தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 5

சர்வ வல்லவருடைய சிட்சை

அக்டோபர் 17

“சர்வ வல்லவருடைய சிட்சை” யோபு 5:17

தேவனுடைய பிள்ளை எவரானாலும் அவருக்குத் தேவனுடைய சிட்சை உண்டு. அவர் சர்வ வல்லவருடைய அன்பினால் சிட்சிக்கப்படுகிறார். தேவன் அதிக ஞானமாகவே எப்போதும் சிட்சிக்கிறார். தேவ கிருபை நமக்கு அதிகமாக விளங்கவும், நல்வழிகளில் நாம் வளரவும், கனிதரும் வாழ்க்கையில் விளங்கவும் நம்மை அவர் சிட்சிக்கிறதுண்டு. நம்மைத் தாம் நேசிக்கிறதினால்தான் கர்த்தர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆதலால், நமக்குத் துன்பங்கள் நேரிடுகையில் நாம் அவைகளைத் தவறாக எண்ணலாகாது. அவைகள் யாவும் இரக்கங்கள். நமது நன்மைக்காகவே வருகிறவை. அவைகள் நமக்கு அவசியம் தேவை. கிருபையும் இரக்கமும், நிறைந்தவர் நமது பரமபிதா. அவர் நமக்கு என்றும் தீங்கு நினையார், அனுமதியார்.

நமக்குச் சோதனைகள் வரும்பொழுது எக்குற்றத்திற்காகத் தேவன் நம்மைத் திருத்த ஆசிக்கிறார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர் ஞானமாக நம்மைச் சிட்சிக்கிறார் என்பதை அறிக்கையிட்டு, அதை அவர் நமக்கு ஆசீர்வாதமாக மாற்ற வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும். கர்த்தர் விரும்பும் கோல் துளிர்த்துப் பூத்துக் கனிகொடுக்கும். இளக்காரம் பெற்ற அடிமையாக இருப்பதைவிட, சிட்சை பெற்ற பிள்ளையாயிருப்பது நலம். இக்காலத்தில் நமக்கு நேரிடும் சிட்சை இனிவரும் நன்மைகளுக்கும், மகிமைக்கும், கடமைகளுக்கும் நம்மை நடத்தும். தேவனுடைய சிட்சை எல்லாம் நலம்தான். நாம் அவற்றால் நன்மையையே பெறுகிறோம். இன்று சிட்சை நமக்குத் துன்பமாய் காணப்பட்டாலும், இனிவரும் காலங்களில் அதனால் நமக்கு நீதியும், சமாதானமும் கிடைக்கும்.

கர்த்தாவே, என் துன்பத்தை
இன்பமாக மாற்றியருளும்
உம் சிட்சை ஆசீர்வாதமே
அதென்னைத் தூய்மையாக்கும்.

அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்

யூன் 15

“அவர்கள் தேவனுடைய புத்திரராய் இருக்கிறார்கள்.” ரோமர் 8:14

தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்கள்தான், தேவனுடைய புத்திரர், தேவ பிள்ளைகளை ஆவியானவர் எந்த இலக்கை நோக்கி நடத்துகிறார்? தங்களுக்கு இரட்சகர் தேவையென்று அறியவும், கிறிஸ்து இயேசு தங்களுக்கு மிகவும் ஏற்றவர் என்று காணவும், அவர் நிறைவேற்றின கிரியை போதுமென்று பிடிக்கவும், அவரின் ஜீவனையும் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்ளவுமே அவர்களை நடத்துகிறார். சுருங்கக் கூறினால், தங்களை வெறுத்து, பாவத்தை விட்டு மனந்திரும்பி, உலகைவிட்டு பரிசுத்தத்தை வாஞ்சித்து கர்த்தருக்கு ஊழியம் செய்து, மகிமைக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவே அவர்களை நடத்துகிறார்.

இப்படி தேவாவியினால் நடத்தப்படுகிறவர்கள்தான் தேவபுத்திரர். இவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே முன் குறிக்கப்பட்டவர்கள். இப்போது இவர்கள் உன்னதமான தேவனுடைய பிள்ளைகளென்று அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் தேவனால் பிறந்தவர்கள். தேவனால் போதிக்கப்பட்டவர்கள். பிள்ளைகளாக நடத்தப்படுகிறவர்கள். தேவனுக்குச் சுதந்தரவாளிகள். கிறிஸ்துவின் கூட்டாளிகள். மேலான கனத்தில் பங்கு பெறவும், பரலோக ஆனந்தத்தை அனுபவிக்கவும் அழைக்கப்பட்டவர்கள்.

அன்பர்களே! நாம் ஆவியானவரால் நடத்தப்படுகிறவர்களா? அவர் இன்று நம்மை கிறிஸ்துவினிடம் நடத்தினாரா? நமக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தாரா? கிறிஸ்து நமக்கு அருமையானவரா? நாம் தேவபுத்திரரானால் பயமில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கும்.

குமாரனுடய ஆவி
அடையட்டும் பாவி
உம்மைவிட்டு விலகேன்
ஓருக்காலும் உம்மை விடேன்.

உக்கிரம் என்னிடத்தில் இல்லை

யூலை 24

“உக்கிரம் என்னிடத்தில் இல்லை” ஏசாயா 27:4

தேவனுடைய தன்மைகளைப்பற்றி நாம் சரியான ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறோம். அவரைக் கோபமுள்ளவராகவே அடிக்கடி பார்த்து பயப்படுகிறோம். தேவன் இயேசுவிலே நம்மைச் சந்தித்து நம்மை ஆசீர்வதித்து, நம்மிடத்தில் எரிச்சலாயில்லை என்று செல்லுகிறார். இது தான் நம்முடைய நம்பிக்கையின் ஆதாரம். தேவனிடத்தில் எரிச்சலில்லை. ஆனால் அன்பு உண்டு. ஆகவே நாம் நம்பிக்கை கொள்ளலாம். அவர் என் வேண்டுதலைத் தள்ளார். என் ஜெபத்தைக் கேட்காது என்னைத் தமது ஆசனத்தண்டையிலிருந்துத் துரத்தமாட்டார். இதுதான் ஆறுதலுக்கு ஊற்று. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால் மனிதனுடைய கோபம் விருதா. பாதாளத்தின் எரிச்சலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.

இது நமது பயத்திற்கும், சந்தேகத்திற்கும் நல்ல மாற்று மருந்து. தேவனிடத்தில் எரிச்சல் இல்லாவிட்டால், சாவைப்பற்றிய பயம் இருக்காது. மாறாக தேவன் என்னைத் தள்ளிவிடுவார் என்ற பயம் இருக்காது. நியாயத்தீர்ப்பை குறித்த பயம் இருக்காது. இதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தி துதிக்க வேண்டும். தேவனிடத்தில் உக்கிரம் இல்லாததால் நாம் அவர் சமீபமாய்ப் போகலாம். அவரை நம்பி, அவர் நன்மை செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே நாம் அவரைத் துதிக்க வேண்டும். தேவனிடம் உக்கிரம் இல்லாததால் நாம் யாருக்கும், எதற்குப் பயப்பட வேண்டும்? இது துன்பத்தில் அடைக்கலம். வனாந்தரத்தில் தண்ணீர் ஊற்று. அவாந்தரவெளியில்  திராட்சை தோட்டம். தேவனுடைய பட்டணத்தைச் சந்தோஷப்படுத்துகிற வாய்க்கால் சுரக்கும் நதி. தேவன் உக்கிரம் உள்ளவர் அல்ல. அவர் அன்புள்ளவர். அவர் இருள் அல்ல, ஒளி. அன்பானவர்களே. நீங்கள் உங்கள் தேவனைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் எச்சரிக்கையாய் இருங்கள். அது வசனத்துக்கு ஒத்திருக்கட்டும். புது உடன்படிக்கைக்கு இசைந்திருக்கட்டும்.

தேவன் அன்பானவர்
தன் சுதனையே தந்தார்
என்றும் நம்மை மறவார்
கடைசிவரை காப்பார்.

பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்

யூன் 30

“பலனைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள்.” 1.தீமோ. 6:2

சுவிசேஷம் தேவன் தரும் மகத்தான ஈவுகளில் ஒன்று. அதைப் பெற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருவருக்கும் அது பலன் தருகிறது. ஒருவனின் அறிவுக்குப் பலன் தந்து அதை வளர்க்கிறது. அவன் இருதயத்திற்குப் பலன் தந்து அதைச் சுத்தப்படுத்துகிறது. அவன் மனட்சாட்சிக்குப் பலன் தந்து அதைச் சமாதானப்படுத்துகிறது. அவன் குணத்திற்குப் பலன் தந்து அதைச் செவ்வைப்படுத்துகிறது. அவன் நடக்கைக்கு பலன் தந்து அவனை தீமைக்கு விலக்கி நன்மையை அளிக்கிறது. அவன் குடும்பத்திற்கும் பலன் கிடைக்கிறது. இது எஜமானைப் பட்சமுள்ளவனாகவும், எஜமாட்டியைப் புத்திசாலியாகவும், வேலைக்காரரைக் கவனமும் சுறுசுறுப்பும் உள்ளவர்களாகவும், பெற்றோரை நல்லவர்களாகவும், பிள்ளைகளைக் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருக்கப்பண்ணுகிறது.

உலக அரசுகளுக்கும் அதனால் பலன் கிடைக்கிறது. நல்ல சட்டங்களை ஏற்படுத்தி ஆளுகைகளைத் திடப்படுத்துகிறது. குடி மக்களை நல்லவர்களாக மாற்றுகிறது. இந்தப் பலனை நாமும் பெற்றிருக்கிறோமா? பெற்றுக்கொள்வதன் பொருள் என்ன? இது தெய்வீகமானதென்றும், அதன் உபதேசத்தை ஒத்துக்கொண்டு, அதன் நன்மைகளை ஏற்றுக்கொண்டு, அதன் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, அதன் நியமங்களை ஆதரித்து, அதன் சந்தோஷங்களைப் பரீட்சை செய்து, எந்தப் பயனுள்ள காரியங்களுக்கும் அதை உபயோகிப்பதே அதன் பொருள். சிலர் வசனத்தைக் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு செவிகொடுக்க மறுக்கிறார்கள். சிலர் செவி கொடுத்தும் அதை ருசிக்க மறுக்கிறார்கள். ஆனால் சிலரோ அதை ஏற்றுக்கொண்டு ருசித்து அதன் பலனை அடைகிறார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் குற்றமற்றவர்களாய் மாறி, பரிசுத்தராகி, பாக்கியவான்களாய் மாறுகிறார்கள். சகலமும் அவர்களுடைய நன்மைக்கு ஏதுவாகிறது. நீ சுவிசேஷத்தினால் இந்தப் பலனைப் பெற்றவனா?

இந்த நன்மை எனக்கீயும்
சுவிசேஷத்தின் மகிமையை
கண்டு களிக்கச் செய்யும்
என் உள்ளம் உம்மைப் போற்றும்.

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்

டிசம்பர் 26

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33

நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம் நமது விரும்பம்போல சொல்லுகிறதில்லை. நாம் வசனம் கூறுவதைப்போலத்தான் நடக்கவேண்டும். தேவனுடைய கிரியைகள் நம் விருப்பப்படி இருப்பவை அல்ல. நாம் சொல்லுவதுபோல நடக்கவேண்டுமென்று விரும்பினதால் நாம் புத்தியீனர். ஆண்டவர் உனது மனதின்படியா நடக்க வேண்டும் ? உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும்? இவ்வாறு நாம் எண்ணுவது தவறுதானே? இதனால் தேவனுக்கு மகிமை ஏற்படாது. இது அவருக்கு வேதனையைத்தான் தரும். உனது பாவமும் பெருகிப்போம். உன்னைவிட உன் தேவன் ஞானமும் அறிவும் அதிகம் உள்ளவர். அவருக்கு எதிராக நீ செயல்படக் கூடாது. உனக்கு வேண்டியது பணம், பொருள், சுகம், கண்ணீர், துன்பம், கவலை போன்றவை வேண்டாம். இது தன்னலம். அவ்வாறு நீ வாழ்வது தேவனுக்குப் பிரியமாகாது. தன்னலம் ஒரு கொடிய பாவம்.

அன்பானவரே, இவ்வாறான எண்ணத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு. இத்தகைய எண்ணங்கள் யாவருக்கும் வருபவைதான். ஆனால், அதற்கு எதிர்த்து நில். இது ஆபத்தானது. மோசத்தில்கொண்டுவிடும். எச்சரிக்கையுடனிரு.

ஆண்டவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயல்களில் மா வல்லவர். அவருடைய வழிகள் நீதியுள்ளவைகள், அவருடைய ஒழுங்கங்கள் ஞானமானவை. அவருடைய நோக்கங்கள் இரக்கம் நிறைந்தவை. எல்லாம் சரியாக முடியும்போது, எப்பக்கத்திலும் அவருடைய மகிமை பிரகாசத்தைக் காணலாம்.

தேவ சித்தமே நலமாம்,
அதன்கீழ் அமைந்திடுவேன்,
என் மனம் பொல்லாதது.
அதன்படி நடவேன்.

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06

“ஏன் சந்தேகப்பட்டாய்” மத். 14:31

இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய சந்தேகங்கள் எல்லாமே அவிசுவாசத்திலிருந்து உண்டானவைகள்தான். இது ஆண்டவரின் அன்பு, உத்தமம், நீதி இவைகளின் பேரில் சந்தேகிக்கச் செய்கிறது. அவரின் வசனத்தைவிட வேறு ஏதும் தெளிவாய் பேச முடியுமா? அவர் வார்த்தையில் நம்முடைய நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம், இவைகளைக் காட்டிலும், திடமான அஸ்திபாரம் வேறு ஏதாகிலும் உண்டா?

தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கவில்லையா? எந்தப் பரிசுத்தவானையும் அரவணைத்துப் பாதுகாத்து நடத்துவேன் என்று சொல்லவில்லையா? தம்முடைய மக்கள் செய்யும் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருளுகிறவிதத்தை அவருடைய வசனத்தின்மூலமும், வேதாகமத்தின் சரித்திரங்கள்மூலமும் நடைமுறையில் காட்டவில்லையா? அவர் எப்போதாவது நம்மை மோசம் போக்கினதுண்டா? அவர் பரியாசம்பண்ணப்படத்தக்கவரா? அவர் மாறாதவர் அல்லவா? தேவ பிள்ளையே, உன் சந்தேகத்திற்குச் சாக்கு சொல்லாதே. சந்தேகிப்பது பாவம் என்பதை அறிக்கையிட்டு எப்பொழுதும் முழு இருதயத்தோடும் அவரை நம்பக் கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கேள். சந்தேகம் ஆத்துமாவைப் பெலவீனப்படுத்தும், ஆவிக்கு ஆயாசம் உண்டாக்கும் சந்தேகம், கீழ்ப்படிதல் தடுத்துப்போடும். ஆகவே, அதை எதிர்த்து போராடு.

எப்பக்கம் எனக்குச்
சத்துருக்கள் மிகுதி
அபயம் என்ற தேவவாக்கு
இருப்பது என்றும் உறுதி.

தேவனுடைய வாக்குத்தத்தங்கள்

யூன் 05

“தேவனுடைய வாக்குத்தத்தங்கள்” 2.கொரி. 1:20

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள், அவர் தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன் என்று கொடுத்த உறுதி மொழிகள் ஆகும். அவர் சுயாதிபதியான தேவனானபடியால் அவரிடத்திலிருந்து வரும் வாக்குத்தத்தங்கள் அவருடைய அன்புக்கு அடையாளங்கள். அவைகள் வாக்குப்பண்ணினவரை ஒரு கட்டுக்குள்ளாக்குகிற திவ்ய தயவான செய்கைகள். அவர் பிதாவின் அன்பால் நமக்காக கவலை;படுகிறார். அவருடைய உண்மையும் உத்தமுமாகிய மாறாத அஸ்திபாரத்தின்மேல் அவைகள் நிற்கின்றன.

வாக்குத்தத்தங்கள் அவர் ஜனங்களி;ன் சொத்தாகவே இயேசுவில் பத்திரப்பட்டிருக்கின்றன. இம்மைக்கும் மறுமைக்கும் உரிய சகலமும் அவைகளுக்குள் அடங்கி நமக்கு ஏற்றவைகளாய் இருக்கின்றன. இது தேவனுடைய இருதயத்தை அவைகள் திறந்து, விசுவாசியினுடைய விசுவாசத்தை வளர்த்து, பாவியின் நம்பிக்கையை உயிர்ப்பிக்கின்றன. கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்தை அவை அதிகப்படுத்துகின்றன. ஏனென்றால் தீர்க்கதரிசியாக அவைகளை முன்னுரைக்கிறார். ஆசாரியராக அவைகளை உறுதிப்படுத்துகிறார். அரசனாக அவைகளை நிறைவேற்றுகிறார். அவைகளெல்லாம் விசுவாசத்திற்குச் சொந்தம். நம்முடைய நன்மைக்காகத்தான் அவைகள் கொடுக்கப்பட்டன. யோகோவாவின் கிருபையைத் துதிப்பதே அவைகளி; முடிவு. அவைகளெல்லாம் கிறிஸ்துவின் ஊற்றாகிய நிறைவுக்கு நம்மை நடத்தி எச்சரிப்பு, நன்றியறிதல், துதி ஆகியவற்றைப் பிறப்பிக்கும்.

தேவவாக்கு உறுதியானது
இதுவே என் நம்பிக்கை
அவர் சொன்னது எல்லாம்
நிறைவேற்றுவார் அன்றோ.

கர்த்தரிடத்தில் கிருபை உண்டு

யூன் 21

“கர்த்தரிடத்தில் கிருபை உண்டு.” சங். 130:7

கர்த்தர் நமக்குக் கிருபை அளிக்கிறார். அவரிடத்தில் கிருபை வாசம்பண்ணுகிறது. அவரின் குணத்தில் கிருபையும் ஒன்று. இரக்கம் காட்டுவதே அவருக்கு மகிழ்ச்சி. அவரிடத்தில் இருக்கும் கிருபை பூரணமானது. கிருபை காண்பிப்பதில் இப்போதிருப்பதுப்போல் இதற்கு முன்பு இருந்ததில்லை. இனி அவர் இருக்கப்போவதுமில்லை. தேவன் கிருபையில் அதிக உருக்கமானவர். அதிக இரக்கமுள்ளவர். பலவகைகளில் அவர் கிருபையை நம்மீது காட்டுகிறார். எல்லாருக்கும் தேவையானது அவரிடத்தில் உண்டு. பின்வாங்கிப்போனவர்களைச் சீர்ப்படுத்தும் கிருபை அவரிடத்தில் உண்டு. விசுவாசிகளைப் பாதுகாக்கிற கிருபை அவரிடத்தில் உண்டு.

பாவத்தை மன்னிக்கிற இரக்கம், சுவிசேஷ சிலாக்கியங்களை அனுபவிக்கச் செய்கிற சிலாக்கியம், ஜெபிக்கிற ஆத்துமாவுக்கு இரங்குகிற இரக்கம் இந்தக் கிருபையில்தான் உண்டு. அவர் கிருபை நிறைந்தவர் மட்டுமல்ல, அதைக் காட்ட, கொடுக்க அவர் பிரயாசப்படுகிறார். அந்தக் கிருபையை மேன்மைப்படுத்த மகிமைப்படுத்த, வேண்டுமென்பதே அவர் முழு நோக்கம். அவரில் கிருபையிருப்பதினால் நிர்பந்தர் தைரியமாய் அவரிடம் சேரலாம். அது பயப்படுகிறவர்களைத் தைரியப்படுத்துகிறது. தேவனிடமிருந்து நன்மையைப் பெற அவர்கள் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. இந்தக் கிருபை பின்வாங்கிக் கெட்டுப்போனவர்களைத் திரும்ப வரும்படி அழைக்கிறது. Nhதனையில் அகப்பட்டு கிறிஸ்தவனை எல்லா துன்பத்திலும் வருத்தத்திலும் மகிழ்ச்சியாக்குகிறது. அவரின் கிருபை தேவனைப்போலவே நித்தியானது, அளவற்றது என்பதை மறக்கக்கூடாது. கிருபை எப்பொழுதும் சிங்காசனத்தில்மேல் ஆட்சி செய்கிறது. எந்தப் பாவியும் இரக்கம் பெறலாம்.

கர்த்தரை நம்பு பாவி
அவர் இரக்கம் மாபெரிது
அவர் கிருபை நாடு
அவர் பெலன் பெரியது.

நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்

அக்டோபர் 27

“நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவர்” சங். 136:23

இயற்கையாகவே நாம் மிகவும் கீழான நிலையில் இருக்கிறோம்.

நம் நிலை தாழ்வானது. சுயாதீனமற்றவர்கள் நாம். பிசாசுக்குக் கீழ்ப்படிந்தவர்கள். அக்கிரமங்களுக்கும், பாவத்திற்கும் அடிமைகள். கலகக்காரரோடும், துரோகிகளோடும் ஐக்கியமானவர்கள். உலக இன்பத்திலும் அதன் ஆசாபாசங்களிலும் மூழ்கிப் போனவர்கள். எனவே நமக்கு எவ்விதப் பெருமையான நிலையும் இல்லை. மகிழ்ச்சி என்பது நமக்கில்லை. நாம் நிர்பாக்கியர். நம்மால் பயன் ஒன்றும் கிடையாது. நாம் என்ன பிரயாசப்பட்டாலும் பயன் மரணம்தான். நமது சுபாவமே மிகக்கேடானது. நமது உள்ளான நிலை பரிதாபத்துக்குரியது.

இப்படிப்பட்ட நிலைமையில்தான் கர்த்தர் நம்மை நினைத்தார். இத்தாழ்வான நிலையில் நாம் இருக்கும்பொழுதுதான் அவர் தமது குமாரனை அனுப்பினார். தூய ஆவியானவரை வாக்களித்தார். தமது நற்செய்தியை நமக்குத் தந்தருளி நம்மை நினைத்தார். தமது வல்லமையை நமக்குத் தந்தார். மோட்ச வீட்டை நமக்குத் திறந்தார். தமது சிம்மாசனத்தருகில் நிற்கும் பாக்கியத்தை நமக்கு அருளியிருக்கிறார். இவ்வாறாக கர்த்தர் நம்மை நினைத்தார். நாம் தாழ்வில் இருக்கும்பொழுதே தேவன் நம்மை நினைத்தார். அவருடைய இரக்கம் என்றுமுள்ளது. அது நம்மை அவரிடம் சேர்த்திருக்கிறது. கீழான நிலையிருந்த நம் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதியதும் அவருடைய கிருபையே. தமது வசனத்தை நமக்குத் தந்தது அவருடைய இரக்கமே. நமக்கு மகிழ்ச்சியைத் தந்து, நமக்குத் தம்முடைய ஆசீர்வாதங்களைத் தரவும் அவர் காத்திருப்பது அவருடைய தயவுதான். நமது தாழ்வில் அவர் நம்மை நினைத்தருளினார். அவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது.

எமது தாழ்நிலையில்
எம்மைக் கண்ணோக்கிய கர்த்தர்
தம் சித்தப்படியே தான்
எம்மை இரட்சித்தார், தயவாய்.

தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்

ஓகஸ்ட் 07

“தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்” சங்.147:11

இரக்கம் நிர்பந்தத்தைக் கண்டு மனதுருகுகிறது. நிர்பந்தத்தைத் தான் இரக்கம் கண்ணோக்குகிறது. தேவன் இயேசுவின்மூலம் தமது கிருபையை வெளிப்படுத்தினார். அவரில் அது உருக்கத்தோடும் நிறைவோடும் எப்போதும் வெளிப்படுகிறது. நாம் பாவம் செய்தவர்களாகையால் ஒரு நீதியும் நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த இரக்கத்தினால்தான் நமக்கு எல்லாமே கிடைக்கிறது. ஏனென்றால் இரக்கத்தில்தான் தேவன் பிரியப்படுகிறார். பாவம் முதலாவது தேடுவது இரக்கம்தான். மனிதர் தேவனிடம் தேடுவதும் இந்தக் கிருபைதான். அநேகர் விசுவாசத்தினால் கிடைக்கும் இந்த நிச்சயம் அற்றவர்கள். தேவன் என்னை நேசித்து எனக்காக தம்மைத்தந்தார் என்று அவர்கள் சொல்லமாட்டார்கள். தேவனைப் பிதா என்று அழைக்கமாட்டார்கள். வாக்குத்தத்தங்களை உரிமையாக்கி, உபதேசங்களை ஏற்றுக்கொண்டு கர்த்தர் என் தேவன் தேவன் என்று சொல்வது அவர்களுக்குத் துணிகரமாயிருக்கும்.

எப்படிப்பட்டவராயினும் தேவனிடம் வரும்போது அவர் இரக்கமுள்ளவர் என்று நம்பியே வருகிறார்கள். தேவ கிருபை அவர்களை உற்சாகப்படுத்தி, தைரியப்படுத்தி, சந்தோஷப்படுத்துகிறது. தேவன் கிறிஸ்துவின்மூலம் பாவிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறபடியால் தங்களுக்கும் காண்பிப்பார் என்று நம்புகிறார்கள். இரட்சிக்கப்படுவோம் என்ற நிச்சயம் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் இயேசு கிறிஸ்துவின் இரக்கம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆகவே, தமக்குப் பயந்து தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாய் இருக்கிறார் என்பது எவ்வளவு அருமையான ஒரு காரியம். அவர்கள் ஜெயிப்பது அவருக்குள் பிரியமானபடியால் அவர்களுக்கு உத்தரவு கொடுப்பார்.

தேவ பயமுள்ளவர்
கர்த்தருக் கருமையானவர்
அவர் கிருபை தேடுவோர்
அவர் அன்பைக் பெறுவோர்.

Popular Posts

My Favorites

சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஐந்து மண்டபங்கள கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான...