தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 5

நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்

யூன் 23

“நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.” நீதி. 11:28

இவர்கள் இயேசு கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கர்த்தர் தமது நீதியைக் கொடுக்கிறார். அவர்களில் அவர் தம்முடைய ஆவியை வைத்திருக்கிறார். கிறிஸ்துவினால் நீதிமான்களாய் தேவ சமுகத்தில் நிற்கிறார்கள். அவர்கள் மனிதர்முன் நேர்மையாய் நடந்து தேவ மகிமைக்காக கனி கொடுக்கிறவர்கள். மரத்தின் வேருக்கும் கிளைகளுக்கும் உள்ள உறவுப்போன்று அவர்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டு, ஐக்கியம் கொள்கின்றனர். அவரால் ஆதரிக்கப்பட்டு, அவருடைய நிறைவிலிருந்துத் தங்களுக்குத் தேவையானதப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஜீவன், அழகு, பெலன், செழிப்பு ஆகியவைகளுக்கு அவர்தான் ஊற்று. கிறிஸ்துவை விட்டுப் பிரிந்தால் அவர்கள் கனியற்று வாடிப் பட்டுப்போய்விடுவார்கள்.

அத்திமரச் சாறானது எப்படி கிளைகளுக்கு போகிறதோ அப்படியே அவர்களுக்கு வேண்டியதை அவர் கொடுக்கிறார். மேலும் தமது கிருபையாகிய பனியையும், ஆசீர்வாதமாகிய மழையையும், அவர்கள்மேல் பொழியப்பண்ணுகிறார். ஆகவே, இவர்கள் செழிப்பாகி கனி கொடுத்து வளர்கிறார்கள். அவர் அவர்களைத் துன்பத்தினால் நெருக்கினாலும் அதிக கனிகளைக் கொடுக்கும்படித்தான் அப்படி செய்கிறார். கோடைக்காற்று கிளைகளை ஒடித்து, மூடுபனி அவைகளை முறித்தாலும், அவர்களின் ஜீவனோ வேரில் இருக்கும். அது கிறிஸ்துவோடு தேவனில் மறைந்திருக்கிறது. அன்பர்களே! கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டிருப்பதனால் நாம் செழிப்புள்ளவர்களாகிறோம் என்பதை கவனியுங்கள். நமது மார்க்கம் மெய்மார்க்கம் என்பதற்கு இது அத்தாட்சி.

நீதியின் விருட்சங்களாய்
ஒங்கி வளருவோம்
விசுவாசம் அன்போடு
பரதீசில் கனிகொடுப்போம்.

அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

டிசம்பர் 29

“அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” மத்தேயு 15:8

இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய பக்தி வெறும் வேஷமே. இவர்களுடைய ஆராதனையில் ஜீவன் இல்லை. வாழ்க்கையில் உண்மை இல்லை. இவர்களுக்கு ஆண்டவர்மேல் ஆசை கிடையாது. உன்னதமான ஆவிக்குரிய வல்லமை அற்றவர்கள். வெளி வேஷம்போடும் இம்மக்கள் உயிரோடிருந்தாலும் ஆவிக்குள் மரித்தவர்களே. தங்களை விசுவாசிகள் என்று தாங்களே கூறிக்கொண்டாலும் இவர்கள் பாவிகளே. நீதிமான்கள் என்று அழைக்கப்பட்டாலும் நீதியற்றவர்களே. தேவனை ஆராதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும், இவர்களுடைய இருதயம் எப்படியோ, இவர்களும் அப்படியே தேவனுக்குத் தூரமாய் இருக்கிறார்கள். „மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்“ என்பதே வசனம்.

அன்பரே, இப்பொழுது உமது இருதயம் தேவனுக்குச் சமீபமாய் இருக்கிறதா? அவருக்கருகில் உங்கள் இருதயம் இருக்குமெனில், நீரும் அவர் அருகில் இருக்கிறீர். „அவர் எனக்கு இரங்குவார், காப்பாற்றுவார், நன்மைசெய்வார், விடுவிப்பார் என்று அவரையே நம்பியிருப்பீரானால், உமது இருதயம் அவருக்கு அருகிலேயே இருக்கிறது. மனிதருக்குமுன் வசனத்தின்படி நடந்து, ஆண்டவர் சொன்னபடியே செய்து, சற்றும் மாறாமல் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பீரானால், உமது இருதயம் அவருக்கு சமீபமாகவே இருக்கும். மாய்மாலத்தைத் தேவன் வெறுக்கிறார், நாமும் வெறுப்போமாக. அவருக்கருகிலேயே வாழ்ந்து, அவரோடே நடந்து, அவர்மேல் அன்பு வைத்து நடப்போமாக. வேஷமாகப் பெயருக்கென்று நாம் இவ்வாறு நடந்தால் பரிதாபத்திற்குரியவர்களாவோம்.

ஆண்டவர் அன்பைப்போல்
இனியது ஏதும் உண்டோ
இதைவிட்டு வேறெதையும்
உனதாவி விரும்பலாமோ, பாவி.

காலத்தை அறிந்தவர்களாய்

யூன் 28

“காலத்தை அறிந்தவர்களாய்…” ரோ. 13:11

நிகழ்காலத்தை நாம் அறிவோம். இது நமக்குத் தெரிய வேண்டியது. ஆனால் எதிர்காலத்தைப்பற்றி நமக்கேதும் தெரியாது. இது சாத்தானுடைய வல்லமைக்கு ஏற்ற காலம். அவன் சுறுசுறுப்புள்ளவன். ஜாக்கிரதையுள்ளவன். பிடிவாதமுள்ளவன். இது உலகத்திற்கு மோசத்தைக் கொண்டு வரும் காலம். இந்த உலகம் உறங்கிக்கொண்டு இருக்கிறது. அல்லது மயங்கிக் கிடக்கிறது. அல்லது தேவ காரியத்துக்கு விரோதமாய் மூர்க்கங்கொண்டிருக்கிறது. ஆனால் தேவன் பொறுமையாய் இருக்கும் காலம்.

நீதி இப்போது காத்திருக்கிறது. கிருபை சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறது. இரக்கம் பட்சமாய் எச்சரிக்கிறது. இது அனுக்கிரக காலம். இதுவே இரட்சணிய நாள் என்று சொல்லியிருக்கிறது. இது சபை தன் கடமையை நிறைவேற்ற வேண்டிய காலம். பொழுதடையப் போகிறது. காலத்தை நழுவ விடக்கூடாது. இது முக்கியமான காலம். நன்மை செய்யவேண்டிய தருணங்கள் அநேகமுண்டு. விடா முயற்சியோடு உழைக்க நம்மைத் தைரியப்படுத்துகிற காரியங்கள் அநேகமுண்டு நம்மேல் விழுந்த பொறுப்போ பெரியது. ஆதலால் காலத்தை அறிவோமாக. வேத வசனத்தையும், பிற காரியங்களையும் கவனித்தால் காலத்தின் உண்மைநிலை தெரியவரும். ஆகவே, சோம்பலாய் இருக்கிறவர்களை எழுப்பி விடுகிறதினாலும், எல்லா சமயத்தையும் நம்மை செய்வதிலும் நாம் பயன்படுத்துவோமாக. நன்மை செய்யும் காலமும், நன்மை பெறும் காலமும் குறுகினதுதான் என்று மறக்க வேண்டாம். எந்தக் காலத்தையும், எந்தச் சமயத்தையும் நம்மாலாகமட்டும் உபயோகித்துச் செம்மையாய்ப் பின்பற்றுவோமாக. தற்காலத்தின் முடிவு பயங்கரமாய் இருக்கும். விழித்திருந்து உதார மனதோடு ஜாக்கிரதையாய் உழைப்பது நமது கடமை.

தேவா கிருபையளியுமே
நலத்தைப் போதியும்
நீர் கொடுத்ததைப் பயன்படுத்தி
உம்மை தொழச் செய்யும்.

நான் உங்கள் நாயகர்

செப்டம்பர் 27

“நான் உங்கள் நாயகர்” எரேமி. 3:14

மனித உறவிலேயே மிகவும் நெருக்கமானது கணவன், மனைவி உறவுதான். இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கர்த்தரும் தமது ஜனங்களுக்கு இவ்வுறவையே காட்டியிருக்கிறார். அவர் அவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணியிருக்கிறார். அவர்களும் அவருக்கு வாக்குக்கொடுத்திருக்கிறார்கள். அவர் தம்முடைய அன்பை அவர்கள்மேல் வைத்திருக்கிறார். அவர்களும் அவர்மேல் தங்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள். அவர்களை அவர் தேடித் தெரிந்துகொண்டார். அவர்களும் அவரைக் கண்டுபிடித்து விட்டார்கள். இரு சாராரும் ஒருவர்மீது ஒருவன் பிரியங்கொண்டுள்ளார்கள். அவர்களைத் தேடி அவர்கள் மத்தியில் வருகிறார். இரு சாராரும் அன்புடன் கலந்து உரையாடுகின்றனர். சேமித்து வைத்திருக்கிறார். அவருடைய வளத்தில் அவர்கள் வளம் பெறுகிறார்கள்.

தேவ பிள்ளையே! கர்த்தர் உன் நாயகர் என்பதை நீ உணருகிறாயா? அவருடைய ஐசுவரியமும், ஞானமும் அளவிலடங்காதவை என நீ அறிவாயா? அவருடைய மணவாட்டியான திருச்சபையாக நீ சஞ்சரிக்கிறாயா? அவருக்கு வாழ்க்கைப்பட்ட அவருடைய மனைவியைப்போல் நீ தேவனுக்காய் வாழ்கிறாயா? யாவற்றையும் அவருக்கு விட்டு விட்டு, உனக்குத் தேவையானதெல்லாம் அவர் தருவார் என்று நம்பிக்கையுடன் உன் நாயகராகிய அவருக்கு மன நிறைவுதரும்படி வாழ்கிறாயா? உன்னை நேசிக்கும் மற்றவர்கள் என்றும் உன்னை விட்டுப் பிரிவதே இல்லை. அவர் உன்னைக் காத்து நடத்துவார். அவரோடு ஐக்கியப்படு. எதுவும் உன்னை அவரைவிட்டுப் பிரிக்காதிருக்கட்டும்.

நான் உம்மோடு ஐக்கியப்பட்டும்
பிரகாசிக்க அருள் செய்யும்,
அப்போ நான் உம்முடையவன் என
வானமும் பூமியும் அறிந்திடும்.

மன்னிக்கிறவர்

மார்ச் 23

“மன்னிக்கிறவர்.” சங். 86:5

கர்த்தர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராகவும், கோபத்திற்கு ஆத்தரப்படாதவராகவும், மன்னிக்கிற தேவனாகவும் வெளிப்படுகிறார். இது உண்மையானபடியால் இதை எப்போதும் நாம் விசுவாசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் மன்னிப்பைத்தேடி எதிர்நோக்கிப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவரை நம்பி துக்கப்பட்டு அறிக்கையிடுகிற யாவருக்கும் கர்த்தர், அதை மன்னிக்க மனதுள்ளவரும், பின்வாங்காதவரும் ஆவார். ஆண்டவரின் நாமத்தில் அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கம் மன்னிப்பளிக்கும்போது தம்முடைய வசனத்துக்கு உண்மையுள்ளவராகவும், தமது குமாரனுடைய இரக்கத்தின்படி நியாயஞ்செய்கிறவராகவும் வெளிப்படுகிறார். அவன் மன்னிக்கிறவரானதால் நாம் பயப்படதேவையில்லை. மனம் கலங்க அவசியமில்லை. இந்த விஷயத்தில் கிறிஸ்துவைச் சந்தேகிப்பது பாவமாகிவிடும். ஆகையால் மகாபாவியையும் குறைவின்றி மன்னிக்க ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளார். பாவிகளாம் நம்மை மன்னித்து சேர்த்துக்கொள்ள, தம் அன்புள்ள ஒரே பேறான குமாரனைப் பிராயச்சித்த பலியாய் ஒப்புக்கொடுத்ததால் மன்னிக்க ஆயத்தமுள்ளவர் என்பதைக் காட்டினார்.

பிராயச்சித்தமின்றி மன்னிப்பு கிடையாது. அவர் செய்யக் கூடியதை எவ்விதமும் செய்வார். இயேசுவின் பிராயச் சித்தத்தின்படி தேவன் எவ்விதப் பாவிக்கும் பூரணமாய், சுலபமாக அனுதினமும் மன்னிப்பு அளிக்கு முடியாது. இந்த இரவிலும் இந்த நாளின் பாவங்களையும் முந்தின எல்லாப் பாவங்களையும் நமக்கு மன்னித்து, இந்த நேரத்திலேயே தர ஆயத்தமாய் இருக்கிறார். இது எவ்வளவு பெரிய சத்தியம்.

மரித்துயிர்த்த இயேசுவை
விசுவாசத்தால் நோக்குவோம்
அப்போது நீதிமான்களாகி
பரத்தில் சேர்ந்து களிகூறுவோம்.

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்

யூலை 13

“இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்.” எபேசியர் 2:4

பாவத்தினால் வரும் நம்முடைய நிர்பந்தம் பெரியது. ஆகிலும் தேவனுடைய இரக்கத்தைப்போல அவ்வளவு பெரியதல்ல. நமது துன்பங்கள் அநேகம். தேவ இரக்கம் அவைகளுக்கெல்லாம் மருந்து. இரக்கம் என்பது தேவனுக்கு இருக்கும் ஐசுவரியம். அதைத் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கிறார். அது துன்பப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் காட்டும் தயவு. அதைக் கொண்டுதான் நம்முடைய துன்பங்களை அவர் சரியாய் அறிந்து உணருகிறார். பழைய ஏற்பாட்டில் அவருடைய ஜனங்களைப்ற்றி, அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார். அவர் தமது அன்பின் நிமித்தம் அவர்களுடைய பரிதாபத்தின் நிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாள்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தாரென்று சொல்லப்பட்டிருக்கிறது.

தேவ இரக்கம் அளவற்றது. அது இரட்சகர்மூலமாய்ப் பாய்கிறது. நம்முடைய துக்கத்தை ஆற்றுகிறதினாலும் நம்முடைய குறைவுகளை நீக்குகிறதினாலும், நம்முடைய பாவங்களை மன்னிக்கிறதினாலும் நம்முடைய வருத்தங்களை அகற்றுகிறதினாலும் அலைந்து திரிகிற நம்மைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதினாலும் அது மகிமைப்படுகிறது. அன்பர்களே, இந்த நாளில் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர் உனக்க இரக்கம் வைத்திருக்கிறார். உனக்கு தேவையான இரக்கம் அவரிடத்தில் உண்டு. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்கிறார். அவர் வாக்கை நம்பு. அவர் சமுகத்தில் இரக்கத்திற்காக கெஞ்சு. தமது இரக்கத்தை உன்னிடத்தில் மகிமைப்படுத்த வேண்டுமென்று கேள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் ஐசுவரிய சம்பன்னர் என்பதே உனக்கு போதுமான தைரியம். ஆகவே இன்று அவர் வார்த்தையை நம்பி அவரைக் கனப்படுத்து.

பூமிக்கு வானம் எப்படி
உயர்ந்து இருக்கிறதோ,
அவர் இரக்கம் அப்படி
நமது பாவம் மூடாதோ?

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று

டிசம்பர் 13

என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று (ஓசி.14:4)

தேவன் துன்மார்க்கர்மீது கோபப்படுவார். பாவத்தைக் கண்டிப்பதற்காக அவர் கோபப்படுவார். தேவ கோபம் மிகவும் பயங்கரமானது, மிகவும் வேதனையைக் கொடுக்கக்கூடியது. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தில் தேவனுடைய கோபத்தைக் காண்கிறோம். எகிப்தியரின்மேல் வாதைகளை வரவிட்டபொழுது அவருடைய கோபம் காணப்பட்டது. நினிவேயின்மீது தேவகோபம் எழும்பியது. அவர் பாவத்தின்மீது கோபம் வைப்பார். சில நேரங்களில் தமது பிள்ளைகள்மீதும் அவர் தமது கோபத்தைக் காட்ட நேரிடுகிறது. ஒரு பிள்ளையின் தவறான நடத்தையினால் தகப்பன் கண்டித்துக் கோபப்படுகிறான். அதுபோல தேவனும் கோபப்படுகிறார். அவர் எவரை அதிகமாக நேசிக்கிறாரோ, அவாகளைத் திருத்துவதற்காகக் கோபம் காட்டுகிறார். அவர்கள் மீதுள்ள அன்பு அவரைக் கோபம் காட்டச் செய்கிறது.

தேவன் கோபிக்கிறபொழுது துன்பங்களை அனுமதிக்கிறார். அவருடைய கோபம் ஒரு வினாடிதான் இருக்கும். அவருடைய மக்களின் முரட்டாட்டத்தின் நேரத்தில் அவர்கள் பேரில் அவர் கோபங்கொள்கிறார். அவருடைய கோபத்திற்கு ஆளானவர்கள் மனந்திரும்பி துக்கப்பட்டு, அவருடைய காலில் விழுந்து, பாவத்தை அறிக்கையிட்டு, இரக்கத்திற்காகக் கெஞ்சும்பொழுது, அவர் தமது கோபத்தை விட்டுவிடுகிறார். இன்னும் உன்னை நேசிப்பேன் என்கிறார். திரும்பவும் உனக்கு வேண்டிய ஆசீர்வாதங்களைத் தருவார். நீ எத்தவறையும் செய்யாதவன்போல உன்னை நேசிப்பார். உன் பாவத்தை மன்னித்து, மறப்பார். நாம் நமது பாவத்தை நினைத்துக் கொண்டே இருக்கிறோம். அவர் நம்மை நேசிக்கிறார் என்ற நினைவோடு இந்த இரவு படுக்கைக்குச் செல்வது நமக்கு இன்பமானதாக இருக்கும்.

ஆண்டவர் கொள்ளும் கோபம்
இருப்பது ஒரே கணம்தான்
ஆண்டவர் இரக்கம் நிறைந்தவர்
இது நமக்குக் கிடைத்த பேறுதான்.

கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்

மார்ச் 03

“கீழ்ப்படிகிற பிள்ளையாய் இருங்கள்.” 1.பேதுரு 1:14

தேவன் என் தகப்பன், நான் அவரின் பிள்ளை என்று ஒவ்வொரு விசுவாசியும் அனுதினமும் பிரியத்தோடு உணரவேண்டும். அவர் ஒரு பிள்ளையைப்போல் அவனை நடத்துகிறார். என் பரமபிதா எனக்கு வேண்டியதெல்லாம் சுதந்தரித்து வைத்திருக்கிறார். பாவியான ஒருவன் பக்தனானபோது இயேசுவிடமிருந்து எல்லாம் கிடைக்கிறது. இயேசுவிலுள்ளதெல்லாம் அவனுக்காகதான். இயேசுவின் நிறைவிலிருந்து கிருபை மேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

நீயோ அவர் பிள்ளைப்போல் பிதாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவர் சித்தத்திற்கு அடிபணிய வேண்டும். கீழ்ப்படிவதுதான் உன் கடமை. உனக்கு வேண்டியதெல்லாம் உன் பிதா தருவார். அவர் சொல்படி செய்வதுதான் உன் வேலை. பின்னால் நடக்கப்போவதைப்பற்றி கவலைப்படாதே. எந்த விஷயத்திலும் பிதாவின் சித்தம் மட்டும் தெரிந்து கொண்டால் அதுவே அவர் திட்டப்படி செய்ய சுலபமாயிருக்கும். உனக்கு இருக்கும் nரிய கௌரவம் தேவன் உனக்கு தகப்பனாயிருப்பதுதான். உன்னை சொல்லமுடியா அன்பினால் ஒருவர் நேசிக்கிறார். அதுவே உனக்குப் பாக்கியம். அவர் பாதம் அமர்ந்து காத்திருக்கும்போது இன்னும் உன்னை நேசிக்கும் பிதா, சகல ஞானத்திலும் அறிவிலும் வல்லமையாலும் நிறைந்த பிதா உனக்கு இருக்கிறார் என்று நினை. இதுவே உனது மகிழ்ச்சி. பிள்ளையைப்போல உன் மனதை அவருக்கு ஒப்புவி. உன் கவலைகளையெல்லாம் அவர் மேல் போட்டுவிடு. அப்போது உனக்கு ஆசீர்வாதமும், ஆறுதலும் நிச்சயமாய் கிடைக்கும். உனக்கு வேண்டியதெல்லாம் தாராளமாய்ப் பெற்றுக்கொள்வாய்.

கர்த்தாவே எனக்கிரங்கி
எனக்குத் தயை காட்டி
குறைவையெல்லாம் நீக்கி
என்மேல் நேசம் வைத்திடும்.

இரவிலும் கீதம்பாட

செப்டம்பர் 01

“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11

தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.

பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.

இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.

சிலுவையைப்பற்றி வரும் இடறல்

யூன் 06

“சிலுவையைப்பற்றி வரும் இடறல்.” கலா. 5:11

சிலுவையில் அறையப்பட்ட ஒரு யூதனாலே இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் பவுல் அப்போஸ்தலனுடைய காலத்தில் பெரிய இடறலாய் இருந்தது. அதனால் அநேகர் இடறி விழுந்து கெட்டுப்போனார்கள். கிறிஸ்துவை விசுவாசிப்பதினால்மட்டும் நிறைவான இரட்சிப்பு உண்டு என்கிற உபதேசம் இன்னும் அநேகருக்கு இடறலாய்த்தான் இருக்கிறது. சுபாவ மனுஷன் தான் விசேஷத்தவன் என்றும் தான் ஏதாவது சாதிக்க வேண்டுமென்றும், தன்னை எல்லாரும் மேன்மையாக எண்ணவேண்டுமென்றும் ஆசைக்கொள்ளுகிறான். ஆனால் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பைக் குறித்த உபதேசத்திற்கு முன்பாக மனுஷன் ஒன்றுமில்லை.

என்றும் கிறிஸ்துதான் எல்லாவற்றிற்கும் எல்லாம் என்றும், சிலுவையில் அறையப்பட்டவர்தான் நாம் விசுவாசிக்க தக்க இலக்கு என்றும், இது நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்றும், இதுவே எல்லாம் ஆசீர்வாதமும் பாய்கிறதற்கு வாய்க்கால் என்றும் நமக்கு முன்னிருத்துகிறது. தேவ அன்பு நம்மை சிலுவையைப் பார்ம:மு கவனித்து, அதையே வாஞ்சிக்கும்படி செய்கிறது. இச்சிலுவை யோக்கியனையும், அயோக்கியனையும், ஞானியையும், வைத்தியக்காரனையும், ஏழையையும், ஐசுவரியவானையும் ஓரே வகையாய் இரட்சித்து ஆண்டவர் முடித்த கிரியைகளை எல்லாரும் ஒன்றுபோல் பற்றிப்பிடிக்கச் செய்து தேவ சமுகத்தில் எந்த மனிதனும் மேன்மைப் பாராட்ட கூடாதென்றே போதிக்கிறனது. சிலுவை மனிதனுடைய பெருமைக்கு பெரிய இடறல். மனுஷீகத்தின்படி சுவிசேஷம் ஒருவனையும் நிதானியாமல் இயேசுவைச் சுட்டிக்காட்டி, நெருக்கமான வாசல் வழியாய், இடுக்கமான பாதையில் நடத்தி, இரட்சிப்புக்குத் தன்னை வெறுத்தல், ஒழித்தல் அவசியமென்று போதித்து, ஒன்று கிறிஸ்துவை விசுவாசி, அல்லது கெட்டுப்போ என்கிறது. இதுவே சிலுவையின் இடறல்.

எவ்வசை நல் ஈவும்
இயேசுவாலே வரும்
அவர் சிந்தின இரத்தம்
நீங்கா தேவ வருத்தம்.

Popular Posts

My Favorites

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்!

இன்று உங்களுக்கு ஒரு விடுதலை தேவையாயிருக்கிறது! பாவத்தின் வல்லமையிலிருந்த உங்களுக்கு விடுதலை தேவை! ‘சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்…” (யோவான் 8:32) என்று இயேசு சொல்லுகிறார். ஆகவே கலங்காதீர்கள்! சத்தியம் உங்களை விடுதலையாக்கும். சத்தியத்தை அறிய அறியத்தான் நீங்கள்...