தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 3

உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்

ஏப்ரல் 23

“உண்மையுள்ள இருதயத்தோடு சேரக்கடவோம்” எபி. 10:22

அவிசுவாசத்தினால்தான் நாம் தேவனுக்குத் தூரமாய் இருக்கிறோம். அப்போது ஆவியில் குளிர்ந்துப்போய் ஆறுதலற்றவர்களாகிறோம். தேவன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறார். அவர் இரக்க சிம்மாசத்தில் வீற்றிருக்குpறார். தன்னைப் பலியாய் கொடுத்ததினால் பாவம் பகைக்கப்பட்டுப் போயிற்று. திரைச்சீலையே இரட்சகர் கிழித்துப் போட்டார். அவரிடம் சேர வழி தாராளமாய் திறந்திருக்கிறது. நம்முடைய பிரதான ஆசாரியன் இரத்தத்தோடு அங்கே நிற்கிறார். தூபவர்க்கம் பொற்கலசத்தில் எரிந்துக் கொண்டிருக்கிறது. தேவனுடைய மனது நம்முடைய காரியங்களில் உத்தமமாய் இருக்கிறது.

தேவன் தம் குமாரனைக் கொடுத்த அன்பு வெறும் அன்பல்ல. இரட்சகரும் நம்முடைய விஷயத்தில் உண்மையான அன்பு வைத்திருக்கிறார். இல்லையென்றால் நம்முடைய பாவங்களுக்காக மரித்திருக்கவும்மாட்டார். நமக்காக பரிந்து பேச மேட்சத்திற்கு போயிருக்கவும்மாட்டார். நாம் தேவனுக்கு உத்தம பிள்ளைகளாய் நம்பிக்கையோடே அவரிடம் சேருவோமாக. அவரிடம் மனம் திறந்து பேச மனிதன் ஆசைகளையும், விருப்பங்களையும் தாராளமாய் சொல்லலாம். பயந்த வேலைக்கானைப்போல தூர நில்லாமல், தகப்பனிடத்துக்கு ஓடி அவர் மடியில் தலையை வைக்கிற குழந்தையைப்போல் நெருங்கி சேருவோமாக. கோபாமுள்ள தேவனுக்கு முன்பாக நடுங்குகிறதுபோல் தூரத்தில் நில்லாமல் அவரை உறுதியாய் நம்புகிறவர்களைப்போல அவர் அருவே போவோமாக. அடிமையைப் போல் அல்ல, பிள்ளைகளுக்குரிய அமர்ந்த நம்பிக்கையினால் அவரை மகிமைப்படுத்துவோம்.

இயேசுவின் இரத்தம் நம்பி
தேவனிடம் சேருவேன்
இரக்க ஆசனத்தை நோக்கி
தைரியமாய் ஜெபிப்பேன்.

நீதிபரன்

நவம்பர் 13

“நீதிபரன்” அப். 7:52

நமதாண்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமது ஜனத்திற்குப் பிணையாளியாக, அவர்கள் சகிக்க வேண்டியதைத் தாமே சகித்தார். நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி மேன்மைப்படுத்தினார். தமது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை முற்றும் பரிபூரண பரிசுத்தராக்கினார். அவர் நீதிபரர்.

தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றினார். தமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தக்கப்படித் தமது தன்மைகளைக் காட்டி வருகிறார். முறைப்படி தம்முடைய சத்துருக்களைத் தண்டித்துத் தம்மை நம்புகிற எல்லாரையும் இரட்சிக்கிறார். அவர் தம் வார்த்தையில் என்றும் மாறாதவர். அவருடைய நடத்தையில் யாதொரு குறையும் காணப்படவில்லை. தம்மிடம் அண்டிவரும் எப்பாவியையும் அவர் தள்ளிவிடார். தமது மந்தையில் வந்து சேருகிற ஆடுகளை அன்பாகக் கண்காணிப்பார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவி கொடுப்பார். தான் னஒரு பாவியென்று அவர் பாதத்தைக் தேடுகிற எவருக்கும் அவர் இரட்சிப்பைத் தருகிறார். தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீரைக்கூட அவர் மறந்துவிடாமல், அதற்குகந்த பதிலளிப்பார். அக்கிரமக்காரரையும் அகந்தையுள்ளோரையும் அழித்து, தமது பரிசுத்தவான்களுக்கு என்றும் நித்திய பாக்கியத்தைக் கொடுத்து நீதிபரராகவே விளங்குகிறார்.

நீதிபரர், என் ஆண்டவர்
தம் நீதியால் என்னை நித்தம்
தாங்குவார், அருள்தனை அளித்து
ஆனந்தம் தருவார் பரத்தில்.

கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்

ஜனவரி 09

“கல்வாரி (கபால ஸ்தலம்) என்று சொல்லப்பட்ட இடம்” லூக்கா 23:33

இன்று காலை கெத்செமனேக்குச் சொன்றோம். இந்த கல்வாரியைப் பார்த்துச் செல்வோம். கிறிஸ்து தேவகரத்திலிருந்து நேராய் கெத்செமனேக்கு வந்து துன்பங்களை ஏற்கத் தொடங்கினார். கல்வாரியில் பாவிகளால் பாடுபடுத்தப்பட்டார். அடிக்கக் கொண்டுபோகிற ஆட்டுக்குட்டியைப்போல கொண்டு செல்லப்பட்டார். அவர் களைத்து சோர்ந்து, பலவீனப்பட்டு பாரா சிலுவையைத் தோளில் சுமந்து, எருசலேம் வீதிகளில் நடந்து போகிறதைப் பாருங்கள். கொலைக்கள் மேட்டிற்கு ஏறிப்போனார் சிலுவை மரத்திலே தமது கைகளையும் கால்களையும் ஆணிகளால் அடிக்க ஒப்புக்கொடுத்தார். அவரின் எலும்புகள் எல்லாம் ஆணிகளால் பிக்கப்பட்டன. வலியால் தவித்து கதறி துடிதுடிக்கும் மேனியை பாருங்கள். அவர் உடல் முழுதும் காயங்கள், கண்கள் இருண்டு கன்னங்கள் குழி விழுந்திருக்கின்றன. தலையில் முள்முடி. சரீரம் இரத்தத்தால் நனைந்திருக்கிறது. பயங்கர மரண அவஸ்தைப்படும் அருன்நாதரின் முகத்தைப் பாருங்கள்.

“என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று சொல்லும் சத்தத்தைக் கேளுங்கள்.இயேசு பட்ட பாடுகளைக் காட்டிலும் வேறு பாடுகள் உண்டா? பாவமில்லாதவர் நமக்காக பாவமாக்கப்பட்டார். குற்றமற்றவர் நமக்காக குற்றவாளிப்போலானார். நீதிமான் அநீதிமான் போலானது ஏன்? மணவாட்டியை மணவாளன் மீட்டுக்கொள்ளவே நாம் மரிக்காதிருக்கும்படிக்கு, அவர் நமக்கு பதில் மரித்தார். என்ன ஒரு தேவ அன்பு! அனுதினமும் நாம் கல்வாரிக்கு சென்று ஆண்டவரின் பாடுகளைத் தியானிப்போமாக. அன்பினால் துன்பங்களுக்குள்ளான காட்சி இதுவே.

மரணம் வரும் போதும்
என்ஆவி பிரியும் போதும்
கல்வாரியை பார்ப்பேன்
சிலுவையைத் தியானிப்பேன்.

கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.

மே 23

“கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.” 2.தீமோ.2:19

தகப்பனுக்கு தன் பிள்ளை தெரியும். அன்பு கணவன் தன் ஆசை மனைவியை அறிவான். அப்படியே கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். தம் நேசமான பொருளாக¸ தம் குமாரன் இரத்தத்தினால் வாங்கப்பட்டவர்களாகவும்¸ பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும் அவர்களை அறிவார். பூமியிலே அவர்கள் பரதேசிகளும் அந்நியருமானவர்கள். ஆகவே அவர்களை அறிவார். தம்முடைய பிள்ளைகளை தேவன் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். உலகத்தார்¸ அவர்கள் தலைமேல் ஏறும்படி அனுமதித்தாலும்¸ தீய்க்கும் தண்ணீருக்கும் அவர்களை உள்ளாக்கினாலும் அவர்களை அறிவார்.

தம்மை யாரெல்லாம் நேசிக்கிறார்கள் என்றும்¸ இன்னும் அதிகம் நேசிக்க முடியவில்லையே என்று ஏங்குகிறவர்களையும் அவர் அறிவார். விசுவாசத்தால் போராடி¸ விசுவாசம் பெலவீனமாய் இருக்கிறதே என்று மனவேதனைப்படுகிறவர்களையும் அவர் அறிவார். பயமும்¸ திகிலும் அலைக்கழித்து கொந்தளித்தாலும்¸ தம்மை அவர்கள் நம்பியிருக்கிறார்களே என்று அவர் அறிவார். தம்முடைய வழிகளுக்குக் கீழ்ப்படிந்து கற்பனைகளை எப்போதும் கைக்கொண்டால் நலம் என்று பெருமூச்சு விடுகிறவர்கள் என்று அவர்களை அறிவார்.

அன்பர்களே¸ கர்த்தர் உங்களைத் தம்முடையவர்கள் என்று அறிந்து¸ தமது சொந்தப் பிள்ளைகளென்று நேசித்து¸ தாம் தெரிந்துக் கொண்ட மணவாட்டியாக உங்களுக்காக கவலைப்பட்டு¸ தம் மந்தையின் ஆடுகளாக உங்களை மேய்த்து¸ கண்ணின் கருவிழிப்போல் புடமிட்டு நல் ஆபரணங்களாக உங்களைப் பத்திரப்படுத்தி தம்முடைய கிரீடத்தின் இரத்தின கற்களாக உங்களைப் பூரணமாய் அறிந்திருக்கிறார்.

தேவனே உமது பக்தரெல்லாம்
உமக்கே எவ்வளவு அருமை
உமது நாமம் தரிசித்தோர்
பெற்றுக் கொள்வார் மகிமை.

அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்

செப்டம்பர் 03

“அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” ஏசாயா 63:9

கர்த்தருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இருக்கும் ஐக்கியம் நெருங்கினதும் மெய்யானதுமாயிருக்கிறது. பல நேரங்களில் தேவன் தமது ஜனத்தைவிட்டு விலகினதுப்போல் காணப்படுவார். இது அவருக்கும் வருத்தத்தை உண்டாக்குகிறது. அவர்கள் தண்டிக்கப்படும் போது அவரும் சேர்ந்து துன்பப்படுகிறார். தேவ ஜனங்கள் துன்பங்களைத் தனிமையாய் அனுபவிப்பதில்லை. தேவன் எப்போதும் அவர்களோடிருந்து தகப்பன் பிள்ளைகளோடு துன்பத்தைச் சகிப்பதுபோல் துன்பத்தைச் சகிக்கிறார். வேதமும் இயேசுவானவர் எல்லாருடைய நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டாரென்று சொல்கிறது. அவர்களுக்கு வருகிற துன்பங்கள் அநேகம். இந்த அநேக துன்பங்கள் இவர்களைக் கொடிய வருத்தத்திற்குள்ளாக்குகிறது. ஆனாலும் அவர்களுடைய எல்லா வருத்தங்களிலும் அவர் நெருக்கப்படுகிறார். அவருடைய சமுகத்து தூதர்கள் இவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

அன்பான விசுவாசியே! நீ உன் மனதில் உன் சரீரத்தில் நெருக்கப்படுகிறாயா? அதைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசுவானவர் அறிக்கை உன்னோடு அனுதாபப்படுகிறார். உது சோதனைகள், பயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் அவைகளைப் பிதாமுன் வைத்து நீ இரக்கம் பெறவும். தகுந்த வேளையில் உதவிக்காக கிருபையைக் கண்டடையவும், உனக்காகப் பரிந்து பேசுகிறார். அருமையான இரட்சகரே நீர் என் சோதனைகளிலும் துன்பங்களிலும் பங்கடைந்து அவைகள் எல்லாவற்றினின்றும் மகிமையாய் என்னை விடுவிப்பீர் என்கிற சிந்தை எப்பொழுதும் என்னைத் தேற்றும்படி செய்யும்.

நம்முடைய ஆசாரியர் நமக்கு இரங்கத்தக்கவர்
நம்மோடென்றும் அவர் பாடுபடுபவர்
காயத்தில் எண்ணெய் ஊற்றி
தேற்றி இரட்சிப்பார்.

நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?

ஒகஸ்ட் 09

“நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன?”  மத். 5: 47

மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு அதிகம் கிடைத்திருக்கிறது என்ன? சிறைச்சாலை, மருத்துவமனை, தர்மசாலை, வியாதியஸ்தர் அறை, நிர்பந்தமான வீடுகள் இவைகளைப் போய் பார்த்திருக்கிறீர்களா? குருடர், சப்பாணிகள், மனநிம்மதியற்றவர், தொழு நோயுள்ளவர் இவர்களைச் சந்தித்துள்ளீர்களா? பரிசுத்தவான்கள் சகித்தது என்ன? ஆட்டுத் தோலைப் போர்த்துக் கொண்டு, சிறைச்சாலையில் தேவனுக்காய்த் துன்பப்பட்டவர்கள் கொலைகளத்தில் உயிரைக் கொடுத்தார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தார்கள். அடிகளைகளை வாங்கிக் கொண்டும் ஜெபித்த இவர்களைப் பார். உன் வாழ்க்கையையும் பார். வேதத்தையும் பார். பரலோகத்தையும் பார். நரகத்தையும் பார். உனக்குக் கிடைத்த பாக்கியங்களை நினை. உனக்கு அதிகம் அதிகம் கிடைக்கவில்லையா? மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன?

உலகத்தானைவிட, அஞ்ஞானியைவிட, புறமதஸ்தனைவிட, அநேக பெயர் கிறிஸ்தவனைவிட எனக்கு நல்ல சட்டதிட்டங்கள் உண்டு என்கிறாய். உன் இதயத்தையும், பணத்தையும், நேரத்தையும் சகலத்தையும் அவருக்குக் கொடுத்தேன் என்கிறாய். ஆனால் மற்றவர்களைவிட நீ அதிகம் செய்தது என்ன? கிறிஸ்துவுக்காக கிறிஸ்தவ ஊழியத்துக்காக, சபைக்காக, ஏழைகளுக்காக, தேவ மகிமைக்காக, நீ செய்தது என்ன? மற்றவர்களைவிட உனக்கு அதிகம் தெரியுமே, அதிகம் பேசுகிறாயே? ஆகவே, மற்றவர்களைவிட உன்னிடத்தில் அதிகம் எதிர்ப்பார்ப்பது நியாயந்தானே மற்றவர்களைவிட அதிகம் செய்யப்பார். இல்லாவிட்டால் நீ சொல்வதை குறித்துச் சந்தேகம் கொள்ளுகிறது நியாயந்தானே.

நமது பெயருக்கேற்ற
நல் நடத்கை எங்கே?
மாறினோம் என்று காட்ட
நற்கனிகள் எங்கே?

நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ

செப்டம்பர் 02

“நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ” யோனா 4:4

யோனா தேவனோடு வாக்குவாதம்பண்ணினான். இப்படி செய்யாதவன் யார்? யோனாவைப்போல நாம் வெளியே முறுமுறுக்கவில்லையென்றாலும் அவனைப்போல எரிச்சலடைகிறோம். கர்த்தர் செய்ததே சரியென்று சொல்பவர்கள் ஒருசிலரே. அவர் செய்கிற செயல்களைக் குறித்து சந்தோஷப்படுகிறவர் இன்னும் வெகு சிலரே. பலர் தேவனுடைய செயலை அவர் தம் இஷ்டம்படி செய்கிறார் என்று கோபமடைகிறார்கள். அதைக் குறித்து முறுமுறுப்பவர்கள் அநேகர். அவர் செயலைக் குறித்து முறுமுறுத்து அவர் பட்சபாதமுள்ளவரென்றும், அன்பற்றவரென்றும் நினைக்கிறார்கள்.

அன்பர்களே, நாம் அடிக்கடி தேவன்மேல் கோபம் கொள்கிறோம். முறுமுறுப்பிலும், வெறுப்பினாலும், இதை அடிக்கடி வெளிப்படுத்திவிடுகிறோம். சிலர் அவரோடு பேசவும் மனதில்லாமல் ஜெபம்பண்ணாமலும் இருந்து விடுகிறார். சிலர் தாங்கள் பெற்றுக்கொண்டதை அறிக்கையிட மனமற்று அவரைத் துதிக்காமல் போய் விடுகிறார்கள். நாம் இப்படி எரிச்சலாய் இருப்பது நல்லதா?? அளவற்ற ஞானமுள்ளவராய், எப்போதும் நம்மை நேசித்து நமது பேரில் ஆசீர்வாதங்களைப் பொழிகிற பிதாவின்மேல் நாம் கோபமாயிருக்கலாமா? நம்முடைய அக்கிரமங்களை மன்னித்து, நம்முடைய குறைவுகளை நீக்கி, குமாரனோடு ஐக்கியப்படுத்தி, பரம நன்மைகளால் ஆசீர்வதித்து வழிநடத்திய தேவன்மேல் எரிச்சலடையலாமோ? அவர் கொடுப்பதிலும், அவர் செய்வதிலும் சந்தோஷப்படாமல் இருப்பது பாவமாகும். நீ முறுமுறுத்து மனமடிவாகி எரிச்சல் அடைகிறது நல்லதோ?

நான் கொடிய பாவிதான்
மன்னிப்பளித்து இரட்சியும்
பாவ இச்சைக்கு என்னைக் காரும்
இருதயத்தைச் சுத்தமாக்கும்.

ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு

யூன் 22

“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14

சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.

நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.

நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்

ஜனவரி 30

“நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்.” 1.யோவான் 5:19

இது எவ்வளவு பெரிய சிலாக்கியம். எவ்வளவு பெரிய ஆறுதல். நாம் தேவனால் உண்டானவர்கள். கிறிஸ்து இயேசுவின் வல்லமையினாலும் அவரின் இரத்தம் நம்மேல் தெளிக்கப்பட்டதினாலும், அவரின் சேவைக்குப் பிரதிஷ்டையாக்கப்பட்டிருக்கிறோம். நித்திய காலமாய் நாம் அவரை ஸ்தோத்தரிக்கு, பரிசுத்தமும் பிரயோஜனமுள்ளவர்களாய் அவரோடு ஜக்கியப்பட்டிருக்கிறோம். முன்பு அவருக்கு விரோதமாய் கலகஞ் சொய்தோ. இப்போதோ மனமார அவருக்கு ஊழியம் செய்கிறோம். முன்பு அவருக்கு விரோதமான சத்துருக்கள். இப்போதோ அவருக்குப் பிரியமான சிநேகிதர். முன்பு கோபாக்கினையின் புத்திரர். இப்போதோ அவர் நேசத்திற்குரிய பிள்ளைகள்.

அவருடைய வசனத்தை விசுவாசிப்பதினாலும் அவரோடு ஜக்கியப்பட்டிருப்பதினாலும், பாவஞ் செய்வது நமக்கு துக்கமாய் இருப்பதினாலும், அவர் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமாய் இருப்பதினாலும், வாக்கிலும், செய்கையிலும், நோக்கிலும், ஆசையிலும் உலகத்தாருக்கு வித்தியாசப்படுவதினாலும், நாம் தேவனால் உண்டானவர்களென்று அறியலாம். தேவனால்தான், நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். நாம்தான் அவரின் சொத்து, அவரின் பொக்கிஷம். அவரின் பங்கு. அவரின் மகிழ்ச்சி. என்ன பாக்கியம். நாம் கர்த்தருக்குச் சொந்தமானவர்கள். இது நமக்கு கிடைத்த கிருபை. இக்கிருபை இல்லாமல் ஒருபோதும் நாம் வாழ முடியாது.

தேவனே என்னோடு வாரும்
என் சமீபத்தில் தங்கும்
எது போனாலும் போகட்டும்
நீர் இருந்தால் போதுமே.

ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

ஏப்ரல் 25

“ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” தீத்து 2:13

கிறிஸ்தவன் எதிர்பார்க்க வேண்டியவன். அவனுக்கு வேண்டிய நல்ல காரியங்கள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கிருக்கும் வாக்குத்தத்தங்கள் வெளிப்படப்போகிற மகிமையைப் பற்றியது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வரப்போகும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் வந்தார். ஊழியம் செய்தார். துன்பப்பட்டார். பிராயச்சித்தம் செய்தார். திருப்பி போகும்போது நான் மகிமையாய் மறுபடியும் வருவேனென்று வாக்குக் கொடுத்தார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குப் போய் இப்போது நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்மை ஆசீர்வதிக்க சீக்கிரம் வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் ஆறுதல் அடைந்து புத்திரசுவிகாரத்தை அடைவார்கள். நாமும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆட்டவரோடு என்றென்றுமாய் இருப்போம்.

இது நம்முடை நம்பிக்கை, இந்த நம்பிக்கையை எதிர்ப்பார்த்துதான் நாம் வாழ வேண்டும். மரணம் என்று எங்கும் சொல்லவில்லை. மரணத்தையல்ல, இயேசுவின் வருகையே எதிர்நோக்கி ஜீவிக்க வேண்டும். பக்தனாகிய ஏனோக்கு இப்படித்தான் ஜீவித்தான். அவன் தேவனோடு சஞ்சரித்து அவருக்குப் பிரியமாய் நடந்தபடியால் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டான். அப்போஸ்தலர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் இப்படித்தான் வாழ்ந்ததால் நம்மைப்போல் இவ்வுலக காரியங்களால் அத்தனை வருத்தம் அடையரிருந்தார்கள்.

நம்பிக்கையால் ஏவப்பட்டு
கர்த்தரை எதிர்ப்பார்ப்பேன்
மகிமையோடு வருவார்
என்னையும் தம்மிடம் சேர்ப்பார்.

Popular Posts

My Favorites

ஏன் சஞ்சலப்படுகிறாய்

நவம்பர் 02 "ஏன் சஞ்சலப்படுகிறாய்" 1.சாமு. 1:8 அன்பும் பாசமும் நிறைந்தஒரு கணவன், தன் மனைவியைப் பார்த்து இக்கேள்வியைக் கேட்கிறான். நாம் நம்மிடம் இக்கேள்வியை ஆண்டவர்தாமே கேட்பதுபோல எடுத்துக்கொள்வோம். ஏன் சஞ்சகப்படுகிறாய்? பாவத்தினால் துன்பமடைந்து சஞ்சலப்படுகிறாயா?...