பெப்ரவரி

முகப்பு தினதியானம் பெப்ரவரி

இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்

பெப்ரவரி 23

“இவள் மிகவும் அன்புகூர்ந்தாள்.” லூக்கா 7:47

இவள் ஒரு பெரிய பாவி. தன் பாவத்தை உணர்ந்து இரட்சகரைத் தேடினாள். மன்னிப்புக்காக அவரிடம் சென்று இரக்கம் பெற்றான். இயேசுவின் அன்பையும், அவர் காட்டின பாசத்தையும் அவள் உணர்ந்தபடியால், அவர் Nரில் அன்பு பொங்கிற்று. அவள் அவரைச் சாதாரணமாய் Nநிக்கவில்லை. அதிகமாய் நேசித்தாள். அதனால் அவரின் சமுகத்தை உணர்ந்து அவர் வார்த்தைக்குச் செவிகொடுத்து துன்பத்தையும், நிந்தையையும் சகித்தவளானாள். அவளின் அன்பு உள்ளுக்குள்ளேயே அடைக்கப்படவில்லை. அதை வெளிக்காட்டினாள். அதனால்தான் விலையேறப்பெற்ற தைலத்தைக் கொண்டு வந்து ஊற்றி, தன் கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்து, தலை மயிரால் துடைத்து அபிஷேகம்பண்ணினாள்.

இது நமக்கு ஒரு நல்ல முன்மாதிரி. நாமும் பாவிகள்தான். இயேசுவும் நமது பாவங்களை மன்னித்தார். ஆம் இந்த ஸ்திரீயை அவர் எவ்வளவாய் நேசித்தாரோ அவ்வளவாய் நம்மையும் நேசிக்கிறார். அந்தப் பெண் நேசித்ததுப்போல் நாமும் அவரை நேசிக்கிறோமா? இல்லையென்றே சொல்ல வேண்டும். காரணம் என்ன? நாம் நமது பாவங்கள் நிமித்தம் அவ்வளவு உணர்வு அடைவதில்லை. நமது அபாத்திர தன்மையை அவ்வளவாய் பார்க்கிறதில்லை. நமது மோசமான வாழ்க்கையைக் கண்டு நாம் கண்ணீர் விடுவதில்லை. அவர் நம்மை மன்னித்த மன்னிப்பைப் பெரிதாக ஒன்றும் எண்ணவில்லை. இனியாவது நமது சிந்தையை இயேசுவண்டைத் திருப்புவோம். பரிசுத்தாவியானவர் தேவ அன்பை நமது இருதயத்தில் ஊற்றும்படி கேட்போம். அவரோடு ஒன்றாகி அவர் பாதத்தில் அமர்ந்திருப்போம்.

தேவ அன்புக்கீடாய்
பதில் என்ன செய்வோம்
அவர் மன்னிப்புக்கு ஈடாய்
நன்றி சொல்வோம்.

அவர் நம்மேல் இரங்குவார்

பெப்ரவரி 22

“அவர் நம்மேல் இரங்குவார்.” மீகா 7:19

நாம் பாவம் செய்ததால் நம் பேரில் அவருக்குக் கோபம் ஏற்பட்டது. ஆனால் எப்போதுமே அவர் கோபத்தோடிருப்பவரல்ல. நமது பாவம் நம்மை நிர்மூலமாக்குமானால் தேவ இரக்கம் நம்மை பாக்கியவான்களாக்குகிறது. அவர் வார்த்தையின்படி ஆறுதலும் தேறுதலும் உண்டாகும்படி நமக்கு இரங்குவார். அவர் உருக்கம் நிறைந்தவர். அவர் இரக்கத்தில் சம்பூணர். மன்னிக்க ஆயத்தமானவர். இவைகள் தேவனுடைய சொந்த வாக்கியங்கள். நாம் அவைகளை மட்டும் நம்பினோமானால் நம்முடைய பங்களும், திகிலும் பறந்தோடும். நம்முடைய சந்தேகங்களும் மறைந்துப்போம். நாம் சந்தோஷத்தாலும், சமாதானத்தாலும் நிரப்பப்படுவோம்.

நாம் அவரைவிட்டு வீணாய் அலைந்தோம். ஆனாலும் அவர் நம்மேல் இரங்கினார். அலைந்துதிரிந்த ஆட்டைத் திரும்பவும் சேர்த்துக் கொள்கிறார். கெட்ட குமாரனை, ஆடல் பாடலோடு வரவேற்றுக் கொள்கிறார். சாத்தான் என்ன பழி சொன்னாலும் அவர் மனம் துருகவே உருகுவார். உன் பாவங்களும், பயங்களும் வெகுவாய் இருந்தாலும் அவர் மனம் உருகிவிடுகிறார். அவர் வாக்களித்தபடியாலும், அவர் தன்மையின்படியும் இரக்கமுள்ளவராயிருக்கிறார். எத்தனை முறை நமக்கு அப்படி செய்திருக்கிறார். இப்போதும் அவர் மனம் உருக்கத்தால் பொங்குகிறது. நீ பாவத்திற்காக மனம் வருந்துவதைக் கண்டாலோ தப்பிதங்களுக்காக அழுகிறதைப் பார்த்தாலோ அவர் உருகி விடுகிறார். உன் அக்கிரமங்களையெல்லாம் நிராகரித்து உன் பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டு விடுகிறார்.

இயேசு மனதுருகி
காயம் கட்டுவார்
துக்கிப்பவர்களுக்கு
ஆறுதலளிப்பார்.

கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்

பெப்ரவரி 21

“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்.” எபி. 12:6

எல்லா விசுவாசிகளையும் தேவன் நேசிக்கிறார். ஆகையால் எல்லா விசுவாசிகளையும் அவர் தண்டிக்கிறார். தண்டனைதான் அவர் அன்புக்கு அத்தாட்சி. நாம் பி;ளைகளாயிருப்போமானால் தண்டனை நமக்கு அவசியம் வேண்டும். அப்படி அவசியமான தண்டனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிலரை நஷ்டம் வரும்படி வியாதிமூலம் தண்டிக்கிறார். சிலருக்குக் குடும்பப் பிரச்சனைகளினால் தண்டிக்கப்படுகிறார்கள். தேவனுடைய ஒரே பிரம்பால் நாம் தண்டிக்கப்படாவிட்டாலும், ஒரே கரந்தான் நம்மெல்லாரையுமே தண்டிக்கிறது. ஒரே வகையாய் நாம் எல்லாரும் சீரடையாவிட்டாலும் நம்மெல்லாரையும் சீர்ப்படுத்துகிறவர் ஞானமும் அன்பும் கொண்ட ஒரே பிதாதான்.

சிலர் மனதில் வருத்தப்படுகிறார்கள். சிலர் சரீரத்தில் துன்பப்படுகிறார்கள். சிலர் தங்களின் உறவினர்கள்மூலம் தண்டனையடைகிறார்கள். எந்த அடிகளும் அன்பால் விழுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. தண்டனை நமக்கு வருத்தத்தைத்தான் கொடுக்கும், பிதாவும் அப்படியே வருத்தம் அடைவார். அவர் வேண்டுமென்று நம்மை தண்டிக்கிறதில்லை. தமது இஷ்டப்படி நம்மைத் துன்பப்படுத்துகிறதில்லை. சில சமயங்களில் நமது புத்தியீனமும் நமது துன்பங்களுக்கும் காரணமாகிவிடுகிறது. நமது பாவங்கள்கூட பிதாவின் கடிந்துக் கொள்ளுதலை அவசியமாக்குகிறது.

இன்று நமது பிதாவின்கீழ் நம்மைத் தாழ்த்துவோமாக. நம்மை அவர் தண்டிக்கும்போது அவர் நமக்குச் சொந்தம் என்றும் நம்மை நேசிக்கிறாராயென்று நாம் சந்தேகிக்கக்கூடாது. நமக்குத் தண்டனை அவசியமில்லையென்று எண்ணி அவைகளை அசட்டை செய்யாதிருப்போமாக.

தேவ தண்டனை எனக்கு
வருத்தமாகக் கண்டாலும்
அதற்கே கீழடங்குவேன்
தேவ சித்தமே நலம் என்பேன்.

என் ஆலோசனை நிற்கும்

பெப்ரவரி 20

“என் ஆலோசனை நிற்கும்.” ஏசாயா 46:10

மனுஷன் செய்யும் யோசனை சரியற்றதும் புத்தியற்றதுமாய் காணலாம். அவனுக்கிருக்கும் அறிவு குறைவுள்ளது. மனதும் ஒழுங்கற்றது. ஆனால் கர்த்தரின் யோசனையோ, அளவற்ற ஞானமும் சர்வ வல்லமையுள்ளதாயிருக்கும். மனிதர் தங்களின் காரியங்களைத் தகாத நோக்கத்தோடு முடிவு செய்கிறார்கள். ஆகவே அவர்கள் தத்தளித்து கலங்குகின்றனர். தேவத் தீர்மானங்களோ அமர்ந்த, உறுதியுள்ள, நித்திய யோசனையிலிருந்துண்டாகி, நீதி, கிருபை, பரிசுத்தம், உண்மை, அன்பு இவைகளால் நடத்தப்படுகிறது. மனிதனுடைய யோசனை அடிக்கடி விருதாவாய் போய் விடலாம். தேவ யோசனை மட்டும் என்றுமே விருதாவாகாது. மனித யோசனை பிறரைத் தீமைக்கு வழி நடத்தலாம். தேவ யோசனையோ சகலமும் நம்மைக்கே என்றிருக்கிறது. அவரின் யோசனையில் நமக்கு நித்திய நன்மையும் அடங்கியிருக்கிறது. இம்மைக்குரிய சகல சம்பவங்களும் அவருடைய எண்ணத்தில் அடங்கியிருக்கிறது.

ஆதலால் எதற்கும் நாம் கலங்க வேண்டிய அவசியமில்லை. கொடுமை, அநியாயம், போராட்டம் இருக்கலாம். சுழல் காற்றிலும் பூசலிலும் நடத்துபோகிற நமது தேவன், ‘என் யோசனை நிலைநிற்கும்” ‘எனக்குப் பிரியமானதையெல்லாம் செய்வேன்” என்கிறார். அன்பரே, நமது தேவன் எப்போதும் எவ்விடத்திலும் கிரியை செய்கிறார் என்று மறந்து போகாதீர்கள். வானத்திலும், பூமியிலும் அவர் தமது சித்தப்படியே செய்து, நம்மை பார்த்து, நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறியுங்கள் என்கிறார்.

என் குறைவை தேவன் நீக்கி
இறங்கி என்னை இரட்சிப்பார்
தம் ஆலோசனைப்படி நடத்தி
மோட்சக் கரை சேர்ப்பார்.

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

பெப்ரவரி 19

“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்.” மத். 6:34

வீணாய் வருத்தப்பட்டு, மனதைப் புண்ணாக்கிக் கொள்ளும்படி கவலைப்படாதேயுங்கள். நாளை நமக்குரியதில்லையென்று அறிவோமே? இன்றிரவு கர்த்தர் ஒரு வேளை உங்களை எடுத்துக்கொள்ளலாமே! நீங்கள் உயிரோடிருக்கிறதால் இன்றைக்கிருக்கிறவிதமாய் கர்த்தர் உங்கள்மேல் கவனமாய்ப் பட்சமாய் காப்பாராக. அனுதின உணவுப்போல் அனுதின கிருபையும் வேண்டும். நீங்கள் தகப்பனற்றவர்களல்ல: தரவற்றவர்கள் அல்ல. உங்களை கவலைக்குள்ளாக்குகிற காரியங்கள் எதுவானாலும், அது உங்கள் பரமபிதாவுக்கு தெரியும். தேவையானதை அவ்வப்போது உங்களுக்கு தந்து கொண்டேயிருப்பார். தேவ சமாதானம் உங்களை ஆளுகை செய்யட்டும். கர்த்தருடைய வார்த்தையை நம்பியிருங்கள்.

கவலைக்கு இடங்கொடாமல் இருங்கவும், வீண் சிந்தனைகளுக்கு இடங்கொடாமலிருக்கவும் கர்த்தரிடம் காத்திருந்து பொறுமையாய் விசுவாசித்தால் பெற்றுக்கொள்ளவுமே அவர் விரும்புகிறார். இன்றிரவு நீ அமைதியாய் உன் ஆண்டவர் சொன்னதை யோசித்துப்பார். ‘முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்போது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூட கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள். நாளை தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலை;படும். அந்தந்த நாளுக்கு அதினதன் பாடுபோதும்.” காலையில் நீ விழிக்கும்போது உன் தேவன் உன்னோடிருப்பார். ஆறு துன்பங்களில் உன்னை விடுவித்தவர், ஏழு துன்பங்களிலும் உன்னை கைவிடார்.

ஆகவே கவலைப்டாதே.
வீட்டிலும் வெளியிலும்
இரவிலும் பகலிலும்
அவர் கரம் உன்னைப் போஷிக்கும்
அவர் கரம் உன்னை நடத்தும்.

தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்

பெப்ரவரி 18

“தேவ குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.” 1.தெச. 1:10

நம்மை மீட்டுக்கொள்ளவே கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார். நம்மைப்பரிசுத்தமாக்க இயேசு பரிசுத்தாவியை அனுப்பினார். அவரே திரும்ப வந்து நம்மை அழைத்துக்கொண்டு தாம் இருக்கும் இடத்தில் சேர்த்துக்கொள்ளப் போகிறார். இது மகிழ்ச்சிக்குரிய மகிமையான காரியம். புதிய ஏற்பாட்டில் தேவ ஜனங்களுக்கு இதை அடிக்கடி சொல்லியிருக்கிறார். இதுவே நமது நம்பிக்கை. மிக அவசியமான ஒன்றும் மிக முக்கியமானதுமாகையால் இதையே அடிக்கடி தியானிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.

நாம் அவருடைய ஊழியர். நம்மிடம் கணக்கு கேட்க நமது எஜமான் வரப்போகிறார். நாம் அவரின் பிள்ளைகள். நம்மை அவரோடு சேர்த்துக்கொள்ள நமது தகப்பன் திரும்ப வரப்போகிறார். நாம் அவரின் மணவாட்டிகள். நம்மை அவரோடு இணைத்துக்கொள்ளும் மணவாளனாய்த் திரும்பவும் வரப்போகிறார். அவர் திடீரென்று வருவார். எதிர்பாராதபோது வருவார். திருடனைப்போல் வருவார். நாமோ நித்திரை மயக்கம் கொண்டு மற்றவர்களைப்போல் தூங்குகிறர்களாயிராமல் எப்போதும் விழித்திருந்து தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பொழுது விடியும்முன் அவர் வருவார். அவர் நிச்சயம் திட்டமாக சீக்கிரம் வருவார்.

அவர் பரலோகத்திற்குப் போனவிதமாகவே திரும்ப வரும்போது நாம் சந்தோஷப்படுவோமா? ஒருவேளை அவர் வருகை தாமதப்பட்டால் நாம் அவரோடிருக்க சந்தோஷத்தோடே அவரிடம் போவோம். இதற்கு நாம் உடனே ஆயத்தப்படுவோமாக.

துன்பம் துக்கம் பாவம் யாவும்
இரட்சகராலே நீங்கும்
பொறுமையாய் காத்திருப்போம்
அப்போ பெரும் மகிழ்ச்சி அடைவோம்.

என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

பெப்ரவரி 17

“என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது.” சங். 119:25

இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவைகளெல்லாம் ஒன்றுமில்லை. நிலையான ஆத்துமாவுக்கு முன், நிலைய்ய இவைகள் ஒன்றுமில்லை. இது நமக்குத் தெரிந்திருந்தாலும் நாம் உலக நினைவாலே அதிகம் கவரப்படுகிறோம். நமது ஆசைகள் உலகப் பொருள்மீது அதிகம் ஈடுபடுகிறது. இதனால் நமது நல் மனசாட்சியையும் நாம் கெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உலகத்தார் இந்த மண்ணை விரும்பி இதிலேயே திருப்தியாகி விடுகிறார்கள். ஆனால் இந்த மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிற தேவ பிள்டுளைகளுக்கோ இது திருப்தியாயிருக்கக்கூடாது. அதை அருவருத்து வாழ்கிறது மிகவும் நல்லதே.

நாம் மேலானவைகளை நோக்க வேண்டும். செட்சைகளை விரித்து மேலே எழும்ப வேண்டும். இம்மைக்குரிய பொருள்களை அற்பமென்று எண்ணவேண்டும். என் ஆத்துமாவே! நீ ஒன் அசுத்தத்தை விட்டெழும்பு. நீ இருக்கிற இடத்திலிருந்தே தேவனை நோக்கிப் பார். இந்த மண்ணை விட்டெழுந்து உதறி மேலான வஸ்திரங்களைத் தரித்துக்கொள். இதுவே இரட்சிப்பின் நாள். தேவன் உன்னை அழைக்கிறார். அவர் உன்னோடு ஐக்கியம் கொள்ள விரும்புகிறார். இந்த பூமி உனக்கு நிரந்திரமானதல்ல. உன் வீடும் வாசஸ்தலமும் நித்தியம்தான். இந்தப் பூமி கடந்து போய்விட வேண்டிய ஒரு வனாந்தரம். நீ கொஞ்சநாள் தங்கியிருக்கும் இடம். நீ இளைப்பாரும் இடம் மேலே உள்ளது. இவ்விடம் தீட்டுள்ளது.

மரித்து மோட்சம் சேரும் நான்
மண்ணைப் பிடித்திருப்பேனோ?
லோகத்தைவிட்டு என் ஆவி
பரத்தைப் பிடிக்கும் தாவி.

கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்

பெப்ரவரி 16

“கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.” எபேசி. 2:5

நாம் இலவசமாய் இரட்சிக்கப்படுகிறது எவ்வளவு பெரிய தேவ இரக்கம். நமது இரட்சிப்பு துவக்கம் முதல் முடிவுவரை கிருபைதான். உலகம் தோன்றுமுன்னே அது தேவ சித்தமாய் முன் குறிக்கப்பட்டது. நாம் இரட்சிப்புக்கென்றே தெரிந்துக்கொள்ளப்பட்ட்டோம். கிறிஸ்துவின் இரத்தத்தால் தெரிந்துக்கொள்ளப்பட்டோம். தேவன் நம்மை தெரிந்தெடுத்து அவரோடு நித்திய நித்தியமாய் நாம் வாழவே. கர்த்தர் தமது சுய சித்தப்படியே நம்மை இரட்சிப்புக்கு தெரிந்தெடுத்தார். அவர் மாறாதவர். ஆகவே அவர் திட்டமும் மாறாது. தேவ புத்தகத்தில் நம்முடைய பெயர் இருக்கிறது. தேவன் ஆரம்பித்த கிரியைகளில் நமக்கும் பங்கிருக்கிறது. பரிசுத்தவான்களின் சுதந்தரமும் நமக்குண்டு. நாம் உலகத்திலிருந்து தெரிந்துக்கொள்ளப்பட்டோம். இது பெரிய தேவ தயவு.

நாம் மீட்கப்படவே நமக்காக கிரயம் செலுத்தப்பட்டது. நம்மை விடுவிக்கவே வ்லமை புறப்பட்டது. நாம் தேவனோடு பேசுகிறோம். தேவ இராஜய்த்தின் இரகசியங்களை தெரிந்துக்கொள்வதும் எத்தனை தயவு. தேவன் நமக்குக் கொடுக்கும் கிருபை எத்தனை பெரியது. இது வல்லமையும் மேன்மையுமுள்ளது. இப்படி நாம் அழைக்கப்பட்டதினால் புது ஜீவனுக்கும், பரம அழைப்புக்கும், சகல நன்மைகளுக்கும் பங்குள்ளவர்களாகிறோம். தேவ வல்லமையால் நாம் காக்கப்படுகிறோம். இதுவும் பெரிய கிருபை. சத்துருவின் கைகளுக்கும், விசுவாசத்தைவிட்டு வழுவாமல் காக்கப்படுவதும் கிருபையே. இப்படி செய்வதினால் தேவன் நம்மை எல்லாவற்றிலிருந்தும் இரட்சிக்கிறார் என்பது உண்மையாகிறது. நாம் சீக்கிரத்தில் மறுரூபமாவோம். அப்போது மோட்சத்தில் இலவசமாய் நுழைவோம். இரட்சிப்பு இலவசமாய் கிடைப்பதினால் அதை எவரும் பெற்றுக்கொள்ளலாம். துவக்க முதல் முடிவு மட்டும் அதினால் உண்டாகும் மகிமை கர்த்தருடையதாகவே இருக்கும்.

தேவகுமாரன் மரித்ததால்
நமக்கு இரட்சிப்புண்டாயிற்று
பாவிகளை மீட்டதால்
துதிகள் வானம் எட்டியது.

வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி

பெப்ரவரி 15

“வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தாவி.” எபேசி.1:13

பழைய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற பெரிய ஆசர்வாதம் தே குமாரன்தான். புதிய ஏற்பாட்டில் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிறவர் பரிசுத்தாவியானவர். இயேசு கிறிஸ்து செய்து முடித்த கிரியைகளுக்குப் பதிலாக, அவர் நமக்குக் கொடுக்கப்பட்டார். அவரை நோக்கி கேட்கிற எவருக்கும் ஆவியானவரைத் தந்தருளுவார். இந்த ஜீவத் தண்ணீரைக் கொடுப்பவர் இயேசுவானவN. இதைப் பெறுகிற யாவரும் நித்திய ஜீவகாலமாய் ஊறும்ஊற்றைப் பெறுவர். நம்மைத் தேற்றவும், ஆற்றவும், போதிக்கவும், நடத்தவும், உதவி செய்யவும் ஆவியானவேர பொறுப்பெடுக்கிறார். கிறிஸ்துவால் நமக்கு நீதியும் இரட்சிப்பும் கிடைக்கிறதுபோல, பரிசுத்தாவியானவர்மூலம் நமக்கு அறிவும், ஜீவனும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கிறது.

இவர் வாக்குத்தத்தத்தின் ஆவியாயிருக்கிறார். இவர் உதவியின்றி தேவ வாக்குகளை நாம் வாசித்தால் அதன் மகிமையை அறியோம். சொந்தமாக்கிக் கொள்ளும் உணர்வையும் அடையோம். அவர் போதித்தால் தான் வாக்குகள் எல்லாம் புதியவைகளாகவும், அருமையானதாகவும், மேலானதாகவும் தெரியும். எந்தக் கிறிஸ்தவனும் துன்பமென்னும் பள்ளிக்கூடத்தில் தன் சுய அனுபவத்தால், வாக்குத்தத்தமுள்ள ஆவியானவர் தினமும் தனக்கு அவசியத் தேவையெனக் கற்றுக்கொள்ளுகிறான்.

தேவ பிள்ளையே, ஆவியானவரைத் துக்கப்படுத்தாதபடி ஜாக்கிரதையாக இருப்போமாக. அவர் ஏவுதலை ஏற்று, அவர் சித்தம் செய்ய முற்றிலும் இடங்கொடுப்போமாக.

பிதாவே உமது ஆவி தாரும்
அவர் என்னை ஆளட்டும்
உமது வாக்கின்படி செய்யும்
என் தாகத்தைத் தீரும்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

பெப்ரவரி 14

”கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு.” சங். 37:4

கர்த்தர் நம்மில் மகிழுகிறதுபோல, நாம் அவரில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். இதற்கு அவருடைய அன்பைப்பற்றி சரியான எண்ணங்கள் நமது உள்ளத்தில் வரவேண்டும். இயேசுவில் வெளியாகியிருக்கிற அவரின் மகிமையான குண நலன்களைத் தியானிக்க வேண்டும். அவருடைய அன்பும் பூரண இரட்சிப்பும் நமக்கு உண்டென உணரவேண்டும். அவரின் அழகையும் பரலோக சிந்தையும் நம்மில் இடைவிடாமல் இருக்க வேண்டும். அவரின் வாக்குகளை அதிகம் நம்ப வேண்டும்.அவரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும். நமது தகப்பனாகவும், நண்பனாகவும் அவரை நாட வேண்டும். நமது பங்கு நித்திய காலமாய் நமக்கிருக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும்.

எனவே, கீழான காரியங்களின் மேலிருக்கும் நாட்டத்தை நீக்கி, அதைக் கர்த்தர்மேல் வைக்க அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பவர்கள் வெகு சிலரே. அவரைப் பற்றி தியானிப்பது, அவரைப்பற்றி அறிந்துக்கொள்வது அவரைப்பற்றிப்படிப்பது போதுமென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதையெல்லாம் நமக்குக் கொடுக்கும் பொக்கிஷங்களில் நாம் மகிழலாம். நமக்குத் தரும் பாதுகாப்பிற்காகவும் அவரில் மகிழலாம். அவரின் அலங்காரமான பரிசுத்தத்தில் மகிழலாம். அவரின் கிருபைக்காகவே அவரில் அனுதினம் மகிழலாம்.

கர்த்தாவே உம்மில் மகிழுவேன்
உமது அரவணைப்பில் பூரிப்பேன்
நீர் என் நேசர், துன்பத்தில்
உமதண்டை ஓடி வருவேன்.

Popular Posts

My Favorites

உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்

பெப்ரவரி 08 "உம்மை நேசிக்கிறவன் என்பதை நீர் அறிவீர்." யோவான் 21:15 நான் எவ்வளவோ குறைவுள்ளவனாயிருந்தாலும், உம்மை அடிக்கடி துக்கப்படுத்தியும், உம்முடைய அன்புக்கு துரோகஞ்செய்தும் உம் வார்த்தைகளை நம்பாமலும், இவ்வுலகப்பொருளை அதிகமாய் பற்றிப்பிடித்தும், கொடியதும் அக்கிரமுமான...