தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 4

நேசம் மரணத்தைப்போல் வலிது

மே 26

“நேசம் மரணத்தைப்போல் வலிது.” உன். 8:6

மரணம் யாவரையும் சந்திக்கக் கூடியது. ஞானமுள்ளவனும்¸ பலசாலியும்¸ தைரியஸ்தனும்¸ பரிசுத்தன் யாவருமே மரணத்தின் வாசலைத் தாண்டியர்வகள். அது எல்லாரையும் கொன்று உலகத்தைப் பெரிய கல்லறையாக்கி விட்டர். அன்பும் மரணத்தைப்போல் வலியதுதான். இது சகலத்தையும் வென்று விடுகிறது. இயேசுவின் நேசமோ அனைத்திலும் பெரியது. இது மரணத்தை ஜெயித்துப் போட்டது. இயேசு நமது பேரிலும் அப்படிப்பட்ட அன்பை வைத்திருக்கிறார். நான் உங்களை நேசிக்கிறேன் என்கிறார். ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கும் அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.

அவர் நமக்கு ஈந்த ஈவுகளாலும்¸ நம்மைச் சந்திக்க வந்தாலும்¸ நமக்காக அவர் விட்ட கண்ணீராலும்¸ அவர் செய்த கிரியையாலும் நமக்காக அவர் சகித்த துன்பங்களாலும்¸ அடைந்த மரணத்தினாலும்¸ நமக்காக அவர் கொண்ட வாஞ்சையினாலும்¸ எப்பொழுதும் நமக்காக அவர் செய்யும் வேண்டுதலினாலும் அவருடைய அன்பு எவ்வளவு வலமையுள்ளதென்று காண்பித்திருக்கிறார். அவருடைய அன்பு அனைத்து வருத்தங்களையும் மேற்கொண்டு¸ எல்லா விரோதங்களையும் ஜெயித்து¸ எல்லா சத்துருக்களையும் அழித்து¸ தெய்வீகத்துக்குரிய மகிமை நிறைந்த விளக்காகப் பிரகாசிக்கிறது. அவருடைய அன்பு அழிந்துப்போகாது. நம்முடைய அறிவுக்கு எட்டாதது. கிறிஸ்துவின் அன்பு இவ்வாறு ஆச்சரியமுடையதாயிருப்பினும்¸ வலிதும் மகிமையுள்ளதாயிருப்பினும்¸ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற நம்மீது மறவாமல் இருக்கிறதென்று நினைவோடு இந்த இராத்திரி படுக்கப்போவோமாக.

கர்த்தாவே ஏழை என்னையும்
எவ்வளவாய் நேசித்தீர்
என் இதயம்¸ அன்பு¸ ஜீவன்
யாவையும் அங்கீகரிப்பீர்.

இரவிலும் கீதம்பாட

செப்டம்பர் 01

“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11

தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.

பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.

இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.

நான் இரக்கம் பெற்றேன்

யூன் 19

“நான் இரக்கம் பெற்றேன்.” 1.தீமோ. 1:13

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும், அவர் தமது சித்தத்தின்படி பாவிகளுக்கு இரக்கம் காட்டுகிறவர் என்றும் நாம் அறிந்துக்கொள்கிறோம். இரக்கத்தைத் தேடாத பவுலுக்கே இரக்கம் கிடைக்கும்போது இதைத் தேடுகிற எவருக்கும் கிடைக்கும் என்பது எத்தனை நிச்சயம். கர்த்தர் காட்டினதும், பவுல் பெற்றுக்கொண்டதுமான இரக்கம், கொடுமையான எண்ணிக்கைக்கு அடங்காததான எல்லா பாவத்தையும் பூரணமாக மன்னித்துவிடுமென்று காட்டுகிறது.

மனசாட்சி எவ்வளவாய்க் கலக்கப்பட்டாலும் இந்த இரக்கம் பூரண சமாதானத்தைக் கொடுக்கிறது. அது உள்ளான பரிசுத்தத்தைத் தந்து நமது நடக்கையைச் சுத்தம்பண்ணுகிறது. அது கிறிஸ்துவைப் பற்றின அறிவைச் சகலத்துக்கும் மேலாக எண்ணி அதை நாடித்தேடவும் மற்ற எல்லாவற்றையும் குப்பையென்று உதறி தள்ளவும் செய்கிறது. அது வியாகுலத்தைச் சகித்து ஆத்துமாவைப் பெலன் பெற செய்கிறது. அது தேவ நேசத்துக்கும் ஆத்தும இரட்சிப்பைப்பற்றின கவலைக்கும் நம்மை நடத்தி இயேசுவின் சபையோடு பலவித பாசத்தால் நம்மை சேர்த்து கட்டுகிறது. அன்பரே, நீ இரக்கம் பெற்றவனா? அந்த இரக்கம் பவுலுக்குச் செய்ததை உனக்கும் செய்திருக்கிறதா? எங்கே இரக்கம் இருக்கிறதோ அங்கே கனிகள் இருக்கும். இத்தனை நம்மைகளுக்கும் காரணமாகிய இரக்கம் எவ்வளவு விலையேறப்பெற்றது.

இரக்கத்திற்கு அபாத்திரன்
நீரோ இரக்கமுள்ளவர்
எல்லாரிலும் நான் நிர்ப்பந்தன்
ஏழைக்கிரங்குவீர் தேவா.

மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?

அக்டோபர் 22

“மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்?” பிர. 6:12

உலகக்காரியங்களில் மூழ்கியிருப்போருக்கு இக்கேள்வி வருத்தத்தைக் கொடுக்கும். தேவனுடைய செயல்கள்தான், இதற்கும் பதில் அளிக்கக்கூடும். சில நேரங்களில் வாழ்வும், சில நேரங்களில் தாழ்வும் நலமானவை. சில நேரங்களில் உடல் நலம் நல்லது. சில நேரங்களில் உடல் நலக்குறைவும் நலமாகும். பூமியிலே சில நேரங்களில் காரியம் கைகூடாமையும், சில நேரங்களில் கை கூடுதலும் நலமாயிருக்கும். நாம் அதிகமாக விரும்பும் காரியங்தான் நமக்குத் தீங்கு ஆகக்கூடும். தேவன் நம்மைத் தடுத்து, நம்மைவிட்டு எடுத்து விடும் காரியம் நமக்கு நன்மையாக இராது.

நமக்கிருப்பது எதுவோ அதை நாம் சரியானபடி பயன்படுத்திக் கர்த்தருடைய மகிமைக்கு அதைப் பயன்படுத்துவோமானால், அது நன்மையாகவே இருக்கும். நமக்கு நாம் மகிமை தேடாமல், தேவனுக்கு மகிமையைத் தேடும்பொழுது அது நன்மையே ஆகும். அன்பானவர்களே நீங்கள் உங்களுக்கு இல்லாததொன்றைத் தேடி அதையே நாடுவீர்களானால் அது தீமையாகவே முடியும். தேவ சித்தத்திற்கு உங்களை ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தின்படி செயலாற்றுவதே நன்மையைத் தரும். தினமும் விசுவாசத்தினால் இயேசுவோடு ஜெபம்பண்ணி, தேவனோடு சஞ்சரித்து, பரலோகத்தில் உங்களுக்குச் செல்வங்களைச் சேமித்து வைத்து, நம்மைச் சூழ்ந்த யாவருக்கும் நன்மை செய்ய முயற்சிப்பதே மிகவும் நல்லது. இவ்வுலகில் நன்மையைத் தேடுவதில் கவனமாய் இருப்போம். இந்த உயிர் இருக்கும்பொழுதே தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதை நாடித்தேடுவோம்.

கர்த்தர் என் தந்தை, எனக்கு
நலமானதையே அவர் தருகிறார்
இவ்வுலகை விட்டுச் செல்கையில்
தருவார்மோட்ச பாக்கியம்.

வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்

யூன் 04

“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” அப். 20:35

கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகள் இவை. நித்தியத்தில் அவரை ஏவிவிட்டதும் பரத்தை விட்டு பூமிக்கு வரும்படி செய்ததும் இன்னும் அவரைத் தூண்டிவிடுகிறதும் இந்த வசனத்தில் உள்ள பொருள்தான். தமது சீஷர்களுக்கு இதை அடிக்கடி சொன்னதால் இது ஒரு பழமொழியாய் மாறி இருக்கலாம். நம்முடைய போதகத்துக்கும் எச்சரிப்புமாக இது எழுதி வைக்கப்பட்டுள்ளது. மனிதர் இதன்படி செய்ய முடியாமல் போனாலும் இது ஒரு சரியான சட்டவாக்காகும்.

வாங்குகிறது என்பது குறைவையும் திருப்திபடாத ஆசையையும் காட்டுகிறது. கொடுக்கிறதென்பது மனநிறைவையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. கொடுக்கிறதில் உதார குணமும் மற்றவர்களின் நன்மைக்கடுத்த கவலையும் வெளிப்படுகிறது. இது தெய்வீகத்தன்மை. அவர் மற்றவர்களுக்கு உதவி செய்யும்படியே நமக்குக் கொடுத்திருக்கிறார். மற்றவர்களுக்கு கொடுக்கத்தான் தேவன் நம்மை மீட்டார். நம்மை மகிமைப்படுத்துகிறார். தூய இன்பத்துக்க இது ஊற்று. நாம் அவர் சமூகம் போய், இவ்வார்த்தைகளால் தைரியப்பட்டு, மேலானவற்றை நம்பிக்கையோடு அடிக்கடி கேட்க ஏவப்படும்போது இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைத்துக்கொள்ளக்கடவோம். இதை மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தி அவரண்டைப் போக ஏவிவிடுவோமாக. இந்தச் சட்டவாக்கின்படி விவேகமாயும், கபடற்ற விதமாகவும் செய்ய, தடையாயிருக்கும் எல்லாவற்றையும் வெற்றி பெற்று வாழ்வோமாக.

இயேசு தம்மைத் தந்தார்
நமக்குக் கிருபை ஈந்தார்
அவரைப் பின்பற்றிப் போ
அவரைப் போல வாழப்பார்..

சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்

மார்ச் 29

“சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” மத். 28:20

அப்படியானால் இயேசு இந்த நாளிலும் நம்முடன் இருக்கிறார். இனி சகல நாள்களிலும் இருப்பதுப்போல் இப்போதும் இருக்கிறார். இனிமேலும் இருப்பார். நம்மை பாதுகாக்க, ஆறுதல்படுத்த, நமக்கு பயத்தை நீக்கு, நமக்குள்ளே நம்பிக்கையைப் பிறப்பிக்க அவர் நம்மோடிருக்குpறார். நம்மோடு தம்மை ஒன்றாக்கிக் கொள்ளுகிறார். நமது காரியங்களைத் தமது காரியங்களாக்கிக் கொள்ளுகிறார். அவர் நம்மோடிருப்பேன் என்று வாக்களித்தபடியால் அந்த வாக்கு நம்மை காக்கிற கேடகம். நம் இருதயத்தின் பலன். நமது சந்தோஷத்தின் ஊற்று. நாம் தனிமையாய் ஓர் அடிவைத்தாலும் நம்மைவிட்டு போகமாட்டார். ஒரு நொடிப்பொழுதும் தமது கண்களை நம்மிதிலிருந்து எடுக்கமாட்டார்.

ஓர் அன்பு தாயிக்குத்தன் ஆசை குழந்தையின்மேல் இருக்கும் பாவத்தைவிட நம்மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். இவ்வுலக கட்டுகளைவிட கிருபையின் கட்டுகள் அதிக பலத்ததும் உருக்கமுமானவைகள். இயேசுவானவர் நம்மோடிருக்கிறார். அவர் எப்போதும் நமக்க முன்னே இருக்கிறாரென்று நமது மனிதல் வைக்க வேண்டும். இவ்வுலகத்தில் கடைசி மட்டும் ஏற்றுக்கொள்ள காத்திருக்கிறவர் அவரே. ஆதலால் ஒன்று மட்டும் நமக்கு நிச்சயமாய் கிடைக்கும். அது இயேசுவின் சமூகம். அது தேவதூதர்களுக்குச் சந்தோஷத்தையும், மோட்சத்தில் ஆனந்தத்தையும், நித்திய நித்திய காலமாய் மகிமையையும் கொடுக்கும். ஆகNவு, ‘இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாள்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற இயேசுவின் வாக்குகளை நம்பி இந்த இராத்திரியில் படுக்கச் செல்வோமாக.

என் ஜீவ காலம் எல்லாம்
உமக்கொப்புவிக்கிறேன்
உம்மைத் துதிப்பது இன்றும்
என்னோடிருப்பேன் என்றதால்.

நான் உமது சத்தியத்திலே நடப்பேன்

செப்டம்பர் 20

“நான் உமது சத்தியத்திலே நடப்பேன்” சங். 86:11

தேவனுடைய சத்தியம் மனிதனுடைய விருப்பத்திற்கும் எண்ணங்களுக்கும், வழக்கத்திற்பும் மாறுபட்டே இருக்கும். நமக்கு விருப்பமில்லாததாயிருப்பினும், நன்மையைச் செய்ய அது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பயனுள்ள காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆகையால், இந்த வசனத்தின்படி நாம் தீர்மானம்பண்ணுவது நல்லது. தேவனிடத்திலிருந்து வந்ததாகவே ஏற்றுக்கொள்வது. அதை மனப்பூர்வமாய் நம்புவது ஆகும். கிரியையில்லாத விசுவாசம் செத்தது. ஆகையால் தேவ வசனத்தின்படி செய்வதே சத்தியத்தின்படி நடப்பதாகும்.

ஒரு நல்ல கிறிஸ்தவன் உன் சித்தத்தின்படியே என்னை நடத்தும் என்று ஜெபிக்கிறான். உமது வழிகளில் என்றும் நடப்பேன் என்று தீர்மானிக்கிறான். தேவனுடைய சத்தியத்திலே நடந்தால் நமக்கு ஆனந்தம் கிடைக்கும். அது எப்பொழுதும் நமக்கு நற்செய்தியையும், ஆறுதலையும் கொண்டு வருகிறது. அது நமக்குக் கட்டளையாக மாத்திரமல்ல அன்பாகவும் வாழ்த்தாகவும் இருக்கிறது. நம்மைப் பரிசுத்தராகவும், பாக்கியவான்களாகவும் மாற்றுகிறது. நாம் சத்தியத்தை விசுவாசித்து, அதன்படி நடந்து அதை இருக்கும் வண்ணமாகவே அனுபவமாக்க வேண்டுமானால் அதை நம் இருதயத்தில் நிரப்ப வேண்டும். அதை மெய்யாகவே பகிரங்கமாக எங்கும் பிரசங்கிக்க வேண்டும். சத்தியத்தினால் நம்மைத் தினந்தோறும் அலங்கரிக்க வேண்டும். நாம் அழைக்கப்பட்ட அழைப்பிற்குத் தகுதியுள்ளவர்களாகப் பக்தியோடும், உத்தமத்தோடும் நடக்க வேண்டும். நமது நம்பிக்கையை எங்கும் பிரஸ்தாபிக்க வேண்டும். வாக்குத்தத்தங்களைப்பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றின்படி நடக்க வேண்டும். நாம் வேத வசனத்தின்படி நடந்தால் நமக்குப் பயமில்லை. வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்.

நல்ல போதகரே, நான்
நடக்கும் பாதை காட்டிடும்,
நீரே சத்திய மாதலால்
சத்தியவழியைக் காட்டிடும்.

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை

மார்ச் 04

“இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதில்லை.” 1.சாமு. 15:29

கர்த்தர் பொய் சொல்லாதவரானபடியால் நாம் அவருக்கு உண்மையாக இருந்து அவரை நம்பவேண்டும். இது நமது கடமை. அவருக்கு முன்னால் பொய்யற்றவர்களாக நிற்க வேண்டும். அவருடைய பொய் சொல்லா வாக்குகளெல்லாம் அவர் அன்பிலிருந்து பிறக்கும் கனிகள். அவர் சர்வ வல்லவரானபடியால் தமது வார்த்தைகளை எவ்விதமும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறபடியால் எவ்விதத்தினாலும் அதை நிறைவேற்றுவார். தமது ஜனங்களை ஆற்றித்தேற்ற அவர் வல்லமை உள்ளவர். அவர் தமது வசனத்தின்மூலம், நம்மோடு பேசுகிறார். பாவிகளாகிய நம்மைப் பார்த்து பேசுகிறார். சோதனையிலும், துன்பத்திலுமிருக்கிற உங்களைப் பார்த்து இந்த நாளில் இருக்கிறவிதமாய் பேசுகிறார்.

நம் பயங்களைப் போக்க, நம்முடைய துன்பங்களில் நம்மை மகிழ்ச்சியாக்க, நம்முடைய வருத்தங்களில் நமக்கு ஆறுதல் அளிக்க நம்மைப் பார்த்துப் பேசுகிறார். அவர் உண்மையுள்ள வார்த்தையை நாம் உண்மையாய் நம்புகிறோமா? தேவன் உண்மையையே பேசுகிறார் என்று நினைக்கிறோமா? அவர் நமக்கு உண்மையாய் இருக்கிறதுபோல நாமும் அவருக்கு உண்மையாய் இருக்கிறோமா? அவர் சொல்லைப்பற்றி பிடித்திருக்கிறோமா? எப்போதும் உண்மை தேவனை நோக்குகிறோமா? எப்போதுமே நமது பரமபிதா உண்மை வார்த்தைகளைத்தான் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறோமா? வானமும் பூமியும் ஓழிந்தாலும் என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது என்று இயேசு சொன்னதை உண்மையானது என்று உண்மையாய் நம்புங்கள். அவரை நம்பி நடவுங்கள். அவருடைய வார்த்தையை நோக்குங்கள். அப்படி நோக்கும்போது பின் வருகிற பிரகாரம் சொல்லலாம்.

தேவனே சொன்னதால்
அவர் உண்மையுள்ளவராதலால்
வாக்கை நிறைவேற்றுவார்
எதையும் செய்து முடிப்பார்.

என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?

அக்டோபர் 20

“என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்று உண்டோ?” எரேமி. 32:27

சிருஷ்டிகரைவிட அதிகக் கடினமான காரியங்கள் சிருஷ்டிகளுக்கே உண்டு. சிருஷ்டிகரின் ஞானம் அளவிடமுடியாதது. அவருடைய வல்லமையைக் கணக்கிட முடியாது. அவருடைய அதிகாரத்திற்குட்படாதது ஏதுவுமில்லை. சகலமும் அவருக்குக் கீழானதே. அவர் யாவற்றையும் ஒழுங்காகவே ஏற்படுத்தியுள்ளார். கிரமமாக அவர் யாவற்றையும் நடத்துகிறார். அனைத்து காரியங்களையும் தம்முடைய சொந்த சித்தத்தின்படியே செய்கிறார்.

சில வேளைகளில் நாம் பல சிக்கல்களில் அகப்பட்டுவிடுகிறோம். மனிதர் உதவி செய்ய மறுத்து விடுகிறார்கள். நமது விசுவாசம் குறைகிறது. மனம் சஞ்சலப்படுகிறது. சோர்வடைந்து நாம் பயப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தலையிடுகிறார். நம்மைச் சந்தித்து என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்று உண்டோ? அதை என்னிடத்தில் கொண்டுவா. என்னை முற்றிலும் நம்பி உன்னை முற்றும் அர்ப்பணி. என் சித்தம் செய்யக் காத்திரு. அப்பொழுது நான் உன் காரியத்தைச் செய்து முடிப்பேன். அதை எவராலும் தடுக்க இயலாது என்கிறார்.

அன்பானவர்களே, உங்கள் கேடுகள், உங்கள் சோதனைகள் உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். உங்கள் தேவன் உங்களை விடுவிக்கக் கஷ்டப்படுபவரல்ல. உங்களுக்கு வரும் தீங்கை நீக்கி, உங்கள் துன்பங்களிலிருந்து உங்களை இரட்சிப்பார். உங்களது பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். கொடுக்கப்பட்ட இவ்வசனத்தில் கேட்கப்படும் கேள்வி, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தட்டும். நம்பிக்கையை வளர்க்கட்டும். உங்களுக்குத் தைரியம் தரட்டும். ஜெபிக்க உங்களை ஏவி விடட்டும். உங்கள் பெலத்தையே நோக்குங்கள். பெலவீனத்தை அல்ல. விடுவிக்க வல்லு அவருடைய கிருபையைத் தேடுங்கள்.

என் தேவனால் ஆகாதது
ஒன்றுண்டோ? அவர்தம்
கிருபை எனக்கு
எப்போதும் போதுமன்றோ!

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்

ஜனவரி 20

“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்.” நீதி. 2:6

ஞானத்தைத் தருமுன்னே அது நமக்குத் தேவை என்று, அதன் மேல் வாஞ்சைக்கொண்டு அவருடைய பாதத்தருகில் அமர்ந்து கருத்தாய் கேட்கவேண்டும். நாம் பயபக்தியாய் நடக்கவும், சோதனைகளை வெல்லவும், தேவனுடைய பண்ணையில் செம்மையாய் வேலை செய்யவும் நமக்கு ஞானம் வேண்டும். அவருடையவர்களாகிய நமக்குச் சரீரத்திலும், ஆவியிலும், ஆத்துமாவிலும் தேவனை மகிமைப்படுத்தவும், அவரைச் ஸ்தோத்தரிக்கவும் ஞானம் தேவை. நமக்கு தேவையான ஞானத்தைக் கிரியையினாலல்ல, ஜெபத்தினால் பெற்றுக்கொள்ளலாம். அது நம்மால் உண்டாவதல்ல. தேவனே இதைக் கொடுப்பேனென்று வாக்களித்துள்ளார்.

“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறை உள்ளவனாக இருந்தால் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும், ஒருவரையும் கடிந்துக் கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன். அப்போது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனால் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்.’ தேவன் செய்வார் என்று நாம் விசுவாசித்து அதை அவரிடத்தில் கேட்க வேண்டும். அவர் பொய் சொல்லா உத்தமர். ஆகவே, கொடுப்பார். தேவன் கொடுக்கும் ஞானம் மகா மேன்மையுள்ளது, பயனுடையது. முக்கியமான பிரசித்திப் பெற்றது. பரத்திலிருந்து வரும் ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இரக்கமும் உள்ளதாயும், இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயும் இருக்கிறது.
நீ இரட்சிப்படைய ஞானியாக வேண்டுமா? ஆத்துமாக்களை ஆதாப்படுத்தும் ஞானியாக வேண்டுமா? பொல்லாப்பை வெறுத்து எல்லா நம்மைகளையும் பெற்றுக்கொள்ள ஞானியாக வேண்டுமா? அப்படியானால் தேவனிடத்தில் ஞானத்தைக் கேள். இப்பொழுதே கேள். கருத்தாய் கேள். விசுவாசத்தோடே கேள். அப்பொழுது உனக்குக் கொடுக்கப்படும்.

சாந்தம், தாழ்மை, சுத்தம்
இதோடு சேர்ந்த ஞானம்
எனக்களித்தால் அப்போ
உமக்கு பிரியனாவேனல்லோ?

Popular Posts

My Favorites

உனக்கு விசுவாசம் இருந்தால்

டிசம்பர் 21 „உனக்கு விசுவாசம் இருந்தால்“ ரோமர் 14:22 விசுவாசம் தேவன் கொடுக்கும் வரம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் விசுவாசம் அவர் கொடுத்ததே. நேற்று இல்லாத விசுவாசம் இன்று இருக்கிறது. ஏன் என்றால், சுபாவப்படி எவருக்குமே விசுவாசம்...