“இராக்காலம் வருகிறது.” யோவான் 9:4

இரவு என்பதில் பயமும், திகிலும் உண்டு. இராக்காலம் மரணத்தின் அறிகுறி. மரணத்திற்குப் பிறகு இந்த உலகில் நன்மை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடையாது. ஆகவே, நிகழ்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். மரணம் வரும்போது நம்முடைய எல்லா வேலைகளும் முடிந்து விடும். முடியாவிட்டால் அரைகுறையாய் அதை விட்டுப்போக வேண்டும். ஆதலால் காலம் இருக்கும்போதே அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மரணம் வரும்போது நாம் சிநேகிதரை விட்டுப் போக வேண்டும். ஆகவே உயிருள்ளபோதே அவர்கள் நட்பைக் காத்துக்கொள்வோமாக. ஒரு நாள் மரணம் வரும்போது எல்லாரையும்விட்டு இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்போம். நம்முடைய ஆத்துமா அமைதியாய் இளைப்பாறும். அது ஆண்டவர் சமுகத்தில் தங்கி அங்கே இளைப்பாறி திருப்தி அடையும்.

இராக்காலம் வருகிறது. அது தூரத்தில் இல்லை. சிலருக்கு அது வெகு அருகில் இருக்கலாம். திடீர் என்றும் வரலாம். ஆகவே நாம் ஆயத்தமாய் இருக்க எச்சரிக்கப்படுகிறோம். இயேசுவை விசுவாசித்தவர்களாக காலத்தை ஆதாயப்படுத்தி, நாள் முழுவதும் வேலை செய்து, இரவுக்கு ஆயத்தப்பட்டவர்களாய் இருப்போமாக. நம்முடைய வேலை முடிந்தது. தேகம் இளைத்தது. பரம பாக்கியத்தின் பேரில் ஆசை மிகுந்தது. எப்போது பேரின்ப வீட்டுக்குப் போகலாம் என்று சந்தோஷமாய் எதிர்பார்க்கிறவர்களைப்போல இருக்கக்கடவோம்.

தேவனிடம் கிட்டி சேர்ந்து
அவரைப்போல் இருப்பது
எப்போ கிடைக்கும், அப்போ
பாவம் முற்றிலும் ஒழியும்.

Popular Posts

My Favorites

அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

டிசம்பர் 29 "அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" மத்தேயு 15:8 இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய...